தமிழ் தேசியத்திற்காக தன்னை ஆகுதியாக்கிய அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ | மட்டு.நகரான்

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோமட்டு.நகரான்

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ நினைவுகளுடன்

தமிழ் தேசிய விடுதலையை நோக்கிய பாதையில் இழப்புகள் என்பது பாரியதாகவே இருந்து வந்தது. அந்த இழப்புகள் என்றும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் விருட்சங்களாக நின்று துணைபுரிந்து கொண்டே வரும் என்பது தமிழ் தேசிய ஆர்வலர்களின திடமான நம்பிக்கையாகும்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் சுவடுகளை அழிப்பதற்காக சிங்கள தேசம் கடந்த காலத்தில் மேற்கொண்ட அழிவுகள் என்பது ஈடுசெய்ய முடியாததாகவே இருந்து வருகின்றது.

பலரின் இழப்புகள் இன்று அவர்களின் தேவையினை உணர்ந்து நிற்கும் அளவுக்கு அந்த இழப்பானது தமிழ் மக்களுக்கான பாரிய இழப்பாகவே பார்க்கப்படுகின்றது. அவ்வாறானதொரு இழப்பே 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி கிழக்கு மாகாண தமிழ் மக்களையே நிலைகுலைய வைத்த இழப்பாக இன்றுவரை இருந்து வருகின்றது.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் இழப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு கரும்புள்ளி கொண்ட நாளாகவே இருந்து வருகின்றது. கிழக்கில் தமிழ் தேசியத்தின் பால் உறுதிப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு பாலமான ஒருவரின் இழப்பு என்பது உண்மையில் தமிழ் தேசியத்திற்கான இழப்பாகவும் அவரின் இழப்பினை நோக்கமுடியும்.

1983 களில் யுத்தம் தன் அகலக்காலை நீட்டியபோது சிங்கள பேரினவாதத்தினால் கிழக்கில் தமிழர்கள் கருவறுக்கும் நிலையேற்பட்டபோது அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளார் கிழக்கு மண்ணில் தனியொருவராய் நின்று தமிழ் மக்களின் உரிமைகளுக்காய், விடுதலைக்காய் உண்மைப் பணியாற்றினார் என்பது மறுக்கவோ மறக்கவோ முடியாத உண்மையாகும்.

மட்டக்களப்பு புளியந்தீவினை பிறப்பிடமாக கொண்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும், உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார். தனது குருகுலக் கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று 1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

உதவிப் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவாலயத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப் பொறுப்பாளராக செயலாற்றினார் 1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார். இதே காலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார். 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார்.  மற்றவர்கள் சொகுசாக வாழும் நிலைமையினைக் கொண்ட வசதி படைத்த குடும்பத்தில் பிள்ளையாகயிருந்த போதும் இறைசேவைக்கும் தமிழர்களுக்காகவும் தனது வாழ்வினை முழுமையாக அர்ப்பணித்த ஒருவராகவே பார்க்கப்பட வேண்டும்.

வடகிழக்கு கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் பல ஆயுதக்குழுக்கள் தோற்றம்பெற்று தமிழ் தேசியம் என்ற பெயரில் இயங்கிய போதிலும் காலப்போக்கில் அவர்கள் தங்களது கொள்கையிலிருந்து விலகி சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிய நிலையில் அதன்மூலமும் தமிழர் தேசியம் சந்தித்த இழப்புகள் என்பது மிகவும் அதிகமாகும். சிங்கள தேசம் ஒரு புறமாகவும் காட்டிக்கொடுக்கும் இன்று தமிழ் தேசியம் பேசும் கூலிப்படைகளினாலும் அன்று கிழக்கு தமிழ் மக்கள் சந்தித்த இன்னல்கள் என்பது அதிகமாகவும். அக்காலப்பகுதியில் இயங்கிய தமிழ் தேசியத்திற்காக ஆயுதம் தூக்கியவர்கள் பின்னர் சிங்கள தேசித்தின் கைக்கூலிகளாக மாறி தமிழ் தேசியவாதிகள் மீது தமது ஆயுதங்களை திருப்பியதால் எதிர்கொண்ட இழப்புகள் ஆயிரம்.

இக்காலப்பகுதியில் தமிழர்களுக்கான உண்மையான சக்தி தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை உணர்ந்துகொண்ட அவர், அந்த சக்திதான் தமிழ் மக்களுக்கு காவலரணாகயிருக்கும் என்பதை உணர்ந்து அதனை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை முன்னெடுத்துவந்தார்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் வடகிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தி தமிழ் தேசிய கோரிக்கையினை மழுங்கடிக்கும் செயற்பாடுகள் இக்காலப்பகுதியில் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கிழக்கினைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக் கிடையே இனமோதலை ஏற்படுத்திவிட்டு கிழக்கில் பெரும்பான்மையின்தை கால்ஊன்றச் செய்வதற்கான செயற்பாடுகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்-முஸ்லிம் பகுதிகளில் தமிழ் மக்களை துரத்திவிட்டு அங்கு சிங்களவர்களை குடியமர்த்தி தாங்கள் முஸ்லிம்களின் காவலர்கள்போல் காட்டமுற்படும் நிலைகளே இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு சவாலான விடயமாக சிங்கள பெரும்பான்மை மாற்றமடைந்து வருகின்றது.

