புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச்செயற்பட்டு தீர்வை நோக்கிய பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் | ஞா.சிறிநேசன்

புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்

புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்

புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச் செயற்பட்டு புலத்திலும், புலத்திற்கு வெளியிலும் சிதறியுள்ள தமிழ்கட்சிகளையும் தமிழ் அமைப்புகளையும் தீர்வை நோக்கிய கொள்கைதளத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலக்கு  ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

செவ்வியின் முழு விபரம்:-

கேள்வி:
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவ்வாறு இருக்கின்றது?

பதில்:
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் யுத்தத்தால் பல இழப்பகளைச் சந்தித்து அதற்கான நீதி இழப்பீடுகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை பொருளாதார நெருக்கடி என்பது இரட்டிப்பாகத் தாக்கியுள்ளது. ஜனாதிபதியின் வரிக்கொள்கை, விவசாயக்கொள்கை போன்ற பொருளாதாரக் கொள்கையாலும் குறிப்பாக இன ஒதுக்கல் கொள்கையாலும் தமிழ்மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக வருமானம், தொழில் வாய்ப்புகளற்ற நிலையில் தமிழ்த் தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அங்கவீனர்கள், அநாதைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மத்தியதர வர்ககம் கூட வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேள்வி:
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையினை தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்துகின்றது என்று நினைக்கின்றீர்களா? அவ்வாறு இல்லையென்றால் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்கள்?

பதில்:
தற்போதுள்ள அரசியல் சூழலைத் தமிழ்த்தரப்பு பயன்படுத்திய அளவு போதாது. முதலில் தமிழ்த் தேசியப்பரப்பிலுள்ள சகல கட்சிகளும் அக்கறையுள்ள தமிழ்ப் புத்திஜீவிகள் குழுவொன்றினால் ஒற்றுமையாக்கப்பட வேண்டும். இரண்டாவதாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்கின்ற பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். மூன்றாவதாக புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களின் அறிவுபூர்வமான தீர்வுத்திட்டத்தினைப் பெறவேண்டும். நான்காவதாக புலத்தமிழ் தரப்பினர் புலத்திற்கு அப்பாலுள்ள தமிழ் உறவுகளுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திய பின்னர் பொதுவான தீர்வுத் திட்டத்தினை வரைந்து கொள்ளவேண்டும். அந்தத்தீர்வில் தமிழர்களின் சுயநிருணயம், தமிழ்த்தேசியம், பாரம்பரியமான தாயகம் போன்றவை அவசியமானவையாக இருக்க வேண்டும். இப்படியான பொதுவான தீர்வுத் திட்டத்தினை புலத்திலுள்ள புலத்திற்கு வெளியிலுள்ள தமிழர்கள் ஏகமனதாக்கிக் கொள்ள வேண்டும். ஐந்தாவதாக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுடன் பேசி மூன்றாவது மத்தயஸ்தத்துடன் இலங்கை அரசை அணுகவேண்டும். புலம் பெயர் தமிழர்களிடமுள்ள அரசியல் பொருளாதார சர்வதேச ஆளுமைகள் பலத்தினைப் பேரம்பேசும் சகதிகளாக்கிக் கொள்ள வேண்டும்

கேள்வி:
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:
விமரசனங்கள் என்னும்போது அதில் சாதகங்கள் பாதகங்கள் என்று இரு பக்கங்கள் உள்ளன.சாதகமான பக்கங்களை மேலும் பலப்படுத்திக் கொண்டு, பாதகமான பக்கங்களை ஆராய்ந்து உண்மைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டு பயணிக்க வேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும். எதிர்த் தரப்பிடம் சோரம் போகாமல் 1949 இல் இருந்து இன்றுவரை தமிழர்களின் உரிமை என்ற பாதையில் பயணிக்கும் கட்சி இதுவாகும். எமது கட்சியானது தமிழரசுக் கட்சியாய், தமிழர் விடுதலைக் கூட்டணியாய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாய் காலத்திற்கேற்ப பிற கட்சிகளையும் அரவணைத்து அவற்றைத் திருத்தமான பாதைகளில் கொண்டு செல்கின்றது. விமர்சனங்களைத் தாங்கி நடைபோடுவதில் இக்கட்சி வெற்றி கண்டு 73 வருடங்களாய் நமிழர்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்றுள்ளது. அவ்வப்போது சதிகள் சூழ்ச்சிகளால் சிறு சறுக்கல்களையும் இக்கட்சி கண்டுள்ளது. சில தன்முனைப்பர்களின் கருத்துகளும் கட்சியைப் பாதித்துள்ளது.

