பல தடைகளைத் தாண்டி உலகக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளோம் | பயிற்சியாளர் செல்வரத்தினம் நந்தகுமார்

உலகக் கிண்ண குத்துச் சண்டை

செல்வரத்தினம் நந்தகுமார்

தடைகளைத் தாண்டி உலகக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில்

இலங்கையின் mixboxing Fedaration தலைவரும், Asian mixboxing Fedaration இன் தலைவருமாக இருக்கும் செல்வரத்தினம் நந்தகுமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற குத்துச்சண்டை, மல்யுத்தப்  போட்டிகளில் பங்குபற்றி, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றது தொடர்பாகவும், தாங்கள் இந்தத் துறையில் பயணிக்கும் போது ஏற்படும் இடையூறுகள் தொடர்பாகவும் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய செவ்வி.

கேள்வி: இந்த போட்டியில் நீங்கள் வென்றுள்ளீர்கள், இந்த போட்டியின் முக்கியத்துவம் என்ன?

உலகக் கிண்ண குத்துச் சண்டைபதில்: வணக்கம். எனது பெயர் செல்வரத்தினம் நந்தகுமார். நான் இலங்கையின் Mixboxing Federation தலைவரும், Asia Mixboxing Federation இன் தலைவருமாக இருக்கிறேன். கடந்த மே மாதம் 28 – 30 திகதி வரை சென்னை மதுரவாயிலில் நடைபெற்ற kick boxing மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் இலங்கையிலிருந்து 7 வீரர்கள் பங்குபற்றி, kick boxing போட்டியில் 4 தங்கப்பக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், மல்யுத்தப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளோம்.

இந்தப் போட்டியின் முக்கியம் என்னவெனில், உலக கிண்ண kick boxing போட்டியில் பங்குபற்றும் வீரர்கள்,  ஏதாவதொரு சர்வதேச ரீதியான போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதனாலேயே இப்போட்டியில் நாங்கள் பங்குபற்றியிருந்தோம். இதற்கமைவாக 3 வீரர்களும், 1 வீராங்கனையும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.

பல சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களைப் பெற்ற வீர வீராங்கனைகள் இப்போட்டியில் பங்குபற்றவில்லை. அவர்கள் சர்வதேச போட்டியில் பங்குபற்றி பதக்கத்தை வென்றிருப்பதாலும், அவர்கள் இப்போட்டியில் பங்குபற்ற வேண்டிய தேவை இல்லாத காரணத்தினாலும், நிதிப் பற்றாக்குறை காரணமாகவும் அவர்கள் இப்போட்டியில் பங்குபற்றவில்லை. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் காஸ்மீரில் நடைபெறும் உலகக் கிண்ண kick boxing போட்டியில் பங்குபற்றுவதற்காகவே இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தோம்.

கேள்வி: இந்த நிலைக்கு நீங்கள் வருவதற்கு நீங்கள் மற்றும் உங்கள் குழுவினர் கடந்து வந்த பாதை பற்றி?

பதில்: இலங்கையின் அரசியல் நிலைமைகள், தற்போதைய பொருளாதார நிலைமைகளால் எங்கள் அணியை இலங்கை விளையாட்டுத்துறையில் பதிவு செய்ய முடியதிருக்கின்றோம். எங்கள் கோரிக்கைகள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சிற்கு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் உலக  Mixboxing Federation என்ற அமைப்பின்கீழ் இலங்கை  Mixboxing Federation அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் எங்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வாறு பெற்றிருப்பின் இவ்வாறான சர்வதேச ரீதியான போட்டியை எமது நாட்டிலேயே ஒழுங்குபடுத்த முடியும்.

உலகக் கிண்ண குத்துச் சண்டைஇலங்கையில் நாங்கள் தமிழர்கள் என்பதாலேயே எமது அங்கீகாரங்கள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கள் சொந்த முயற்சியினாலே கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றி வருகின்றோம். தமிழ்ப் பிரதேச வீரர்களே இந்த விளையாட்டில் அதிக அக்கறை காட்டி பல பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.  வடமாகாணத்தில் மிகச் சிறப்பான விளையாட்டு வீரர்கள் காணப்படுகின்றனர். இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்குரிய நிதியுதவியை புலம்பெயர் அமைப்புக்களும், ஆர்வலர்களும் வழங்கியிருந்தனர். இருந்த போதும் இந்த நிதியுதவி போதாதுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறும் போட்டியில் பங்குபற்றுவதற்கு 3 மாதகாலப் பயிற்சியை இந்தியாவில் இருந்து பெற வேண்டியுள்ளது. இவ்வேளையில் நிதிப்பற்றாக்குறை என்பது எங்களை அசௌகரியமான  நிலைக்குத் தள்ளியுள்ளது.

தற்போது இலங்கையின் பண நாணயமாற்று வீதம் மிகவும் வீழ்ச்சியுற்றுள்ளதால், இலங்கைப் பணத்தின் பெறுமதி குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் நிதி திரட்டுவதற்கு கஸ்டமாக இருக்கின்றது. போட்டியாளர்கள் கடந்தகால யுத்த காலத்தில் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்களாகவும், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். இருந்தும் அவர்கள் விளையாட்டுத் திறமை உடையவர்களாக காணப்படுகின்றனர்.  நடக்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குகொள்வது மிகவும் சவாலான ஒரு விடயமாகக் காணப்படுகின்றது.  ஆனால் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றினால், இலங்கையின் தமிழ் வீரர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர்களுக்குரிய நிதிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுமிடத்து, அவர்கள் பல சாதனைகளைப் புரிவார்கள்.

