கலையின் கனவொன்று…. நினைவுப் பகிர்வுகள்

வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்: தமிழீழத்தின் இசைப் போராளி வர்ணராமேஸ்வரன், தமிழர் இதயங்களில் சிரஞ்சீவியாக நிலைத்துவிட்டார்.  “சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது…” என்ற  அந்தக் கானக் குரலை இன்றும் திசைகள் எங்கும்   சுமந்துகொண்டிருக்கிறது காற்று.

இந்த இசையோனின் சிறப்புக் குறித்து இசையமைப்பாளர் முரளி அவர்களின்  நினைவுப் பதிவுகளில்,“அளவெட்டி; யாழ்ப்பாண இசைப் பாரம்பரியத்தின் ஊற்று ஊர்களில் முதன்மையானது. ராமேஸ்வரன் இங்குதான் தோற்றம் பெற்றார். குரலிசைக் கலைஞர் அமரர் வர்ணகுலசிங்கம் அவர்களின் புதல்வன். ஊரின் வாசமும் இசைப் பாரம்பரியத்தின் வழிவந்த தந்தையின் பார்வையும் இவரை இசையின் பிடியிலிருந்து விலக விடவில்லை. இசை இவரை ஆகர்சித்துக் கொண்டது. இவர்  மகாஜனக் கல்லூரி மாணவன், பல்கலைக்கழக இசைத்துறைப் பட்டதாரி, இசைத்துறை விரிவுரையாளர், குரலிசைப் படைப்பாளி, ஹார்மோனியக் கலைஞர், மிருதங்கக் கலைஞர் என இவரது இசைப்பரப்பு விரிந்தது.

ஈழத்து இசை மரபிலே இரண்டாம் தலைமுறைகளிலே குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு படைப்பாளி என்பதில் ஐயமில்லை. குரலிசை கச்சேரிகள், பரத நிகழ்வுகள், வாத்யபிருந்தாக்கள், நாடகங்கள், மெல்லிசை என இவரது பணிகள்  விரிவுபட்டது.

ஈழத்து இசை பற்றி இவரது எண்ணம், செயல் முதன்மையானது. இங்குள்ள கலைகளின், மக்களின் எண்ணங்களை  உணர்ந்ததன் விளைவாக புதிய தலைமுறையின் மீது இவரது அக்கறைப் பார்வை தோற்றம் கண்டது. இதனைச் செயற்படுத்தக் கூடிய வழிகளை ஆராய்ந்து, அதனைச் செயற்படுத்தும் முன்னெடுப்புகளில் ஈடுபடுவதற்காய்  நீண்ட இடைவெளியின் பின் தன் தாய்நிலம் நோக்கிப் பயணித்தார்.

கலைத்துறைசார் மாணவர்க்கான பயிலகங்களை உருவாக்குதல், அவர்களை படைப்பாளிகளாக்குதல் எனும் நோக்கில் இவரது அணுகுமுறைகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அடித்தளங்களை இடவும்  ஆரம்பித்தார்.

ஈழ விடுதலையில் இவரின், இவரது பின்புலங்களின் பணி குறிப்பிடக்கூடியதே. ஈரோஸ் அமைப்பு, மாணவர் அமைப்பு, கலை பண்பாட்டுக் கழகம், நிதர்சனம், புலிகளின் குரல் மற்றும் மற்றும் பல விடுதலைக்கான செயற்பாடுகளிலும் இணைந்து பயணித்தார்.

குறிப்பாக ஈழ விடுதலை நோக்கிலமைந்த நாட்டிய நாடகங்கள், ‘மொழியாகி எங்கள் மூச்சாகி…’, ‘தாயகமண்ணின் காற்றே…’, ‘நல்லை முருகன் பாடல்கள்…’, என தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவாக ‘குருதி வடிந்த பொழுதுகளில்…’ வரை இவரது விடுதலைக் கலைப்பயணம்  தொடர்ந்திருக்கிறது.

“தான் வாழும் சமூகத்தைப் புரிந்தவன் அங்கு கலைஞனாகிறான். அந்த புரிதலினால் தன் சமூகத்துக்குத் தன் எண்ணப் பிரதிபலிப்புக்களை  கூறவிளைகையில் அவன் படைப்பாளியாகிறான்” என குறிப்பிட்டுள்ளார்.

