இருபத்தொன்றும் இடைக்கால அரசும்: இடறுமா, தொடருமா…? | பி.மாணிக்கவாசகம்

இடைக்கால அரசுபி.மாணிக்கவாசகம்

இருபத்தொன்றும் இடைக்கால அரசும்

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை என்பது வெறுமனே பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது பரந்து விரிந்ததொரு பிரச்சினை. பல பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுப் பிரச்சினை – கூட்டுக் குழப்பநிலை.

அந்நியச் செலாவணிக்கான உள்ளூர் உற்பத்தி, நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான விவசாய உற்பத்தி,  இறக்குமதி மற்றும் சேவைகளின் மூலமான அரச வருமானத்துக்குரிய நடவடிக்கைகள் என பலதரப்பட்ட வழிகளிலான வருவாய் சார்ந்த நடவடிக்கைகள் இந்தப் பிரச்சினையில் முக்கிய இடம் வகிக்கின்றன.

அதேவேளை நாட்டின் செலவினங்களை சிறப்பாகக் கையாண்டு அந்நியச் செலாவணியைப் போதிய  அளவில் ஈட்டுவதற்கான உல்லாசப் பயணத்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தலும் முக்கிய விடயமாகும்.  மொத்தத்தில் நாட்டின் செயற்பாடுகளை சீராக நெறிப்படுத்தி மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் ஆட்சிமுறைமையை மேற்கொள்வதற்கு உறுதியான – ஸ்திரமான அரசாங்கம் ஒன்று கட்டமைக்கப்பட வேண்டும்.

ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். அரச தலைவராகிய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்தது மட்டுமல்லாமல், வெறுப்படைந்துள்ளார்கள். தீர்க்கதரிசனம் மிக்க ஒரு தலைவராக அவர் செயற்படத் தவறியிருக்கின்றார். அவருடைய இராணுவமயமான ஆட்சி நிர்வாகம் எதிர்பார்த்த நன்மைகளைத் தரவில்லை.

நாட்டின் பொருளாதார விடயத்தில் அவருடைய செயற்பாடுகள் – வேலைத் திட்டங்கள் அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக நாட்டைப் பின்னோக்கித் தள்ளியிருக்கின்றது. ஏற்றுமதிப் பொருளாதாரம் விருத்தி செய்யப்படவில்லை. இறக்குமதிப் பொருளாதாரத்திலேயே நாடு கிட்டத்தட்ட முழுமையாகத் தங்கியிருக்கின்றது. இதனால் திறைசேரி வெறுமையாகி இருக்கின்றது. அந்நியச் செலாவணி கையிருப்பும் முறையாகப் பேணப்படவில்லை. டொலர்கள் இல்லாத காரணத்தினால், அன்றாட உணவு, மருத்துவ தேவைக்குரிய மருந்துகள் மற்றும் சமையல் வரிவாயு, எரிபொருள் என்பவற்றை இறக்குமதி செய்ய முடியாத இக்கட்டான நிலைமை உருவாகி இருக்கின்றது.

கட்சி அரசியல் மற்றும் சுய அரசியல் இலாப நோக்கிலான கொள்கைச் செயற்பாடுகளினால் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையிலான கூட்டு அரசாங்கத்திற்குள்ளே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளும் பிச்சுப் பிடுங்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டு அணியை முறையாக வழிநடத்தி கட்டுப்பாடாக வழிநடத்துகின்ற ஆளுமையை அரச தலைவராகிய ஜனாதிபதி கோத்தாபாயாவிடம் காண முடியவில்லை.

ஆட்சி முறையின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் அரசு மீது ஆத்திரம் கொண்டு அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரச வன்முறைச் செயற்பாடுகள் மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தி நாடு தீப்பற்றி எரிந்தது. அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தீவிர ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். இரத்தம் சிந்தவும் நேரிட்டது.

அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து தேர்தலில் தெரிவு செய்த ஜனாதிபதி தனது செயலகத்திற்குச் செல்ல முடியாத வகையில் அரச எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றிருக்கின்றது. அரசு பொது நிகழ்வுகளை நடத்த முடியாதிருக்கின்றது. அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்கள் மட்டுமல்ல. ஜனாதிபதியும்கூட மக்கள் மத்தியில் செல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர். மறைவாகப் பதுங்கி வாழ்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இடைக்கால அரசுஇத்தகைய பின்புலத்தில், ராஜபக்சக்கள் அரசியலைவிட்டு வீடு செல்ல வேண்டும் என்ற மக்களுடைய போராட்ட கோரிக்கைக்கு அமைவாக மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச புதிய அரசாங்கத்தை உருவாக்கி யிருக்கின்றார். இது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாகக் கூறப்படுகின்றது. ஆனால் கூட்டுப் பிரச்சினையாகிய பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது இலகுவான காரியமல்ல. அது கடினமானதொரு பணி. பல முனைகளில் முனைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதொரு கைங்கரியம். எனவே பரந்து விரிந்ததொரு பரிமாணத்தில் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீரவு காணும் வகையில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தினதும் பிரதமரினதும் கைகளைப் பலப்படுத்தும் வகையில் மாற்றங்களைச் செய்வதற்காக 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. ஆனால் அந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியாகிய பொதுஜன பெரமுன கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது.

