வடகிழக்கினைப் பயன்படுத்தி இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த சீனா முயல்கின்றதா? | மட்டு.நகரான்

இந்தியா மீது ஆதிக்கம்மட்டு.நகரான்

இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த முயலும் சீனா

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியானது தீவிரம் பெற்று வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடியை வெறுமனே சிங்கள தேசம் மட்டும் எதிர்கொள்ளும் நெருக்கடியாக நோக்கமுடியாது. இந்த நெருக்கடியானது தமிழர் தாயகம் உட்பட முழு இலங்கைக்குமான நெருக்கடியாகவே பார்க்கப்பட வேண்டும்.

இலங்கையில் அரசியல் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தினை மீட்கமுடியும் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதை காணமுடிகின்றது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதும், மேற்கு நாடுகளும் அமைப்புகளும் அதற்காகவே காத்திருந்தவை மாதிரி, வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருந்தன. குறிப்பாக, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு, புதிய பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறின.

அரசாங்கத்தை பொறுப்பெடுத்து, நாட்டைச் சீராக்குவதுதான் தன்னுடைய முதல் பணி என்று கூறிக் கொண்டு பதவிக்கு வந்த ரணிலுக்கு, ராஜபக்சக்களோடும் அவர்களின் ஆதரவுத் தரப்புகளோடும் வேலை செய்வது, எவ்வளவு சிக்கலானது என்று புரியத் தொடங்கி விட்டது. நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர் கொண்டிருக்கின்ற நிலையில், அது குறித்து எந்தவித விவாதத்தையும் நடத்தாமல், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், தங்களது எரிந்த வீடுகள் பற்றி மணிக் கணக்கில் பேசிக் கொண்டார்கள்.

இந்தியா மீது ஆதிக்கம்அதுபோல, வீடுகளை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரச செலவில் புதிய அடக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசியிருக்கின்றார். நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்துப் பொருட்கள் தொடங்கி அத்தியாவசியமான அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, புதிய  பிரதமர் கூட அது பற்றி பிரஸ்தாபிக்கின்றார்.

ஆனால், அது தொடர்பில் எந்தவித அக்கறையாவது பாராளுமன்றத்துக்குள் ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு இல்லை. மாறாக, மக்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, கடந்த காலத்தில் ராஜபக்ச யுகத்தில் தாங்கள் செயற்பட்டது மாதிரியே, மீண்டும் செயற்படுவோம் என்கிற நிலையில் இருக்கின்றார்கள்.

மக்கள் வீதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்காக அலைவது குறித்தோ, அவர்களின் பட்டினி குறித்தோ எந்தவித சிந்தனையையும் பாராளுமன்றத்துக்குள் ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்கள் வெளிப்படுத்துகிறார்கள் இல்லை. இதனால், ரணிலின் புதிய அரசாங்கமும்கூட, ராஜபக்சக்களின் பாரம்பரிய ஆட்சி அதிகார கட்டமைப்பின் நீட்சியாகவே இருக்கின்றது.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்கான மூலகாரணங்களை கண்டறிவதற்கான முன்னெடுப்புகளை யாரும் முன்னெடுக்க வில்லையென்ற கவலை இன்று நாட்டு தமிழ் மக்களிடம் காணமுடிகின்றது.

இந்த நாட்டில் கடந்த 30வருடகாலமாக தமிழ் மக்களை இலக்குவைத்து முன்னெடுக்கப் பட்ட யுத்தமும் அதன் பின்னரான காலப்பகுதியில் பொறுப்புக் கூறலிலிருந்து சிங்கள அரசுகள் விலகியதும் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காததுமே இன்றைய இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ற உண்மையினை ஏற்றுக்கொள்வதற்கு சிங்கள தேசம் தவறிவருகின்றது.

இன்று நாட்டில் ஏற்பாட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு வடகிழக்கினை சேர்ந்த புலம்பெயர் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தேசம், தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கும் போதே புலம்பெயர் மக்கள் இந்த நாட்டில் தமது முதலீடுகளை செய்யும் நிலையேற்படும் என்பதை ஏற்க மறுக்கும் நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதியானது சீனா போன்ற நாடுகளின் கவனத்தினை அதிகளவில் ஈர்த்து வருகின்றமை தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

சீனாவினை பொறுத்த வரையில் இலங்கையில் காலூன்றுவதற்கு கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது. ஏற்கனவே வடக்கில் காலூன்ற தேவையான தனது நடவடிக்கைகளை முன்னெடுத்த சீனா அதற்கு எதிரான அலைகள் ஏற்பட்டநிலையில் அதனை தொடராத நிலையில் தற்போது கிழக்கு பக்கம் பார்க்கும் நிலையினை காணமுடிகின்றது.