வர்ணராமேஸ்வரனின் இழப்பை தாங்க முடியவில்லை என்று கூறும் ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர்  கண்ணன் அவர்கள்,

 “வர்ணராமேஸ்வரனின் தந்தையார் வர்ண குலசிங்கம் மாஸ்டர். அவருடைய குடும்பம் என்னுடன் நன்கு பழகியவர்கள்.

அப்போது வர்ணராமேஸ்வரன் சிறிய பையனாகப் படித்துக் கொண்டிருந்தார்.

இவருடைய இசைக் கல்வி தந்தையாரிடம் இருந்து தொடங்கி மேற் கல்வியை பல்கலைக்கழகத்தில் படித்து கலைப்பட்டதாரி ஆனார்.

நல்லதொரு பாடகராக கர்நாடக இசையில் புகழ் பெற்றார். பின்னர்  பல கலைநிகழ்ச்சிகளில் நானும் இருவரும் கலந்துகொண்டோம். அப்போதெல்லாம் “அண்ணை” “அண்ணை” என்று என்னுடன் பழகியதை என்னால் மறக்கவே முடியாது.

அவரின் கச்சேரியில் நான் பக்கவாத்தியம் வாசிப்பது, எனது முயற்சிகளில் நடக்கும் நாட்டிய நாடகம், நாடகம் போன்றவற்றில் பாடகராகவும், வாத்தியங்களை வாசிப்பதிலும் உதவுவார்.  அவரிடம் ஒரு நல்ல இசை ஞானத்தை நான் பார்த்தேன். இளகிய   மனத்துடன் உதவி செய்பவராகவும், எல்லோரிடத்திலும் அன்பாகவும் இருப்பார்.

கலைஞர்களுடன் பாகுபாடு இன்றி உறவாடுவார். இவர் எனது இசையில் தாய் மண்ணுக்கான பல பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய துாய சிந்தனைகளை மறக்க முடியாது.

இறுதியாக ஒரு சந்திப்பு பிரான்சில், எனது இசையில் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்து சிறப்பித்தார்.

வர்ணராமேஸ்வரன் இப்போது இல்லை.  பிரிந்துவிட்ட இந்த பெரும் கலைஞனின் ஆத்மா சாந்தியடையட்டும்” என கலங்குகின்றார்.

”நீங்கள் உங்கள் இசை மூலம், இலக்கியம் மூலம், கலைகள் மூலம் விடுதலைக்குப் போராடுங்கள். துப்பாக்கி தூக்கித்தான்  சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்று இல்லை” எனத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அனைவருக்கும் கூறியுள்ளார்.

வர்ண ராமேஸ்வரா !,   அவ்வாறே உன் இசையை வைத்து ஈழ விடுதலைக்காக நீ போராடினாய். 2009ஆம் ஆண்டிற்குப் பின்பும் தமிழீழ விடுதலைக்காக உலகெங்கும் உன் இசையை சுமந்து சென்று போராடிக்கொண்டிருந்தாய். என்றும் உன் இசை எங்களை வழி நடத்தும்” என தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.

பள்ளித்தோழன் வர்ணராமேஸ்வரனின் நினைவுகள் குறித்து, மிருதங்க வித்துவான் கண்ணதாஸன் அவர்கள் கூறுகையில், “உண்மையில் ஒரு கலைஞன் எவ்வாறு இருக்க வேண்டும், தானும் வளர்ந்து ஏனையவர்களையும் வளர்த்துச் செல்ல வேண்டும். புதியவர்களை உருவாக்க வேண்டும் என்ற கலைப் பண்புகளைக் கொண்டவன் என் நண்பன்”  என்கின்றார்.

இறுதியாகத் தாயகம் வந்த ராம், யாழ்ப்பாணத்தில் வறுமையால் எவரும் இசையை கற்க  முடியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கூறியதாக தனது நினைவுகளைப் பதிவு செய்யும் வயலின் வித்துவான் கோபிதாஸ் அவர்கள், “யாழ்ப்பாணத்தில் இசை நிறுவனம் ஒன்றை நிறுவி, வறுமையில் உள்ள   மாணவர்களுக்கு இசையைக் கற்பித்து, அவர்களைப் பெரும் கலைஞர்களாக்க வேண்டும் என்று பல எதிர்காலத் திட்டங்களை என்னிடம் கூறினான். ஆனால் இன்று அவன் என் கண்முன் இல்லை. ஆனால் அவனின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம்” என்றார்.

