அவுஸ்திரேலிய வீசாவுக்கான இலங்கை மாணவர்களின் விண்ணப்பங்கள் 38% நிராகரிப்பு!

உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களின் வீசா விண்ணப்பங்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடியேற்றக் கொள்கைகளை அண்மையில் கடுமையாக்கியதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத் துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களில் 38 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியா தனது வீசா நடைமுறைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த சர்வதேச மாணவர் வீசா நிராகரிப்பு விகிதம் பெப்ரவரி மாதத்தில் 32.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த மாதாந்திர நிராகரிப்பு விகிதமாகும்.

வீசா நிராகரிப்பில் தெற்காசிய நாடுகள் முன்னிலையில் உள்ளன:

நேபாளம்: 65% (மிக அதிகம்)

பங்களாதேஷ்: 51%

இந்தியா: 40%

இலங்கை: 38%

பூட்டான்: 36%

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் உள்ள குளறுபடிகளே இந்த அதிரடி நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக போலியான கல்விச் சான்றிதழ்கள், நம்பகத்தன்மையற்ற வங்கி மற்றும் நிதி ஆவணங்கள், தவறான பணி அனுபவச் சான்றுகள்,  படிப்பை முடித்த பின்னர் தாய்நாடு திரும்புவதற்கான போதிய உத்தரவாதம் இல்லாமை போன்றனவும் காரணங்களாக உள்ளன.
இலங்கை மாணவர்களின் உயர்கல்விக்கான முக்கிய நாடாக அவுஸ்திரேலியா விளங்கி வருகிறது. தற்போதைய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான ஆவணச் சரிபார்ப்பு முறைகளால் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களின் வெளிநாட்டு உயர் கல்விக்கனவு கேள்விக்குறியாகியுள்ளதுடன், பெரும் அதிர்ச்சி நிலையும் உருவாகியுள்ளது.