அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை
இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது. இது அரசியலில் மாற்றத்தை நோக்கிய ஒரு நிலைமை. அரச கட்டமைப்பில் – நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது சாதாரண விடயமல்ல.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக நிலவி வந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மக்கள் இப்போது வெறுப்படைந்திருக்கின்றனர். ஜனாதிபதி ஆட்சி முறையின் ஆரம்பகால நிலைமைகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி என்ற தனி மனிதரின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டு ஜனநாயக ஆட்சி முறை சீரழிக்கப்பட்டது. இதன் காரணமாகவே நாடு வரலாறு காணாத வகையில் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து அன்றாட சீவியத்திற்கே அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய பின்புலத்தில்தான் ஜனாதிபதி ஆட்சி முறையின் மீது மக்கள் வெறுப்பும் சீற்றமும் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்றதிகார பலம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கும், ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த முறைமையை மாற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜனநாயகத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஆணைக்குழுக்களை நியமித்தல், அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமித்தல் போன்றவற்றில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோன்று அளவற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ள ஜனாதிபதி பதவியை ஒருவர் தனது அரசியல் வாழ்நாளில் இரண்டு தடவைகள் மாத்திரமே வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனநாயகத்தின் பாதுகாப்பு வேலிகளாக அமைந்திருந்த இந்த தடைகள் – முறைமைகளை 18 ஆவது 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள் தகர்த்து எறிந்தன. தனிமனிதராகிய ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்படுவதற்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்று, பேரினத்தவராகிய சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த ராஜபக்சக்களே இந்த அசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தினர்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு நேர்மாறான விதிமுறைகளை உருவாக்கி, அரசியலமைப்பைத் துச்சமென மதித்து நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டார்கள். இவைகள் அனைத்தும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானவையாகவும், சிங்கள பௌத்த மக்களின் இனத்துவ ஆட்சிப் போக்கை நிலைநாட்டவும் அவர்களுக்குத் துணை புரிந்தன.
ஆனால் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறத் தவறியமை மட்டுமல்லாமல் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தையும் சீரழித்தார்கள். இதன் காரணமாகவே பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள சிங்கள மக்கள் விழிப்படைந்து ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒதுங்கி வீடுகளுக்குச் செல்லுமாறு கோரி போராடத் தொடங்கினார்கள். அவர்களது தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்து, புதிய கட்டமைப்பின் கீழ் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளார்கள்.
இந்த மக்கள் எதிர்ப்பு நிர்ப்பந்தத்திற்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சி முகிழ்த்திருக்கின்றது.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அளவற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அவருடைய செயற்பாடுகளில், குற்றம் குறை கண்டு அவரைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அந்த வகையில் அவருக்கு சட்ட ரீதியாக குற்றத் தண்டனை விலக்கீட்டு உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அந்த கைங்கரியத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நியதி அதனைச் சரியான முறையில் நிறைவேற்றத் தடையாக இருக்கின்றது.
ஜனாதிபதி பதவியில் இருப்பவர் தனக்குள்ள அளவற்ற நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரங்களைத் தன்னிச்சையாகவும் தவறான வழிகளிலும் பயன்படுத்துகின்றார் என்பதை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் உணர்கின்றார்கள். இதனால் அந்தப் பதவிக்குச் செல்பவர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும். அல்லது அந்த ஆட்சி முறைமையை முற்றாக இல்லாமற் செய்ய வேண்டும் என கோஷமிடுகின்றார்கள். காரசாரமாகக் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.
ஆனால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அந்தப் பதவியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கம் சிதைந்துவிடுகின்றது. ஜனாதிபதி பதவியில் மாற்றங்கள் செய்வதற்குப் பதிலாக அந்தப் பதவியின் அதிகாரங்களை மேம்படுத்துவதற்கும், அந்தப் பதவியில் நீடிப்பதற்குமே ஜனாதிபதியாகியவர்கள் முற்பட்டிருக்கின்றார்கள்.
அவருக்குப் பின்னர் அந்தக் குடும்பத்தில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோத்தாபாய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் இருப்பவர் மக்களுடைய ஜனநாயகக் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தனது விருப்பப்படி காரியங்களை ஆற்றலாம் என்ற திருத்தத்தை திருத்தச் சட்டத்தின் வாயிலாக அரசியலமைப்பில் உட்புகுத்தினார். இதனால் அவருடைய ஆட்சியில் ஜனநாயகப் பண்புகள் மழுங்கடிக்கப்பட்டன.
இதுபோன்ற பல்வேறு நிலைமைகளின் பின்புலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக் குறைக்க வேண்டும். அவரது அதிகாரங்கள் இல்லாமற் செய்யப்பட்டு பிரதமரினதும் நாடாளுமன்றத்தினதும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு திருத்தச் சட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விடயத்தில் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளும் கொள்கைகளும் முன்வைக்கப்பட்டு காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற மக்களுடைய ஜனநாயகப் போராட்ட கோரிக்கைக்கு அமைவாக மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமாக அரச தரப்பினரால் பிரசாரம் செய்யப்படுகின்றது.
வேடிக்கை என்னவென்றால் பொதுஜன பெரமுன கட்சி அராசங்கத்தை முழுமையாக இல்லாமற் செய்ய வேண்டும் என்ற மக்களுடைய ஜனநாயகக் குரல் புறக்கணிக்கப்பட்டு, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கமே உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளைக் கொண்டிருக்கக் கூடாது என்ற ஏதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டுள்ள நிலையில் டசின்களுக்கு மேலான திணைக்களங்களைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைத்து, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பொறுப்பேற்றிருக்கின்றார்.
இதுபோன்று பல்வேறு குளறுபடிகளைக் கொண்டதாக ஆட்சி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும் அரசியல் நெருக்கடிகளைத் தணிப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகளில் மக்களுடைய எதிர்பாரப்பும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. மாறாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இடம்பெற்றதைப் போன்ற கேலிக்கூத்தான நடவடிக்கைகளே ஆட்சியாளர்களினாலும், ஆளும் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகார முறைகேடுகளுக்கான அதிகாரங்களை இல்லாமற் செய்வது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்ற புதிய வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளையும். விடுதலைப்புலிகளின் கொள்கையாகிய தனிநாட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உசிதமாக உள்ள 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தைக் கட்டுப்படுத்தி நாடு பிளவுபடுவதைத் தடுக்க முடியாமற் போய்விடும் என்ற விடயங்கள் பிரசார ரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இது விடயத்தில் 21 ஆவது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்துள்ள நீதி அமைச்சர் மற்றும் பௌத்த மகாசங்கத்தினர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தோராவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அனைத்துத் தரப்பினரதும் கருத்தொற்றுமையை உருவாக்க முடியாதிருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாட்டின் ஜனநாயக உரிமைகளை நிலைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் வகையிலான 21 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களின் அரசியல் பதவிப் பிரவேசம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது உள்ளிட்ட விடயங்கள் பலவற்றில் விட்டுக்கொடுப்பு செய்ய வேண்டியது இன்றியமையாததாகும் என்ற நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து ஆட்சி முறைமையில் மாற்றங்களைச் செய்யும் நடவடிக்கையானது அரைவேக்காட்டு நிலையிலேயே நிறைவேற்றப்படும் என்பதையே நிலைமைகள் எதிர்வு கூறுவதாக அமைந்திருக்கின்றன.
- சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்- கண்டுகொள்ளாத இந்திய அரசு
- ரணில் ராஜபக்ச அரசும் கடந்தகாலத்தை வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் | இரா.ம.அனுதரன்
- யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி
[…] […]
[…] […]