கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும்

கச்சதீவு: வரவேற்பும் எதிர்ப்பும்கச்சதீவு: வரவேற்பும் எதிர்ப்பும்

கச்சதீவு: வரவேற்பும் எதிர்ப்பும்

சூசை ஆனந்தன்

புவியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர்,

யாழ். பல்கலைக்கழகம்

தமிழக முதலமைச்சர் ஓர் அரசியல்வாதி. அவர் வாக்கு வேட்டைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதுவதாக நினைத்து கச்சதீவை மீட்குமாறு கேட்டிருப்பார். அது அவர் தமிழ்நாட்டு மீனவர்கள் சார்பாக கேட்டிருப்பார். அவர் பக்கம் பார்க்கும் போது அது பிழை இல்லை.

ஆனால் கடந்த காலங்களில் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களினால் படும் துன்பங்கள், அழிவுகள், சுற்றாடல் பாதிப்புகள் பற்றித் தெரிந்திருந்தும், அவரின் கச்சதீவை மீளப்பெறும் கோரிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதை வன்மையாக எதிர்க்கிறோம்.

30 வருடங்களாக நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது, இந்திய மீனவர்களால் ஏற்படும் இழப்புகள் பற்றி அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் கச்சதீவை மீட்கக் கோரும் அவரின் கோரிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். அது நியாயமான கோரிக்கை அல்ல.

கச்சதீவு 1974ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நட்பு ரீதியாக இலங்கைக்குக் கொடுத்த ஒரு தீவு. கிட்டத்தட்ட 50 வருடங்களாகின்றன. இதுவரையில் இந்த கச்சதீவு தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்டு அரசாலும் எந்தவொரு தீர்வையும் கண்டுகொள்ள முடியவில்லை. எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. அந்தத் தீவு மக்கள் இல்லாத ஒரு சிறிய தீவு. இந்த சிறிய தீவு தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க முடியாத அரசாங்கங்கள் எப்படி எங்கள் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும். அந்தத் தீவு நெடுந்தீவு அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட ஒரு தீவாக வரைபடத்தில் இருக்கின்றது,

அந்தத் தீவால் எங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. அந்தத் தீவை பயன்படுத்த இலங்கை அரசாங்கம் விடவில்லை. யுத்தத்தை பயன்படுத்தி, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அந்தத் தீவில் எங்களைக் கால்வைக்க விடவில்லை. அந்தோனியர் கோவில் திருவிழாவிற்குப் போய்வரலாம். அதுதவிர ஏந்தவித பிரயோசனமும் இல்லை. அதற்காக இந்தியா கேட்கின்றது என்பதற்காக விட்டுக் கொடுக்க முடியாது. எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழலாம். வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் வரும் சந்தர்ப்பங்களில் சுற்றுலாவிற்காகவோ, கடற்பூங்காவாகவோ பயன்படுத்தலாம், மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடிக்கலாம் எதிர்காலத்தில் ஏதாவது செய்யலாம்.

தமிழக முதலமைச்சர் அவரது கோரிக்கையை தங்கள் சார்பில் விட்டிருக்கிறார். ஆனால் எங்கள் சார்பில் நாங்கள் அதை எதிர்க்கிறோம். இந்தியாவிற்கு கச்சதீவை கொடுக்கும் நிலையில் இலங்கை இல்லை. வடபகுதி மக்கள் தமிழ்நாட்டுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. பலாலி விமான நிலையமாக இருக்கலாம். இலங்கை  – தனுஸ்கோடிக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டமாக இருக்கலாம். கப்பல் சேவையாக இருக்கலாம். இவற்றையெல்லாம் இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை.  ஒருவேளை கச்சதீவை இந்தியாவிற்குக் கொடுக்கும் ஒரு நிலை வந்தால், வடபகுதியிலுள்ள இரண்டு இலட்சம் மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிவரும். அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. ஆழ்கடல் மீன்பிடி வாய்ப்புக்களும் இல்லை. அவர்கள் ஒரு சிறிய கடற்பரப்பிலேயே தங்கி வாழ்கின்றார்கள். அந்தக் கடற்பரப்பில் இந்திய றோலர்கள் வாரத்தில் 3 நாட்கள் அத்துமீறி நுழைந்து மீன்வளத்தை சூறையாடிக் கொண்டு போகிறார்கள். இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

