‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ | பி.மாணிக்கவாசகம்

எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்

பி.மாணிக்கவாசகம்

எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்

பொருளாதாரப் பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை அரசாங்கம் ஊக்குவித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, அரச ஊழியர்களையும் விவசாய உற்பத்தியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி இருக்கின்றது.

அத்துடன் தரிசுக் காணிகளையும் விளை நிலங்களாக மாற்றவேண்டும், விவசாய முயற்சிகளில் பலரும் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளையும் விளைநிலங்களையும் உரியவர்களிடம் திருப்பிக் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

யுத்த காலத்தில் உயிர்ப் பாதுகாப்புக்காக தமிழ் மக்கள் தமது காணிகள், வீடுகளைக் கைவிட்டு பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்களின் காணிகளையும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கிராமங்களையும்கூட இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடன் போரிடுவதற்காகக் கைப்பற்றி நிலை கொண்டிருந்தனர்.

ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் படையினர் கைப்பற்றிய பிரதேசங்களை சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாக இருந்த மக்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்யவும் அரசு முன்வரவில்லை.

இதனால் இடப் பெயர்வு வாழ்க்கையில் அடிப்படை வசதிகளின்றியும், முறையான வாழ்வாதார வசதிகள் உதவிகளின்றியும் கஷ்டமடைந்திருந்த மக்கள் படையினர் மீதும் அரசு மீதும் வெறுப்படைந்திருந்தனர். தங்களுடைய காணிகளையும் கிராமங்களையும் கையளித்துவிட்டு அவற்றில் இருந்து படையினர் வெளியேறிச் செல்ல வேண்டும் என கோரினார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுடைய கோரிக்கையை உதாசீனம் செய்த அரசுக்கும் படையினருக்கும் எதிராக மக்கள் போராடினார்கள். பல்வேறு வடிவங்களில் இடம்பெற்ற அந்தப் போராட்டங்களையும் அரசு கவனத்திற் கொள்ளவில்லை. இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள் குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய மறு வாழ்க்கைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சர்வதேச அளவில் உரிமைக் குரல் எழுப்பப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட அளவு காணிகளை இராணுவத்தினர் மீள் குடியேற்றத்திற்காக உரிமையாளர்களிடம் கையளித்தார்கள்.

ஆனால் படையினர் ஆக்கிரமித்திருந்த காணிகளின் நில மீளளிப்புச் செயற்பாடுகள் முழுமையாகவும் முறையாகவும் அரசினால் முன்னெடுக்கப்படவில்லை. வடமாகாணத்தில் பல இடங்களில், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் இன்னும் மீளவும் குடியேற முடியாத நிலைமை நிலவுகின்றது. இதனால் “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்“ என்ற உரிமைக் குரல்  இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

விவசாய விருத்திக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை

இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து நாட்டை ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு உயர்த்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடி பூதாகரமாகத் தலையெடுத்தது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. டொலர்களின் கையிருப்பு கரைந்தது.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அவல நிலைமைக்கு நாடு ஆளாகியது. நாடு உணவுப் பஞ்ச நிலைமையை நோக்கி நகர்ந்த பின்னரே விவசாய உற்பத்தியில் மக்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

விவசாய முயற்சிகளில் அரச ஊழியர்களையும் ஈடுபடச் செய்வதற்காக அவர்களின் வேலை நாட்களை வாரத்தில் நான்கு நாட்களாக அரசு குறைத்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் விவசாய முயற்சிகளில் அரச ஊழியர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்காக மேற்பார்வை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராணுவமய ஆடசிப் போக்கினாலும் எதேச்சதிகார நடைமுறைகளினாலும் நாட்டின் விவசாயத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. விவசாயிகளுக்கு அவசியமான இரசாயன உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் இறக்குமதியைத் தடைசெய்து சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு இராணுவ வழிமுறையில் ஜனாதிபதி உத்தரவிட்டார். அதனால் நாட்டின் நெல் உற்பத்தி 50 வீதம் வீழ்ச்சி அடைந்தது. நிதிப் பற்றாக்குறைக்கு மத்தியில் அன்றாட உணவுத் தேவைக்காக டொலர்களை செலவழித்து அரசியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியது.

