குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? | பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் விசேட செவ்வி

குருந்தூர் மலை

குருந்தூர் மலை யாருக்கானது?

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.

இவை குறித்தும் குருந்தூர் மலைப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும் மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் இவ்வாரம் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி:

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் தவிக்கும் இன்றைய நிலையிலும், நீதிமன்ற உத்தரவையும் மீறி குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் துடிப்பதற்கு காரணம் என்ன?

பதில்:

பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றுக்குள் நாடு இருக்கும் நிலையில் இவ்வாறு இவ்வாறான ஒரு பௌத்த ஆலயத்தை மீளுருவாக்கம் செய்து புத்தர் சிலையை வைத்து வழிபட முற்படுவது சரியானது தானா என்ற கேள்வி வருகின்ற போது – பாரிய பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி பொருளாதார செழிப்புள்ள காலமாக இருந்தாலும் சரி பௌத்த – சிங்கள மக்கள் வசிக்காத ஒரு இடத்தில் பௌத்தம் சார்ந்த ஒரு அழிபாடுகள் கண்டுபிடிக்கப்படுமானால் அவற்றை மீளக்கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைப்பதை ஏற்பதாக தொல்லியல் சட்டம் கூறவில்லை.

அநுராதபுரத்தில் 20 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் சைவ ஆலயங்கள், திராவிட கலை மரபில் கட்டப்பட்டவை. அந்த ஆலயங்களின் அழிபாடுகள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாகக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட்டதே தவிர, அவை மீள அமைக்கப்பட்டு வழிபாட்டுக்குரிய ஆலயங்களாக அமைக்கப்படவில்லை. அவற்றில் ஒரு காளிகோவிலைத் தவிர ஏனையவை எங்கிருந்தன என்பது கூட அடையாளங்காண முடியாதளவுக்கு அதனுடைய நிலைமை காணப்படுகின்றது.

எனவே குருந்தலூரில் பௌத்த எச்சங்கள் காணப்படுமானால் அவற்றை கண்டறிந்து ஆய்வு செய்து பாதுகாத்து ஒரு மரபுரிமைச் சின்னமாகக்கொள்ள வேண்டுமே தவிர, முன்னொருகாலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான  ஒரு சின்னமாகக் கருத்திற்கொண்டு அதனை மீளக்கட்டி ஒரு ஆலயமாக மாற்றுவது தொல்லியல் நடைமுறையின் சட்டங்களுக்கு முரணானதாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் ஏன் இப்பொழுது இந்த ஆலயத்தை மீளுருவாக்கம் செய்கின்றார்கள் எனப் பார்க்கின்ற போது, அரசியல் விமர்சகர்கள் பல காரணங்களைக் கூறலாம். ஆனால், என்னுடைய பார்வையில் – இலங்கையின் வரலாற்றில் என்றுமே இல்லாதளவுக்கு ஒரு பொருளாதார சீரழிவு உருவாகியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பாதிக்கின்ற ஒன்றகவே இந்த பொருளாதார வீழ்ச்சி காணப்படுகின்றது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தென்னிலங்கை மக்கள் போராடிய அளவிற்கு இதுவரை தமிழ் மக்கள் போராட முன்வரவில்லை என்ற ஒரு விமர்சனம் காணப்படுகின்றது. ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிவுக்கு வரும் என எவரும் எதிர்பார்க்க முடியாது.

இந்த நிலையில் தென்னிலங்கையில் அரசுக்கு எதிராக எழுகின்ற இந்தப் போராட்டங்களில் இன, மத, மொழி வேறுபாடுகளைக் களைந்த நிலையில் இந்த நாட்டிலுள்ள அனைவரும் இணைந்து செயற்படவேண்டிய ஒரு நிலை நிச்சயமாக உருவாகும். ஆகவே அவ்வாறான போராட்டங்களை மழுங்கடிப்பதற்கு அல்லது முன்முயற்சியாக குறுந்தலூர் பௌத்த விகாரையை மீளக்கட்டும் செயற்பாடு இருக்கும் என நான் கருதுகின்றேன். அல்லது நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து போனாலும் பௌத்த மதத்துக்கு நாம் என்றும் துணையான முன்னுரிமை கொடுப்போம் என்ற ஒரு செய்தியை தீவிர சிங்கள – பௌத்த மக்களுக்குச் சொல்வதற்காகவும் இந்த முயற்சி அமைந்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

கேள்வி:

இங்கு ஏற்கனவே பௌத்த கோவில் கோபுரம் என்பன அமைக்கப்பட்டிருக்கின்றது. அவைகூட சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டவைதானா?

