திருகோணமலையிலிருந்து கொடிய டெங்கு நோயை விரட்டுவோம் | ஹஸ்பர் ஏ ஹலீம்

டெங்கு நோயை விரட்டுவோம்ஹஸ்பர் ஏ ஹலீம்

கொடிய டெங்கு நோயை விரட்டுவோம்

உலகளவில் ஏற்படும் அனர்த்தங்கள் ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. இயற்கை அனர்த்தம் போல் ஏதோ ஒரு வகை நோய் மக்களை ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் போன்று டெங்குவின் தாக்கமும் திருகோணமலையில் ஆட்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இதனால் மக்கள் அவதானமாக இருந்து, தங்களை கொடிய நோயிலிருந்து பாதுகாக்க முன்வர வேண்டும். அலட்சியமாக இருந்தால் மரணங்களை சந்திக்க நேரிடும். கடந்த காலங்களில் 2014 ம் ஆண்டளவில் திருகோணமலை கிண்ணியா பகுதியில் கர்ப்பிணி தாய் உட்பட  14 மரணங்கள் டெங்கினால் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இந்த வருடம் திருமலை மாவட்டத்தில் 770 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். இதில் திருகோணமலை கடற்படை தளத்தில் 111 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவெளி, குச்சவெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் கிண்ணியா சுகாதார பிரிவில் ஆண் (வயது38)  ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணித்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

டெங்கு நோயை விரட்டுவோம்திருகோணமலை பகுதியில் 203 நோயாளர்களும், மூதூரில் 203, கிண்ணியா 77,  உப்புவெளி 76 என டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடம்  (2021)  312  நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம் முறை அது 770 ஆக அதிகரித்துள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் மே 18 தொடக்கம் 24 வரை டெங்கு வாரமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இந்த நிலையில் சுகாதார தரப்புடன் முப்படையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான கொடிய நோயிலிருந்து பாதுகாக்க பொது மக்களை அவதானமாக செயற்படவும், தங்களது வீடுகள் காணிகளை சுத்தமாக வைத்திருக்கவும், பாவிக்காத மலசல கூடங்களை கவனமாக நீர்தேங்காத வண்ணம் சுத்தப்படுத்துவதுடன், வெற்றுக் காணிகளையும் உரிய நேரத்தினுள் சுத்தமாக பேணவும் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாடசாலைகள், அரச திணைக்களங்களில் தினசரி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சுத்தத்தை பேண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதாரரத் திணைக்களம் பொது மக்களை கேட்டுக் கொள்வதுடன், காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாடவும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்குமாறும் மேலும் கேட்டுள்ளது.

இதில் அலட்சியமாக இருக்க வேண்டாம். சில பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பணியின் போது லாவா குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு நோயை விரட்டுவோம்வீடுகளில் நீரை சேமித்து வைக்கும் வாளி, குடம், பரல்கள், தாங்கி என்பவற்றிலும் மலசலகூட வாளி, குளியலறை வாளி, பறவைகளுக்கு நீர் வைக்கும் பாத்திரம், தொட்டிகள், தடாகங்களிலும் கிணறுகளிலும் பாவிக்காத மலசலகூடங்கள் மூடப்படாத மலசலகூட குழிகள் சுற்றுப்புறங்களில் வீசப்பட்ட சிரட்டை பேணி, யோகட் கப் போத்தல்களிலும் கீழே உள்ளன போன்று (தெறி புழு) போன்ற அமைப்பு காணப்படுகின்றனவா? இவைதான் நுளம்பு குடம்பிகளாகும்  என சுகாதார தரப்பு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

இதில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?

நீர் தேங்கும் மற்றும் சேமித்து வைக்கப்படும் பாத்திரம்/பொருட்களில் உள்ள நீரை அகற்றி சுத்தம் செய்தல் வேண்டும்.

நீரை சேமித்து வைக்கும் ஒவ்வொரு தடவையும் வாளி, குடம், பரல்கள், தாங்கி என்பற்றில் பழைய நீரை அகற்றி சுத்தம் செய்த பின்னரே புதிதாக நீரை சேமிப்பதுடன் பாதுகாப்பாக மூடி வைத்தல் வேண்டும்.

கிணறுகளுக்கு கப்பி_வகை மீன்கள் இடுவதுடன் சிறிய இடைவெளி கொண்ட வலை இட்டு மூட வேண்டும்.

பாவிக்காத கிணறுகள் மற்றும் மூடப்படாத மலசலகூட குழிகளுக்கு  மூடிகள் வேண்டும்.

இவற்றையெல்லாம் சரிவர ஒவ்வொருவரும் உணர்ந்து செய்யும் போதே கொடிய ஆட்கொல்லி டெங்கிலிருந்து பாதுகாப்புபெற முடியும்.

டெங்கு நோயை விரட்டுவோம்டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மக்கள் கரிசனையுடன் செயற்படுவதுடன், நுளம்பு தாக்கம் பரவாத வண்ணம் சூழலையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் சுத்தமாக பேண வேண்டும். வடிகால்களில் நீர் தேங்கி நிற்காத அளவுக்கும் லாவா குடம்பிகள் இல்லாதளவுக்கு நீரை வடிந்தோடக்கூடிய வகையில் சுத்தத்தை திறம்பட பேண வேண்டிய தருணமாக இருக்கிறது. திருகோணமலை நகர் பகுதியில் சில குடியிருப்பு நெருக்கமாக காணப்படுவதுடன், வடிகால்கள் துப்புரவற்ற நிலையில் உள்ளது இவ்வாறான விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் கண்காணித்து செயற்பட வேண்டும். முப்படையினர் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த களத்திற்கு சென்று செயற்படுவதுடன் சுகாதார தரப்புக்கள் டெங்கின் தீவிரத்தை கட்டுப்படுத்த புகை விசிறும் நடவடிக்கை என பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொது மக்களை இந் நோயிலிருந்து பாதுகாக்க முன்கூட்டிய திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும் இல்லாது போனால் பல மரணங்களை சந்திக்க நேரிடும்.

Tamil News