ஜனாதிபதியின் இந்த முன்யோசனையற்ற நடவடிக்கையைப் பலரும் வன்மையாகக் கண்டித்தனர். அது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து பகிரங்கமாக அதனை ஏற்றுக்கொண்டு, அதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்.
பொதுமக்கள் அரச ஊழியர்கள் மட்டுமன்றி முப்படையினரும் விவசாய உற்பத்தி முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. விவசாய உற்பத்தி என்பது சாதாரண பணியல்ல. அது ஒரு துறை சார்ந்த முயற்சி. விவசாயத்தையே தமது பரம்பரைத் தொழிலாகக் கொண்டுள்ள விவசாயிகளுக்கே அதன் நெளிவு சுழிவுகள் தெரியும். அந்த வகையில் உள்ளுர் உற்பத்தியைப் பயனுள்ளதாக முன்னெடுக்கவும் முடியும்.
அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக விவசாயத்துறையில் உள்ளீடுகளுக்கான பெரும் பற்றாக்குறை நிலவுகின்ற ஒரு சூழலில் துறை சார்ந்த அனுபவம் மிக்க விவசாயிகளினாலேயே இத்தகைய நுண்ணறிவு மிக்கச் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். மக்களுக்குத் தேவையான பிரதான உணவாகிய அரிசியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும்.

‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’

விவசாயத் தேவைக்குரிய விதை நெல், பசளை, பீடைகொல்லிகள், களை கொல்லிகள் உள்ளிட்ட உள்ளீடுகள் – மூலப்பொருட்கள் கைவசம் இல்லாத நிலையில் சாமான்யர்களையும் அரச ஊழியர்கள் மற்றும் படையினரையும் கொண்டு விவசாயத்தைப் பயனுள்ள வகையில் ஊக்குவிப்பது நடைமுறைச் சாத்தியமற்ற நடவடிக்கையாகவே அமையும். அதிலும் அரச ஊழியர்களை ஒரு நாள் விடுமுறையில் விவசாயச் செய்கையில் ஈடுபடுத்துவது என்பது பயன் தரும் நடவடிக்கையாக அமையுமா என்பதும் கேள்விக்குரியது.

“உடையவன் இல்லையேல் ஒரு முழம் கட்டை” என்று ஒரு வசனம் கூறுவார்கள். அதாவது எந்த ஒரு காரியத்திலும் குறிப்பாக விவசாயத்தில் உரிமையாளன் கண்ணும் கருத்துமாகத் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்திச் செயற்பட்டால் மட்டுமே உரிய விளைச்சலைப் பெற முடியும. எதிர்பார்க்கின்ற பலன்களைப் பெற முடியும் என்பது அந்த வசனத்தின் உட்கிடக்கை. இந்த நிலையில் நாட்டின் பொன்விளையும் காணிகளில் விவசாயத்தில் முன்னோடிகளான மக்களை இயல்பாகவும் சுதந்திரமாகவும் உற்பத்தியில் ஈடுபடச் செய்ய வேண்டியது அவசியம்.

வடமாகாணத்தின் நெற்களஞ்சியமாகவும் பொன்விளையும் பூமியாகவும் கருதப்படுகின்ற மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் படையினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை முதலில் விடுவிக்க வேண்டியது அவசியம்.