பதில்:

நீதிமன்ற உத்தரவின்டி இங்கு பௌத்த கோவில் ஒன்றை அமைக்க முடியாது. இலங்கையில் பல இடங்களில் பண்பாட்டுச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பௌத்த மதம் சார்ந்தவை. அதனால், அந்த இடங்களில் எல்லாம் பௌத்த ஆலயங்களை அமைத்தால் இலங்கை முழுவதும் சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாகத்தான் அது பார்க்கப்படும். ஆனால், தொல்லியல் திணைக்கள வழமையின்படி பௌத்த அல்லது இந்து மதம் சார்ந்த ஆதாரங்கள் காணப்படும் போது அதனை தேசிய மரபுரிமையாகக் கருத்திற்கொண்டு அவற்றை மரபுரிமைச் சின்னமாகப் பிரகடனம் செய்வது அல்லது அந்த சின்னங்களை இருக்கின்ற நிலையிலேயே பாதுகாப்பது என்பதுதான் நடைமுறை.

உதாரணமாக பொலநறுவையில் 12 க்கும் அதிகமான சைவ ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் எதனையுமே பழைய நிலைக்கு மறுசீரமைத்து வழிபாட்டுக்குரியதாக மாற்றவில்லை. பெரும்பாலும் அழிவடைந்தமையாலும், வழிபாட்டுக்குரிய ஆலயமாக இருந்தமையாலும் தமிழ் மக்கள் அதனை வழிபட்டுவருவதாலும் தொல்லியல் திணைக்களம் அதற்குத் தடையாக இருக்கவில்லை. அதேபோலத்தான் குருந்தலூரில் பௌத்த சின்னங்கள் சிங்கள மக்களுக்குரியதா, தமிழ் மக்களுக்குரியதா என்பது விரிவாக ஆராயப்படவேண்டிய விடயம். அது யாருக்குரியதாக இருந்தாலும் அந்த ஆலயத்தை மீளக்கட்டி ஒரு கோபுரம் அமைத்து ஒரு முழுமையான பௌத்த ஆலயமாக மாற்றுவது நீதிமன்றக் கட்டளைக்கு முரணானது. தொல்பொருள் திணைக்களம் பின்பற்றிவருகின்ற நடைமுறைகளுக்கும் முரணானதாகத்தான் அது உள்ளது.

ஆகவே அந்த இடத்தில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டால் அதனை ஒரு மரபுரிமைச்சின்னமாகக் கருத்திற்கொண்டு – அவற்றைக் கண்டறிந்து ஆராய்ந்து பாதுகாத்து இவை உள்ள நிலையில் அவற்றை வைத்திருக்க வேண்டுமே தவிர – மீளுருவாக்கம் செய்து அதுவும் பௌத்த மக்கள் வாழாத ஒரு இடத்தில் ஒரு வழிபாட்டுக்குரிய இடமாக உருவாக்கி அந்தப் பகுதிக்கு சிங்கள மக்கள் வந்து செல்வதற்கோ அல்லது குடியேற்றுவதற்கோ எடுக்கப்படும் முயற்சி நடைமுறைக்குப் பொருத்தமற்றது என்றுதான் நாம் கூறவேண்டும்.

கேள்வி:

இந்தப் பகுதியில் இருந்ததாக தொல்பொருள் திணைக்களம்  தெரிவிக்கும் பௌத்த கோவில் ஆதியில் சிங்களவர்களுக்குரியதாக இருந்ததா அல்லது தமிழர்களுடையதாக இருந்திருக்குமா?