இவற்றிற்கெல்லாம் முதுகெலும்பாக இருந்தவர்கள் இந்த ஆயுதக்குழுக்களாகும். குறிப்பாக இந்த பங்களிப்பினை அதிகளவில் சிங்கள தேசத்திற்கு வழங்கியவர்களாக ஈபிஆர்எல்எப், ஈபிடிபி போன்ற இயக்கங்கள் பாரியளவில் பங்களிப்பு வழங்கிவந்தன. இவ்வாறான நிலையில் தமக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களையும் தமிழ் தேசியத்தின் உண்மையினை உணர்ந்தவர்களையும் தேடித்தேடி படுகொலை செய்தது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். அத்துடன் அவ்வாறானவர்களை மக்கள் முன் படுகொலைசெய்து அவர்களை உழவு இயந்திரங்களில் கட்டியிழுத்துச் சென்று தமிழ் மக்கள் மத்தியில் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வந்தனர்.

19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியானது இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலை வேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது? மக்களின் நிலை என்ன? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் அருட்தந்தை சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றிவளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் கொண்டுசெல்லப்பட்டு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமிய பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் தற்போது ஈபிஆர்எல்எப். தலையையிலான 3ஸ்ரார் என்னும் பெயரில் இயங்கிய ஆயுதக்குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை அலுவலகத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர்  அருட்தந்தை சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம் தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்றிலிருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை.

இதேபோன்று கிழக்கில் சிங்கள இராணுவத்தினால் நடாத்தப்பட்ட நற்பட்டிமுனை, உடும்பன்குளம், கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை, மயிலந்தனை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் அருட்தந்தை சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. அத்துடன் ஆயுதக்குழுக்கள் முன்னெடுத்த படுகொலைகள் மற்றும் கடத்தல்களை சர்வதேசம் வரையில் கொண்டு சென்றவர்.

அத்துடன் கிழக்கில் இனங்களிடையே சிங்கள அரசுகளின் தூண்டுதல்களினால் ஏற்படுத்தப்பட்ட இனமுரண்பாடுகளை தீர்ப்பதற்கு மக்கள் குழு என்னும் குழுவினை அமைத்து இரு இனங்களிடையே மட்டக்களப்பு நகரில் மோதல்கள் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவரை இன்று நினைவு கூருகின்றவர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் அருட்தந்தை சந்திரா பெர்னாடோ மட்டுமல்ல உண்மையான தமிழ் தேசிய தலைமையினை ஏற்றுக்கொண்ட வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் இதே ஆயுதக்குழுவினரே படுகொலை செய்தனர். இவர்களின் காலப்பகுதியில் இனமுரண்பாடுகளை உச்சம்பெறாத வகையில் சிறந்த முறையில் சமூகங்களை ஒன்றிணைத்து முன்கொண்டு சென்றனர்.

இவர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்தே 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் இனங்களிடையேயான முரண்பாடுகள் உச்சம் பெற்றன. சிங்கள தேசத்தின் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக அன்று இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஆயுதக்குழுவினர் அருட்தந்தை சந்திரா அவர்களை தேவாலயத்திற்குள் வைத்தே படுகொலை செய்தனர். இந்த படுகொலையை செய்தவர்கள் இன்று கிழக்கில் தமிழ் தேசியவாதிகளாக தம்மை இனங்காட்டிக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழியேற்படுத்தியுள்ளது.

இவ்வாறானவர்கள் இந்த மண்ணில் தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழ் தேசியத்தினை வெற்றிபெறச் செய்வதற்காகவும் முன்னெடுத்த செயற்பாடுகள் எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். கிழக்கில் அருட்தந்தை சந்திரா பெர்னாடோ போன்று தமிழ் தேசியத்திற்காக தன்னை ஆகுதியாக்கிய அனைத்து வீரமறவர்களின் குறிக்கோள்களும் வெற்றியடைய தமிழ் தேசிய கொள்கையுடன் உறுதியாக பயணிக்க வேண்டும் என்பதுடன் அருட்தந்தை சந்திரா பெர்னாடோ போன்றவர்களை படுகொலை செய்து சிங்கள ஆதிக்கத்தின் கைக்கூலிகளாகயிருந்து இன்று தமிழ் தேசியம் பேசமுற்படுவோர் மக்களினால் நிராகரிக்கப்பட வேண்டும்.

Tamil News