அந்தக் காணிகள் மற்றும் கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்த காலத்துக்கு முன்னர் வெளியேறி அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீள்குடியேறச் செய்தாலே உள்ளுர் உற்பத்தியில் கணிசமான முன்னேற்றத்தைக் காண முடியும். இத்தகைய ஒரு நிலையில்தான் முப்படையினரும் நிலைகொண்டுள்ள வடபகுதி காணிகளை அவற்றின் உரிமையாளர்களான மக்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து இன்னும் இடப்பெயர் வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கின்ற யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்குப் பிரதேச மக்களின் சார்பில் வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

வரலாற்று ரீதியாக வாழ்வாங்கு வாழ்ந்து வந்த சொந்தக் காணிகள், சொந்தக் கிராமங்களில் இருந்து போர்ச் சூழல் உயிரச்சுறுத்தலின் மூலம் திடீரென வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி 10 ஆயிரம் குடும்பங்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டன. பலாலி மயிலிட்டி ஆகிய பிரதேசங்களும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களுமாக 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் இவ்வாறு படையினரால் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை யுத்த மோதல்கள் எதுவும் இடம்பெறாத நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் இருந்து பலாலி விமானத் தளத்தையும் படைத் தளத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

சாபவிமோசனம்

அந்தக் காணிகளில் ஒரு பகுதியாகிய தெல்லிப்பழை, மல்லாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து படையினர் வெளியேறியதையடுத்து, அந்தப் பிரதேசத்து மக்கள் அங்கு மீள்குடியமர்ந்துள்ளார்கள். ஆயினும் இன்னும் 3500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளிட்ட குடிமனைகளும் மீன்பிடி பிரதேசமும் விடுவிக்கப் படவில்லை. இதனால் 3 ஆயிரம் குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

‘நாட்டில் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. வலி. வடக்கில் வளம்கொழிக்கும் விவசாய பூமிகளை ஆக்கிரமித்த படையினர் இன்னமும் அவற்றைத் தம் வசம் வைத்துள்ளனர். அந்தக் காணிகளுக்குச் சொந்தக்காரரான எமது மக்கள் அழுது அழுது ஏங்கிய கண்ணீரும்  அவர்களின் சாபங்களுமே நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம்.

இப்போதாவது அவர்களின் காணிகளை விடுவித்து சாபவிமோசனம் அடையுமாறு கோருகின்றோம்’ என்று வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் வலிகாமம் வடக்குப் பிரதேச இடப்பெயர்வின் 32 ஆண்டு அவல நிலைமை தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘எங்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படைத்தரப்பு தாங்கள் விவசாயம் செய்கின்றார்கள். நாங்கள் பட்டினியால் சாக அவர்கள் எங்கள் நிலங்களில் அறுவடை செய்து தங்கள் வயிற்றை வளர்க்கின்றார்கள்’ என குணபாலசிங்கம் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், ‘தென்பகுதியில் கடந்த மே 9ஆம் திகதி களேபரத்தில் அரசியல்வாதிகள் பலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்கள் சொத்துக்களை இழந்த ஒரு மாதத்துக்குள்ளேயே இழப்பீடு தருமாறு ஓலமிடுகின்றார்கள். ஆனால் எங்கள் சொத்துக்களை இடித்து தரைமட்டமாக்கி வாழ்க்கையை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்களே அவர்கள்தான். எங்களுக்கு இழப்பீடும் இல்லை மிகுதிக் காணி விடுவிப்பும் இல்லை. “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பது உண்மைதான். நாங்கள் அகதிகளாக அல்லல்படுகின்றோம்.

அவஸ்தைப் படுகின்றோம். தினம் தினம் கண்ணீர் விடுகின்றோம். எங்களின் கண்ணீரும், சாபமும் அவர்களைச் சும்மாவிடாது’ என்று இடம்பெயர்ந்த மக்களின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் உணர்ச்சிகரமான குரலில் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ள நாட்டின் சவால் மிகுந்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் இந்த இடம்பெய்ந்த மக்களின் கோரிக்கைக்கு இப்போதாவது உரிய பதிலளிக்குமா? உரிய வகையில் செயற்படுமா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tamil News