கேள்வி:
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாய சூழ்நிலையாக இன்றைய சூழ்நிலையை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அவ்வாறான சூழ்நிலையினை ஏற்படுத்த ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிகளை முன்னெடுக்கவில்லை?

பதில்:
ஆம், ஏற்றுக்கொள்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்கள் நலன்கருதி தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டேயாக வேண்டும். அதற்கான முன்னெடுப்பை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. கொவிட் நோய்த்தொற்று தடங்கல்களை ஏற்படுத்தினாலும் அத்தடைகள் இப்போது கணிசமானளவு விலகியுள்ளது. எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அந்த வராற்றுக் கடமையினை இனிச்செய்யும் என எதிர்பார்க்கின்றேன். இதில் தனிப்பட்டவரகளின் தன்முனைப்புக்களை விட தமிழ்மக்கள் நலன்கள் முக்கியமானதாகும்.

கேள்வி:
அண்மைக்காலமாக கிழக்கு மீதான சீனாவின் பார்வையினை ஏற்பட்டுள்ளதாக கருதமுடிகின்றதா?கிழக்கினால் சீனாவுக்கு என்ன இலாபம் உள்ளது?

பதில்:
சீனாவின் பார்வை இலங்கையின் கிழக்குப்பக்கமாக்கத் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் மேற்கு தெற்குகளில் காலூன்றிய சீனா வடக்கு கிழக்குகளில் காலூன்றினால்தான் இந்துமாகடலின் ஊடாக இந்தியாவை நெருங்க முடியும். இந்தியாவைத் தனது நெருக்கமான பார்வைக்குள் வைத்திருப்பதற்கும் சுற்றி வளைப்பதற்கும் வடக்கு கிழக்குக் கடற்பரப்பு சீனாவுக்கு அவசியமாகவுள்ளது. அதாவது இந்தியா மீதான முத்து மாலை வியூகத்தை இறுக்குவதற்கு கிழக்கில் சீனாவின் பார்வை குவிகின்றது. இந்தியா வடக்கு கிழக்கில் தமிழரகளுக்கு உருப்படியான தீர்வுக்கு வழிவகை செய்யாதுவிட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகிவிடும். இதனை இந்தியா புரிந்தால் இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்க்கும் நன்மையளிக்கும்.

கேள்வி:
வடகிழக்கில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இவ்வாறான கட்டமைப்புகள் அவசியம் என்று கருதுகின்றீர்களா?

பதில்:
கண்கெட்ட பின்னர் சூரியநமஸ்காரம் செய்ய முடியாது. ஆகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்பேசும் முஸ்லிம்களின் கட்சிகள் யாவும் சிறுபான்மை தமிழ் மொழியாளர்கள் என்றவகையில் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். பேரினவாதம் சிங்கள பௌத்த நாடாக இலங்கையைக் கட்டம் கட்டமாக மாற்றி வருகின்றது. சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்களை வடக்குக் கிழக்கிலும் சிறுபான்மையினராக ஒடுக்கிவிடத் துடிக்கிறது. அதற்குள் பதவி சலுகைகளுக்காக தமது இனங்களை அடைமானம் வைக்கும் ஒட்டுண்ணி அரசியல்வாதிகளை மக்கள் ஓரங்கட்டியேயாக வேண்டும். அக்கறையுள்ள புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச் செயற்பட்டு புலத்திலும், புலத்திற்கு வெளியிலும் சிதறியுள்ள தமிழ்கட்சிகளையும் தமிழ் அமைப்புகளையும் தீர்வை நோக்கிய கொள்கைதளத்தில் ஒன்றிணைக்க வேண்டும். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய பங்களிப்பைச் செய்ய வேண்டும்.தமிழ் உணர்வுள்ள புத்திஜீவிகள் தமிழ்த்தேசியக்கட்சிகள், முஸ்லிம் கட்சிகளை இணைத்து, வடக்கு கிழக்கில் சுயநிரணய ஆட்சியைப் பெறுவதற்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

Tamil News