யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி

யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ காரணம்?அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்

யாழ். வந்த கோட்டா கோ கம காரணம்?

‘கோட்டா கோ கம’வில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதில் என்ன பேசப்பட்டது? 21 ஆவது திருத்தம் ஒப்பேறுமா? அதில் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்படும்? போன்ற விடயங்கள் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக் களத்துக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகளை இந்த வாரம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி:
கோட்டா கோ கமவில் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ் மக்கள் அதில் பெருமளவுக்கு இணைந்து கொள்ளவில்லை என்பதையிட்டு அதிகளவு அக்கறைப்படுகின்றார்கள். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரமுகர்கள் யாழ்ப்பாணம் வந்து பல்வேறு தரப்பினருடனும் இது குறித்து பேசியுள்ளார்கள். உங்களையும் அவர்கள் சந்தித்ததாக அறிகிறோம். அவர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? அதற்காக நீங்கள் கொடுத்த பதில் என்ன?

பதில்:
கோட்டா கோ கம போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள இளைஞர்களுடன் இணைந்து செயற்படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் யாழ்ப்பாணத்துக்கு வந்து எம்முடன் பேசியிருக்கின்றார்கள். வேறு சில அமைப்புக்களுடனும் பேசியிருக்கின்றார்கள். காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ் மக்கள் எதற்காக பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்கின்றார்கள் என்பதை அறிவதுதான் அவர்களுடைய வருகையின் நோக்கம். அதனையிட்டு ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற் காகத்தான் தான் வந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். இது தொடர்பில் வலுவான நியாயமான காரணங்களை நாம் அவர்களுக்குத் தெரிவித்தோம்.

இது வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடிக்கான போராட்டமாக இருந்திருந்தால் நாங்கள் அதில் கலந்துகொண்டிருப்போம் என்பதை அவர்களுக்குத் தெரிவித்தோம். ஆனால், இந்தப் போராட்டம் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு போராட்டம். ஆட்சிமாற்றத்துக்கான போராட்டம் என வரும்போது வரப்போகும் புதிய ஆட்சி தமிழ் மக்களுடைய நலன்கள் தொடர்பில் கவனத்திற்கொள்ளாமலிருக்கும் நிலையில் நாங்கள் எப்படி கலந்துகொள்வது என்ற கேள்வியை நாங்கள் அவாகளிடம் முன்வைத்தோம். தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ளாத அரசு ஒன்றை உருவாக்காமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை நாம் அவர்களுக்குத் தெரிவித்தோம்.

இதனைவிட தமிழ் மக்கள் இன்று ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

  1. அரசியல் தீர்வு என்ற அடிபபடைப் பிரச்சினை.
  2. இனஅழிப்புக்கு நீதி கோருகின்ற நீதிப் பிரச்சினை.
  3. அன்றாடம் நடைபெறும் ஆக்கிரமிப்புப் பிரச்சினை
  4. அரசியல் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டடோர் பிரச்சினை
  5. போரால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் சார்ந்த பிரச்சினை.

தமிழ் மக்களுடைய இந்த ஐந்து பிரச்சினைகளில் ஒன்றைக்கூட இந்தப் போராட்டக்காரர்கள் முன்வைக்கவில்லை. அதனை ஏற்றுக்கொண்டதாகக்கூறவும் இல்லை. இவ்வாறான நிலையில் இதில் கலந்துகொள்வதில் எமக்குப் பிரச்சினை உள்ளது என்பதை அவர்களுக்குத் தெளிவாக புரிய வைத்தோம்.

எங்களுக்குள்ள பிரச்சினை என்னசென்றால் அங்குள்ள அரசியல் தரப்புக்களில் யாரை நாங்கள் நம்புவது?

இரண்டு பிரதான கட்சிளையும் பொறுத்தவரையில் அவை இரண்டுமே பெரும் தேசியவாத அணிகள்தான். அந்த இரண்டிலும் நாங்கள் நம்பிக்கை வைக்க முடியாது. மூன்றாவது அணியான ஜே.வி.பி. இந்த இரண்டையும் விட மோசமாக நடந்துகொண்டதுதான் வரலாற்று அனுபவம். வடக்கு – கிழக்கு இணைப்பை இல்லாமல் செய்தமை போன்றவை அவர்களால் செய்யப்பட்டதுதான். ஆக, நம்பிக்கை வைப்பதற்கு சிங்களத் தரப்பில் எவரும் இல்லை.

