இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பை நவீனமயப்படுத்த ரஷ்ய உதவி

இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பை நவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்துவது குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என ரஷ்ய குடியரசின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ தலைமையிலான தூதுக்குழுவினர், திங்கட்கிழமை (04) கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த பின்னரே இந்த விஜயம் இடம்பெற்றது.

தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்துப் பிரிவு ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட ரஷ்யக் குழுவினர், அங்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்துக் கேட்டறிந்தனர். வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல்களிலும் அக்குழுவினர் ஈடுபட்டனர்.

இலங்கையின் இலவச சுகாதாரச் சேவை மிகவும் சிறப்பானது எனப் பாராட்டிய அமைச்சர் மிஹைல் முராஷ்கோ, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் அறிவுப் பகிர்வையும் இத்தகைய விஜயங்கள் மேலும் பலப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

அரச வைத்தியசாலை கட்டமைப்பை நவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய குடியரசு விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சந்திப்பின் நினைவாக இரு தரப்புக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.