சீனாவின் கிழக்கு மீதான பார்வையினை இன்று தமிழ் தேசியத்தின் பால் உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. தமிழ் ஊடகங்களும் சீனாவின் கிழக்கு தொடர்பான கரிசனையினை எழுந்தமானதாகவே பார்க்கின்றது.

பல ஆண்டுகளாக, ராஜபக்சக்களின் மகத்தான திட்டங்கள் மற்றும் தவறாகக் கருதப்படும் ஊதாரித்தனம் ஆகியவற்றால் சீனா மிகப்பெரிய பயனாளியாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை மற்றும் நாட்டை இயங்க வைக்க தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை பெருமளவில் கடன் வாங்கியது.

ஆனால் அது விலையுயர்ந்த மற்றும் சாத்தியமில்லாத விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலை, விருந்தோம்பல் மற்றும் பொது நிதிகளை மேலும் பிழிந்தெடுக்கும் அத்தகைய வசதிகளை உருவாக்குவதற்கு பெரும் தொகையை வீணடித்தது. மேலும் கட்டப்பட்டவற்றில் பெரும்பகுதி, பெரும் இழப்பைச் சந்தித்த பிறகும் சீனக் கடன்களுக்குச் சேவை செய்யத் தவறியதாலும் கைவிடப்பட்டது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடான சீனா மட்டுமே இதில் வெற்றி பெற்றுள்ளது. பீஜிங்கின் கடன் – பொறி இராஜதந்திரம் மீதான விமர்சனங்களையும் எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்தியப் பெருங்கடல் தீவு தேசத்தில் பெரிய அளவிலான சீன முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக  சீனாவில் நன்கு விரும்பப்பட்ட இலங்கைத் தலைவராக மகிந்த திகழ்ந்தார்.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மாகாணத்தில் சீனா தனது காலை விரிக்கும் நிலையினை காணமுடிகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீன தூதுவர் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து சென்றுள்ளார். பல இடங்களுக்கு இரகசிய விஜயத்தினையும் மேற்கொண்டு இரகசிய சந்திப்பினையும் மேற் கொண்டுள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம் செய்யும்போது பாதுகாப்பு என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். ஆனால் சீன தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதந்த போது இராணுவத் தளபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பினைவிட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான பாதுகாப்புடன் கிழக்கு மாகாணத்திற்கு சீனத்தூதுவர் வரவேண்டிய அவசியம் என்ன?

இதுவரையில் கிழக்கு மாகாணத்திற்கு எந்த விஜயமும் மேற்கொள்ளாத சீனத்தூதுவர் நாடு பொருளாதார நிலையில் மிகவும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த வேளையில் கிழக்கில் எதற்காக காலூன்ற முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள் என்கின்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீன தூதுவர் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்ததுடன் அங்கு தமிழ் நாட்டின் உதவிப்பொருட்கள் வருவதற்கு முன்பாக சீன மக்களின் உதவி என்ற நாமத்துடன் நிவாரணப்பொருள்கொண்ட பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசியல் வாதிகளை சந்திக்காது சிவில் அமைப்புகளையும், பொது அமைப்புகளையும், அதிகாரிகளையும் மட்டுமே சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அதன்போது பல விடயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை முன்னெடுப்பதற்கான வளங்கள் அதன் கொள் நிலைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் பல்வேறு அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பாடும் அரசசார்பற்ற அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்போது இந்தியாவின் கிழக்கின் பிரசன்னம் குறித்தும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரை யாடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பொருளாதார நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில் வடகிழக்கிற்கு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களிடம் அழைப்புகளை விடுத்து வரும் நிலையில், கிழக்கு நோக்கி சீனாவின் பார்வை திரும்பியுள்ளமை பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவருகின்றது.

வடகிழக்கில் தமிழர்களின் போராட்டத்தினை சிதைப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவிய சீன அரசாங்கம் இன்று வடகிழக்கில் தமிழ்தேசியம் சார்ந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தி தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கையினை வலுவிழக்கச்செய்யும் சூழ்நிலையினை ஏற்படுத்து முனைகின்றதா? அல்லது இந்தியாவின் மீது ஆதிக்கத்தினை செலுத்த வடகிழக்கினை எதிர்காலத்தில் பயன்படுத்த முனைகின்றதா போன்ற பல்வேறு கேள்விகள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இவற்றினை எதிர்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை சீனாவின் நடவடிக்கையினை பொறுத்தே தீர்மானிக்க முடியும். எனினும் இது தொடர்பில் தமிழ் தேசிய பரப்பில் செயற்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Tamil News