அவர்களை விட்டுவிட்டு புலமையாளர்களை நோக்கினால் அவர்களும் நம்பிக்கையளிக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை.  தயான் ஜயதிலக்க முதல் குமார் ரூபசிங்க வரையில் அவ்வாறுதான் நடந்துகொண்டார்கள். தயான் ஜயதிலக்க ஈழப்போராட்த்தின் ஆரம்ப காலங்களில் தனிநாட்டுக் கோரிக்கையையே ஏற்றுக்கொண்டவர். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதற்கு விளக்கம் கொடுத்தவர். ஆனால், இன்று அவர் பேரினவாதத்தின் காவலனாக இருக்கின்றார். பெருந்தேசியவாதம் தம்மை ஒதுக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவ்வாறான ஒரு நிலைபபாட்டை அவர்கள் எடுத்துக்கொள்கின்றார்கள்.

இந்த நிலையில் யாரை நம்பி நாம் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்வது என்ற கேள்வி நம்மத்தியில் உள்ளது. படையினரின் நடவடிக்கைகளின் போது சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் அவர்கள் ஒரே நிலையில் பார்க்கவில்லை. தமிழ் இளைஞர்களை அவர்கள் மிகவும் மோசமாக நடத்தினார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழ் மக்கள் இதில் பங்குகொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை நாம் கூறியிருந்தோம். எமது இந்தக் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இங்கு ஒரு வெளி திறந்திருக்கின்றது. இந்த வெளியில் நீங்களும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்திருந்தார்கள். அதனை நாமும் ஏற்றுக்கொண்டோம்.

கேள்வி:
கோட்டா கோ கம போராளிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது தமிழ் மக்களுக்குப் பலனுள்ளதாக அமையுமா?

பதில்:
ஆம் உண்மையில் உரையாடலை நாம் தொடரவேண்டும். அதன்மூலமாகவே எங்களுடைய பிரச்சினைகளை அவர்களுக்கும் சொல்லக்கூடியதாக இருக்கும். சிங்கள இளைஞர்களிடம் இப்போது ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. அவர்கள் இப்போது பிரச்சினைகளின் வேர்களைத் தேடிச்செல்கின்றார்கள். இதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் அவர்கள் சிந்திக்கின்ற நிலை ஒன்று உருவாகும். இப்போது உருவாகியிருக்கும் இந்த வெளியை நாங்களும் பயன்படுத்த வேண்டும். பங்கு கொள்ளாவிட்டாலும் பயன்படுத்த வேண்டும் அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது எங்களுக்கு நல்லது. எங்களுடைய போராட்டம் வெற்றிபெற வேண்டுமானால் சிங்கள தரப்பிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அதற்கான வாய்ப்பத் தந்திருக்கின்றது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கேள்வி:
தென்னிலங்கையில் உருவாகிய இளைஞர்களின் போராட்டம் தான் 21 ஆவது திருத்தத்தை அவசரமாக அரசாங்கம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்தத் திருத்தத்தை எவ்வாறு பார்க்க முடியும்?

பதில்:
உண்மையில் இந்த 21 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வருமா என்பது கூட இன்று சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது. ஏனெனில் பெருந்தேசியவாத சக்திகள் லிபரல் ஜனநாயகம் ஒருபோதும் ஒத்துவராது. சிங்கள தேசத்தை ஜனநாயக மயப்படுத்துவதுதான் தற்போதைய போராட்டத்தின் முக்கிய நோக்கம். இது தமக்கு சில நெருக்கடிகளைக் கொண்டுவரும் என அவர்கள் நினைக்கின்றார்கள். இதனால், அவர்கள் இந்த 21 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இல்லை. இதனைவிட சில கட்சிகளும் இவ்வாறான நிலைப்பாட்டில்தான் உள்ளன. இவை இரண்டும் சேர்ந்து 21 ஆவது திருத்தத்தை பின்னால் தள்ளும் ஒரு நிலை காணப்படுகின்றது. இதனைவிட உயர் நீதிமன்றமும் மக்கள் தீர்ப்புக்குச் செல்ல வேண்டும் எனக்கூறியிருக்கின்றது. அதுவும் ஒரு தடையாக இருக்கின்றது.

21 ஆவது திருத்தத்தின் பிரதான நோக்கம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அந்த அதிகாரங்களை அரசியலமைப்புப் பேரவைக்கும் சுயாதீனக் குழுக்களுக்கும் அமைச்சரவைக்கும் ஒப்படைப்பதுதான். இதில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இருதுக்கப்போவதில்லை. இதனை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுமானால் குறைந்த பட்டசம் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒன்று – அரசியலமைப்புப் பேரவையிலும் சுயாதீன ஆணைக் குழுக்களிலும் தமிழ் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது – தமிழ் மக்களுடைய விவகாரங்களில் தீர்மானம் எடுப்பது செயற்படுவது போன்ற விடயங்களில் தமிழ் மக்களுடைய அனுமதியுடன்தான் அவற்றை செய்யலாம் என்ற ஒரு வீட்டோ அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது இரண்டும் இல்லாமல் இதனை ஏற்றுக்கொள்வதில் எந்தப்பயனும் இல்லை. இந்த நிலைமைகளால் 21 இல் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய நிலை இல்லை என்பது எனது கருத்து.

Tamil News