இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் – 2026-2030′ இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தேசிய முன்னுரிமையாக இத்திட்டத்தை தயாரிப்பதற்கு 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் முன்மொழியப்பட்டது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால், அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் 36 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி செயல்முறையை வழிநடத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தேவையான விரிவான உத்தியோகபூர்வ கட்டமைப்பை இந்த ஐந்தாண்டு திட்டம் வழங்குகின்றது.