வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் விகாரை வைப்பதற்கு எதிராக நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”மக்கள் சாப்பிட வழியில்லை உணவுக்கு, எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு என அலைகின்றார்கள். விலைவாசி ஏற்றம், மின்சார பற்றாக்குறை, இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அரசாங்கமும், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் தங்களுடைய வேலைகளை அதாவது காணி பறிப்பு வேலைகளையும், மதத் திணிப்பு வேலைகளையும், கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்படியான நடவடிக்கையால் மக்கள் கஷ்டத்தின் மத்தியில் துவண்டு போய் இருக்கின்றார்கள். உங்களுக்கு தெரியும். மூன்று தினங்களுக்கு முதல் வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் நில அளவை திணைக்களம் அளக்க வந்த போது அங்கு நாங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கான வழியிலே அதை மீட்க முடிந்தது. ஆனால் எப்போது திரும்ப வருகின்றார்களோ தெரியாது.
அதே போல் இன்றைக்கு குருந்தூர் மலையில் பகிரங்கமாக ஒரு புத்தர் சிலையை வைக்கப் போவதாக அறிவித்துவிட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் கூட இங்கே வந்து தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்படியான நேரத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு அறுபது பேருக்கு மேல் வந்து உடனடியாக அவர்களை ஒரு இடத்திலும் நுழைய விடாமல் இப்படியான விழாக்கள் போன்ற நடவடிக்கைகளை செய்யவிடாமல் புத்த மத திணிப்புகளை மேற்கொள்ளப்படாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.
ஈற்றில் எங்களுக்கு பதில் வழங்கிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அல்லது அதனோடு சேர்ந்த காவல்துறையினர் எல்லோருமாக கூறிய ஒரு பதில் தாங்கள் உடனடியாக நிறுத்துகின்றோம் என்றும் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் உட்பட இதனோடு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளை அழைத்து இதற்கான ஒரு சரியான முடிவு கிடைத்ததன் பின்பு தாங்கள் இந்த பணிகளை தொடர்வதாக கூறி இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
இப்போது இங்கே வந்து பார்த்த போது ஒன்று தெரிகிறது. இங்கே இருந்த எங்களுடைய சைவ அடையாளங்களும் இல்லை. இப்படியான ஆக்கிரமிப்பானது சிங்கள, பௌத்த இனவாதிகளிடம் ஊன்றிப் போய் எங்களுடைய வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை இன்னும் பறித்து கொண்டிருக்கிறார்கள்.
மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் மக்களுடன் சேர்ந்து மிகவும் சிரமத்தின் மத்தியிலே இதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்” என தெரிவித்தார்.