கச்சதீவை அண்டிய கடற்பகுதியை குத்தகைக்கு கேட்கும் ஒரு நிலையும் இந்தியாவிடம் உள்ளது என பேச்சுவார்த்தையில் பங்குபற்றியவர்கள் வந்து சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை கச்சதீவை இந்தியாவிற்குக் கொடுக்கும் நிலை வந்தால், வடபகுதி மீனவர்கள் தொழில் இழக்கும் நிலை ஏற்படும். எனது கணிப்பின்படி இந்தியாவின் மூவாயிரம் றோலர் படகுகள் வந்து வளங்களை சுரண்டிக் கொண்டு போகின்றது. பெருமளவான அந்நியச் செலாவணி சம்பாதிக்கக்கூடிய இறால், நண்டு, கடலட்டை, கணவாய், மீன் வகைகளை சுரண்டிக் கொண்டு போகின்றனர். இவற்றுடன் குஞ்சு மீன்களையும் சூறையாடிச் செல்கின்றனர். ஒரு வருடத்தில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இந்தியாவினால் வடபகுதிக் கடற்பகுதியில் சூறையாடப்படுகின்றன.

கச்சதீவு: வரவேற்பும் எதிர்ப்பும்ஜெ.கோசுமணி

தலைவர்

தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கச்சத்தீவை விரைவில் மீட்பேன் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை வழங்கி இருக்கின்றது.  தொன்றுதொட்டு பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து, தொடர் தாக்குதலை நடத்தி  கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்,  பல கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன்கள், வளைகள், அனைத்தும் கொள்ளை  அடிக்கப்பட்டிருக்கிறது.  இதற்கான தீர்வாக தமிழக மீனவர்கள் கச்சத்தீவை மீட்பது தான் தீர்வு என்பதை  உணர்ந்து இருக்கிறார்கள். எனவே கச்சத்தீவை மீட்போம் என்ற தமிழக அரசின் வாக்குறுதி  மீனவ மக்களிடத்தில்  வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை வட கிழக்கு மாகாணப் பகுதி மற்றும் சிங்களவர், மீனவர்கள் வாழ்கின்ற பகுதியில் இருக்கக்கூடிய, மீனவர்கள்  மிகப்பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டம் நடத்திவரும் சூழலை நாம் பார்க்கிறோம்.  தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கின்ற போது இலங்கையில் வாழுகின்ற மீனவர்களும்,  நம் தொப்புள் கொடி உறவு என்கின்ற அடிப்படையில் மீன்களை பிடிக்க வேண்டுகிறேன்.

இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தாமல் மீன் பிடித்தால் இருநாட்டு மீனவர்களுக்கும் வாழ்வளிக்கும். எனவே இலங்கையில் உள்ள மீனவர்களுக்கும் இந்திய தமிழக மீனவர்களுக்கும், இந்திய அரசும், இலங்கை அரசும், முறையான மீன்பிடி வழிகாட்டும் ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு நாட்டு அரசு வழி காட்டும் வழியில் மீன் பிடித்தால் இந்த பிரச்சினைக்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும். எனவே  இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரு முறையான, சட்டபூர்வ  மீன்பிடி முறையை,  சட்ட திட்டங்களை வகுத்து இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கும் வகையில் மீன்பிடி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான், தமிழக மீனவர்களின் கோரிக்கை.

இரண்டு நாட்டு அரசும் இதை செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கச்சத்தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிப்பார்கள்,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு தெளிவான அழுத்தங்களைக் கொடுத்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Tamil News