கேள்வி: தொடர்ந்து இத்துறையில் பயணிப்பதற்கு என்னவிதமான உதவிகளை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: எங்களுக்குத் தேவைப்படுவது விளையாட்டு இடவசதி, போசாக்கான உணவு, விளையாட்டு உபகரணங்கள். விளையாட்டிற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் இல்லாத நிலையிலேயே வெற்றி பெறும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.  உரிய வசதிகள் கிடைக்குமிடத்து, தமிழ்ப் பிரதேசத்தில் இருக்கும் பல வீரர்களை உலகிற்கு வெளிக் கொண்டுவர முடியும். எனது சொந்த முயற்சியிலேயே இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அனேகமான வீரர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களின் வீடுகளுக்குத் தேவையான வருமானத்திற்காக வேறு வேலைகளைத் தேடிச் செல்கிறார்கள். தங்கள் குடும்பங்களைப் பார்ப்பதற்காக  விளையாட்டை விட்டு விலகி வேறு வேலைகளுக்குச் செல்வதால் இந்தத் துறை மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. அவர்கள் இந்தத் துறையில் தொடர்ச்சியாக அங்கம் வகிக்க வேண்டுமானால், அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கிண்ண mixboxing போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டிய 4 வீரர்களும், ஏற்கனவே சர்வதேச ரீதியான போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய 5 வீரர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். நிதிப் பற்றாக்குறை காரணமாகவும், அவர்களின் வாழ்வாதார சூழல் காரணமாகவும் அவர்கள் இந்த விளையாட்டில் பங்குபற்றாத ஒரு நிலை இருக்கின்றது. அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமிடத்து அவர்கள்  உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டுவார்கள் என்பது எனது கருத்து.

உலகக் கிண்ண குத்துச் சண்டைஉள்ளூர் யுத்தம் காரணமாக தாய் தந்தையரை இழந்து, பெரிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து, சிறு வயதிலேயே எங்கள் பயிற்சி நிலையத்தில் (எங்கள் பயிற்சி நிலையம் ஒரு பொது விளையாட்டு மைதானம்) பயிற்சி பெற்று கடந்த பத்து வருடங்களாக பயிற்சி பெற்றுவரும் சிறீதர்சன் என்பவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். பெரியம்மாவின் கணவர் இறந்து விட்டார். அவர் தான் நம்பிக்கைக்குரிய வீரன். இன்று வரை அவரின் அனைத்துப் போட்டிகளுக்கும் பயிற்றுவிப்பாளரான எனது நிதிப் பங்களிப்பு மூலமாகவே போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றார். இலங்கையில் பத்து நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்றிருந்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச ரீதியான போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார். நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார். இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகளில் பங்குபற்றி 2 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தார். இவர் தொடர்ந்தும் விளையாட்டுத்துறையில் பயணிக்க முடியாத ஒரு சூழல் தோன்றியுள்ளது. காரணம் இவரின் பெரியம்மாவை பராமரிப்பதற்காக இவருக்கு நிதி தேவைப்படுவதால், வாழ்வாதாரத்திற்காக வேறு தொழிலைத் தேடவேண்டியுள்ளது.

எனது முயற்சியினால் இலங்கை தேசிய விளையாட்டுத்துறை விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, தற்போது ஒரு பாடசாலையில் விளையாட்டுத்துறை தொண்டராசிரியராகக் கடமையாற்றுகின்றார். இவருக்கு ஊதியம் கிடைப்பதில்லை. விளையாட்டுத்துறையில் பயணித்தும் ஊதியம் கிடைக்காத காரணத்தினால் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. பெரியம்மாவும் சுகயீனமுற்றிருப்பதால், இவரே வேலைக்கு சென்று பராமரிக்க வேண்டியிருக்கின்றார். இவர் இந்தியாவில் இருப்பதால் இவரின் பெரியம்மா பல இன்னல்களை சந்தித்து வருகின்றார். மூன்று மாதங்கள் இந்தியாவில் தங்க வேண்டியிருக்கின்றது. மேலும் இப் போட்டிகளில் தேர்ச்சியடைந்த வீரர்கள் இலங்கையில் பயிற்சியில் இருக்கின்றார்கள். அவர்களை ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு வரவைத்து இந்தப் போட்டியில் பங்குபற்ற வைக்க வேண்டும். அதற்கு நிதிப் பற்றாக்குறை இருக்கின்றது.

மேலும் இந்தப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு பயிற்சி பெறுவதற்குரிய உபகரணங்கள் எங்களிடம் தற்போது இல்லை. எங்களிடம் இருக்கும் உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. அவை பயன்படுத்த முடியாத நிலையில்  உள்ளன. அவை ஆறு வருடத்திற்கு மேற்பட்டவை. அத்துடன் இலங்கை விளையாட்டுத் துறையில் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Tamil News