உண்மையில் ஒரு கலைஞன் எவ்வாறு இருக்க வேண்டும், தானும் வளர்ந்து ஏனையவர்களையும் வளர்த்துச் செல்ல வேண்டும். புதியவர்களை உருவாக்க வேண்டும் என்ற கலைப் பண்புகளைக் கொண்டவன்

அவன் இழப்பால் நாம் வறுமை அடைந்திருக்கின்றோம்  எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர்-தாசீசியஸ், “அகிலம் எங்கும் பரவி வாழும் உலகத்தமிழ் உறவுகளே, உங்களைப் போலவே நானும் கனத்த இதயத்துடன் வர்ணராமேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஆண்டாண்டு காலமாக நினைவு கூரப்படும் மாவீரர் நாளில் அந்த மண்ணிலும், களத்திலும், தமிழ் நாட்டுத் தளத்திலும் கனத்த இதயத்துடன் விம்மிக் கொண்டிருக்கும் நம்மவரை  ஒன்றிணைக்கும் துயர கீதம் ஒன்று காற்றைக் கிழிக்கும். நம் நெஞ்சங்களைக் கலங்க வைக்கும். தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்  பேழைகளின் முன் மண்டியிட்டு, மானசீகமாக எம்மை கண்ணீர் விட வைக்கும். அந்தப் பாடலை தனது ஒப்பற்ற சிரஞ்சீவி குரலால் ஆசிர்வதித்து வந்த நம் மண்ணின் பாடகன்   வர்ணராமேஸ்வரன் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும், அடுத்து வரும் எத்தனையோ தசாப்தங்களுக்கு நம் இதயங்களில் வாழ்வார்.

அதே வேளை மண்ணில் முளைவிட்ட பல தாயகப் பாடல்களுக்கு தன் இசை உயிர் ஊட்டிய அவரின் குரல் இசை பிரசாதத்தை தொடர்ந்த பெறும் பாக்கியம் நமக்கு இருப்பதற்காக நன்றி கூறுவோம்.

நம் மண்ணின் வனப்பு, அதில் உள்ள வளங்கள், அதன் ஏற்றம் ஆகியவை தொடர்பாக வெவ்வேறு மனிதநேயக் கலைஞர்களால் புனையப்பட்ட எத்தனையோ பாடல்களுக்கு இசை உயிர் ஊட்டியவன் வர்ணராமேஸ்வரன்.

புலம்பெயர்ந்த மக்களின் நேசப்பார்வை நம் மண்மீது படிய வேண்டும் என்பதிலும் மண்ணின் மக்களை வாழ்க்கையின் கல்வி,கலை, பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு வளர்த்திச் செல்வதில் புலத்து மக்கள் ஈடுபட வேண்டும் என்பதை துாண்டுவதிலும் வர்ணராமேஸ்வரனின் முனைப்பான பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது.

தனது தாய் மண்ணுக்கு அவன் புரிந்த இறுதிப் பயணம் கூட, தாய் மண் நேயத்திலும் தாய் மண் வளர்ச்சியையுமே இலக்காக கொண்டிருந்தன என்பதை பல ஊடகங்கள் எடுத்து ஓதிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய வளர்ச்சிப்படி வழிகாட்டிக் கோலத்தை அவன் தரிக்க முற்பட்டுக் கொண்டிருந்த தருணத்திலேயே அவன் உயிர் பறிக்கப்பட்டு இருக்கின்றது” என்றார்.

ஒப்பற்ற இசைப் பாடகன் வர்ணராமேஸ்வரனின் உயிர்தான் பிரிந்து விட்டது. ஆனால் ஈழத் தமிழ் உள்ளங்களில் அவரின் எண்ணங்களும், விடுதலை வேட்கையும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad கலையின் கனவொன்று…. நினைவுப் பகிர்வுகள்