ஜனாதிபதியாக கோத்தாபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றவுடன், ஏற்கனவே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் மேம்படுத்துவத்றகாக அவசர அவசரமாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் முக்கிய ஆணைக்குழுக்களின் நியமனம், அவற்றுக்கான அதிகாரங்கள் என்பவற்றில் வரையறுக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு, ஜனாதிபதி என்ற தனிமனிதரின் விருப்பு வெறுப்புக்கேற்ற வகையில் செயற்படுகின்ற முறைமை உருவாக்கப்பட்டது.

இந்தத் தனிமனித அதிகார முறைமையே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஆட்சி முறைமைகயில் பின்னடைவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கக் காரணமாக அமைந்ததாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பின்னணியில் ஜனநாயகத்தைப் பேணும் வகையில் (20 ஆவது அரசியலமைப்பச் சட்டத்திற்கு முன்னதாக) உருவாக்கப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கச் செயற்பாடுகளைக் கொண்டதாக 21 ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால் இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க முடியாது. குறைக்கக் கூடாது என்று பொதுஜன பெரமுன கட்சியினர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்த அதிகாரக் குறைப்புக்கு இடமளிக்கப் போவதில்லை என்று அவர்களில் பெரும்பாலானவர்கள் உறுதியாகக் கூறியிருக்கின்றனர். அதேவேளை இந்தத் திருத்தச் சட்ட வரைபை அமைச்சரவையில் ஜுன் 6 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் பௌத்த மகாநாயக்கர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தால், தமிழ் மக்களுக்கு சார்பானதாகத் தாங்கள் கருதுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று அவர்கள் எச்சரிக்கும் வகையில் கூறியிருக்கின்றனர்.

தமிழ்த்தரப்பினரால் உப்புச் சப்பற்றதென வர்ணிக்கப்படுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட மாகாணசபை ஆட்சி முறைமையின் கீழ் தமிழ் மக்கள் தனிநாட்டை உருவாக்கிவிடுவார்கள் என்றும், அதனைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகார வல்லமை ஜனாதிபதிக்கே உள்ளது என்றும், அவருடைய அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டால் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது என்றும் பௌத்த மகாநாயக்கர்கள் விளக்கமளித்திருக்கின்றார்கள். பௌத்த மகாநாயக்கர்களின் இந்தக் கூற்று 21 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்ற பொதுஜன பெரமுன கட்சியினருக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்றத்தின் நியமன எம்பியுமாகிய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்தினால் அரசுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, அவர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தைப் பிணை எடுப்பதற்காகவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அழைப்பை ஏற்று ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நோ டீல் கம என்ற போராட்டம் பிரதமருடைய அலுவலகம் அமைந்துள்ள அலரி மாளிகை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுஜன பெரமுன கட்சியினர் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் நிற்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தனிமனித நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் நியமனத்தையும் எதிர்த்திருக்கின்றனர். பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவில் மாற்றுக்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அவரை பிரதமராக்கி இருக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பல முனைகளிலான பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் நெருக்கடியிலும் நாடு சிக்கித் தவிக்கின்ற சூழலில் வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதற்காக உறுதியான அரசாங்கம் ஒன்றை நிலைப்படுத்த வேண்டிய அவசரத் தேவை அவசியமாகியிருக்கின்றது. ஆனால் அத்தகைய உறுதியானதோர் அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கு மாறாக சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களை உருவாக்கி, அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே பொதுஜன பெரமுன கட்சியினருடைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

பொதுமக்களின் போராட்ட கோரிக்கையை ஏற்று பதவி விலகப் போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அழுங்குப் பிடியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தேர்தல் காலம் வரையில் பதவியை விட்டுப் போவதில்லை என்ற உறுதிப்பட அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் உறுதியானதோர் அரசாங்கம் நாட்டில் கோலோச்சுகின்றது என்று உதவி வழங்கும் நாடுகளுக்கும், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட உலக அமைப்புக்களுக்குக் காட்டுவதற்குமாகவே ஜனாதிபதியினால் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

ஆனால் 21 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் நியமனம் என்பவற்றுக்கு எதிரான பொதுஜன பெரமுன கட்சியினருடைய அரசியல் நிலைப்பாடு நெருக்கடி நிலைமைகளினால் அல்லாடிக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தை பதவி இழக்கச் செய்து நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்துவிடுமோ என்ற அச்சம் இப்போது மேலோங்கியுள்ளது.

Tamil News