பதில்:

என்னுடைய பார்வையில் மட்டுமன்றி தென்னிலங்கை அறிஞர்களுடைய பார்வையிலும் பௌத்தம் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு அந்நிய மதமாக இருக்கவில்லை. இன்று குறுந்தலூர் ஆலயம் அமைந்திருக்கும் சுற்றாடலைப் பார்த்தால் தெரியும் அந்த மலையின் அடிவாரங்களிலும் வயற்பரப்புக்களிலும் கந்தரோடை போன்ற இடங்களிலும் தென்னிந்தியாவை ஒத்த ஆதி மக்கள் வாழ்ந்தமைக்கான இழிபாடுகள்தான் காணப்படுகின்றன. நம்பகத்தன்மையான 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களில் தமிழர்கள் பௌத்த குருமாருக்கு கற்படுக்கைகள், குகைகள் அமைத்துக்கொடுத்தமை பற்றிய நம்பகரமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களில் சங்ககாலத்தையொத்த குறுநிலத் தலைவர்களின் ஆட்சி இருந்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன.

சேனக பண்டாரநாயக்க போன்ற அறிஞர்கள் சங்ககாலத்தையொத்த ஆட்சி இருந்தமை பற்றி கூறியிருக்கின்றார்கள். பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்துகின்ற பாளி இலக்கியங்கள் கூட தமிழர்கள் பௌததர்களாக இருந்தமைக்கும் பௌத்த மதத்துக்குத் தொண்டாற்றியமை பற்றி குறிப்பிடுகின்றன. உதாரணமாக 1,500 ஆண்டுகளுக்கு முன் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த பரிந்த உத்தமர் எனற மன்னரின் ஆதிக்கம் வட இலங்கையில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் பரவியிருந்தமையை உறுதி செய்யும் ஆதாரங்கள் உள்ளன. இந்த தமிழ் மன்னர்கள் பௌத்தத்துக்குத் தொண்டாற்றியமையால் அவர்கள் புத்த தேசர் என அழைக்கப்பட்டமைக்கும் ஆதாரங்கள் உள்ளன. இவை பின்னரும் தொடர்ந்திருந்தமைக்கும் ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக வெல்கம் விகாரையில் தமிழ் கல்வெட்டுக்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகவே இந்த பௌத்தம் என்பது தமிழ் மக்களுக்கோ இந்து மதத்துக்கோ அந்நியமானதல்ல. பிரித்தானியர் இந்து மதம் என்ற சொல்லுக்குள் பௌத்தம், சமணம், வைஸ்ணவம் என்பவற்றையும் உள்ளடக்கிய நிலையில்தான் பார்த்திருக்கின்றார்கள். ஆகவே குருந்தலூரில் இருக்கின்ற இந்த பௌத்த ஆலயம் தமிழர்களுக்குரியதா அல்லது சிங்களவர்களுக்குரியதா என்பது ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களான பேராசிரியர்கள் பரணவிதாரண, நந்தா விஜயசேகர, சேனக பண்டாரநாயக்க போன்றவர்கள் வடக்கில் காணப்படும் பௌத்த கட்டடக்கலை மரபுகள் தென்னிந்தியாவுக்குரிய தனித்தன்மைவாய்ந்தவை எனக் குறிப்பிடுகின்றார்கள். ஆகவே குருந்தலூரில் காணப்படும் பௌத்த ஆலயம் எனக்குத் தெரிந்த வரையில் தென்னிந்திய பௌத்த மகாஞான கலை மரபுக்குரியதாகவே உள்ளது.

நான் இரு தடவைகள் அங்கு சென்றிருக்கின்றேன். சில சந்தர்ப்பங்களிலே அங்கு தமிழ் கல்வெட்டுக்கள் வரலாம். குருந்தலூர் மலைக்கு அண்மையிலுள்ள கோவில் ஒன்றின் அத்திபாரத்திலிருந்து சமீபத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று தமிழர்கள் பொறித்த கல்வெட்டாக காணப்பட்டது. தமிழர்கள் பௌத்தத்துக்கு செய்த தொண்டு குறித்ததாகவே இந்தக் கல்வெட்டுக்கள் இருந்தன. ஆகவே இந்த குறுந்தலூர் தொடர்பில் ஆழமாக ஆராயும்பொழுது அது தமிழர்களுக்கு உரியதா அவ்வது சிங்கள மக்களுக்குரியதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். எப்படியிருந்தாலும் இங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள் தேசிய மரபுரிமை அடையாளங்கள். அதனை நாம் மரபுரிமை அடையாளமாகவே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே தவிர நடைமுறைக்கு முரணாக இதனை ஒரு வழிபாட்டு ஆலயமாக மாற்ற முற்படுவதைத்தான் இங்கு ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மக்கள் பார்க்கின்றார்கள்.

Tamil News