புல்மோட்டை-நெற்செய்கை முறையான நீர்முகாமையின்மையால் அழிவு- இழப்பீட்டைக் கோரும் விவசாயிகள்

புல்மோட்டை-நெற்செய்கை

புல்மோட்டை மருதங்குள விவசாயிகளின் 35 ஏக்கர் நெற்செய்கை முறையான நீர் முகாமையின்மையால் அழிவடைடைந்துள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் தமக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புல்மோட்டை- 04ம் வட்டாரம் மருதங்குள விவசாய சம்மோளனத்திற்குட்பட்ட பாலங்குளத்தில் நீர்கொள்ளும் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் அருகிலுள்ள சின்ன மருதங்குளத்தையும் இணைத்து நீர் விநியோகம் செய்து முற்பகுதி 35ஏக்கர் பிற்பகுதி 35ஏக்கர் என மொத்தம் 70 ஏக்கர் நெற்செய்கை செய்வதென புல்மோட்டை கம நல அபிவிருத்தி உத்தியோகத்தரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற 2022-03-02ஆம் திகதிய சிறுபோகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கமைவாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பாலங்குளத்து நீர் முடிவடைந்ததையடுத்து சின்ன மருதங்குளத்திலிருந்து தமது விவசாயத்திற்காக பிற்பகுதி விவசாயிகள் நீரைக்கோரிய போது பாலங்குளத்திலிருந்து பிற்பகுதி 35 ஏக்கருக்குமான நீரை பெறுவதென தீர்மானிக்கப்பட்டதாக மாற்றி எழுதப்பட்ட கூட்டத்தீர்மானத்தை விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டதனால் விவசாயிகள் புல்மோட்டை காவல்துறையினல் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 15 நாட்களாக கடமையில் இல்லாத காரணத்தால் விவசாய சங்க நிருவாகிகளுடன் காவல்துறையினர் சமரசப் பேச்சில் ஈடுபட்டு ஒரு முறை நீர் விநியோகிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இதுவரையிலும் நீர் விநியோகிக்கப்படாததால் நெற்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது.

இந்நிலையில் பயிற்செய்கை அழிவடைந்ததனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தமக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tamil News