மலையக மக்களும் சவால்களும் | துரைசாமி நடராஜா

மலையக மக்களும் சவால்களும்துரைசாமி நடராஜா

மலையக மக்களும் சவால்களும்

ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உக்கிரமான மோதல் இடம்பெற்று வருகின்றது. இத்தகைய மோதல் நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மேலும் ஆட்டம்  காணும் நிலைமை உருவாகியுள்ளது. சுற்றுலாத் துறையின் பாதிப்போடு இலங்கையின் தேயிலை ஏற்றுமதித் துறையும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது. இந்நிலையானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களிலும் தாக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகின்றது.

மலையக மக்களும் சவால்களும்ரஷ்யா, உக்ரேன் மோதல் உலகளாவிய ரீதியில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இம்மோதல் காரணமாக பல்லாயிரக் கணக்கான படையினரும், அப்பாவிப் பொது மக்களும் உயிரிழந்துள்ளமை வரலாற்றில் கறை படிந்த ஏடுகளேயாகும் என்பதை மறுப்பதற்கில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் தமது நாட்டின் 1300 க்கும் மேற்பட்ட படை வீரர்கள் வரையில் உயிரிழந் துள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் வெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மோதலால் சிறுவர்கள் பலரும் உயிரிழந்துள்ளமை கண்களைக் குளமாக்கும் ஒரு நிகழ்வேயாகும். உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலின்  காரணமாக அந்நாட்டை விட்டு 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான மோசமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

உக்ரேனிலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் ஐரோப்பாவிலுள்ள வறிய நாடான மோல்டோவாவிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டின் சனத்தொகை நான்கு வீதத்தால் அதிகரித்திருக்கின்றது. இது மோல்டோவாவின் பொருளாதாரச்  சுமையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உக்ரேன் சிறியதொரு நாடாக  இருந்தபோதும் அந்நாட்டின் வக்கிரம், நாட்டைப் பாதுகாக்கும்  உணர்வு அதிகமாகவே காணப்படுகின்றது. இதனால்தான் அந்நாட்டு மக்கள் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு அணிதிரண்டு வருகின்றனர். இதேவேளை ரஷ்யா பாரிய விமானப்படையைக் கொண்டுள்ளபோதும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தரை மார்க்கமாகவே அதிகம் போரிட்டு வருவதாக  அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் தான் சந்தித்த அவலம் போன்ற ஒன்றை ரஷ்யாவுக்கு உக்ரேன் மண்ணில் பரிசளிக்க அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் முயற்சித்து வருவதாகவும் வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இந்நிலையில் உக்ரேனிய படையெடுப்பையடுத்து ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடுமென்றும், அவ்வாறு பயன்படுத்தினால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்படும் எனவும் நேட்டோ செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்றுமதி நிலைமைகள்

இலங்கை தேயிலை ஏற்றுமதித் துறையில்  நீண்ட காலமாகவே முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாக விளங்குகின்றது.1959 இல் இலங்கையின் அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்கு 59.6 வீதமானதாக இருந்தது. இது 1969 இல் 57.8,1974 இல் 39.1, 1976 இல் 43.6, 1982 இல் 29.6, 1986 இல் 27.2, 1988 இல் 26.2, 1989 இல் 24.3, 1990 இல்.24.9 வீதமாக அமைந்திருந்தது. 1989 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 13,644 மில்லியன் ரூபாய்கள் இலங்கைக்குக் கிடைத்தன. 1977 இல் தேயிலை ஏற்றுமதி வருவாயின் மூலம் 53 வீத வருமானம் இலங்கைக்குக் கிடைத்ததோடு, இவ்வருமானமானது 1960  -1975 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 65 வீதமாகவும், 1980 – 1989 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 30.9 வீதமாகவும காணப்பட்டது. எனினும் பின்வந்த காலங்களில்  வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலமாக கிடைக்கின்ற வருமானம்,  ஆடை ஏற்றுமதி வருமானம் என்பன தேயிலைத் தொழிற்றுறையின் வருமானத்தை பின்தள்ளி இருக்கின்றன. 1977 இற்குப் பின்னர் 62 வீதமான தேயிலை மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டது.

1990 இல் ரஷ்யா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு 52.04 வீதமான  தேயிலையும், ஆசிய நாடுகளுக்கு 10.41 வீதமான தேயிலையும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் 9.96, ஆபிரிக்க நாடுகள் 9.50, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா 6.33, ஏனைய நாடுகள் 11.76  வீதமான தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தன. இதேவேளை ரஷ்யா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு 2000ஆம் ஆண்டு 53.2, 2010 இல் 56.12, 2013 இல் 68.39 வீதமான தேயிலை ஏற்றுமதி இடம்பெற்றது.

மலையக மக்களும் சவால்களும்ஏனைய நாடுகளுக்கு இதனைக் காட்டிலும் குறைந்தளவான தேயிலையே இலங்கை ஏற்றுமதி செய்திருந்தது. 1980 இல் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் 0.15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், 1990 இல் 0.33 பில்லியன் டொலர்களாகவும்,  2000 இல் 0.425, 2010 இல் 1.43 பில்லியன் டொலர்களாக இது அமைந்திருந்தது. 2015 இல் ஏற்றுமதி வருமானம் 1.52 பில்லியன் டொலர்களாகும். ரஷ்யா 2016 இல் இரண்டு இலட்சத்து 45 ஆயிரம் டொலர் பெறுமதியான தேயிலையை இலங்கையிடமிருந்து இறக்குமதி செய்திருந்தது. இதனடிப்படையில் வருடாந்தம் 2500 கோடி ரூபாய் பெறுமதியான தேயிலையை இலங்கை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் உக்ரேனுக்கு 427 கோடி ரூபாய் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது.

எனினும் ரஷ்யா, உக்ரேன் மோதல் நிலைமையால் இவ்விரு நாடுகளுக்குமான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதக விளைவுகளைச் சந்திக்கும் அபாயம் மேலெழுந்து வருகின்றது. இந்நிலை காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமான மார்க்கம் பாதிப்படையக் கூடுமெனவும், இந்நிலையானது இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டலில் தாக்கத்தினை ஏற்படுத்துமெனவும் கருத்துக்கள்   வெளியிடப்பட்டு வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளினால் இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானம்  ஏற்கனவே வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறையை நாம் அடையாளப்படுத்த முடியும். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி கருதி நீண்ட காலமாகவே பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிரசாரங்கள் பலவும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டன.   ‘இலங்கையர் ஆகுங்கள்’ என்ற பெயரிலான பாரிய இணைந்த ஊக்குவிப்புப் பிரசாரம் 2013 இல் இந்தியாவில் நடாத்தப்பட்டது. இதனைப் போன்றே ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய சுதந்திர பொதுநலவாய நாடுகளிலும் இப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரசாரத்தின் முதன்மை நோக்கம் தோற்றம் பெற்றுவரும் சந்தைகளில் இலங்கையை மிக முன்னுரிமை வாய்ந்த பயண நாடாக நிலைப்படுத்துவதேயாகும்.

இதற்கேற்ப உக்ரேன், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் கடந்த காலங்களில் இங்கு வருகை தந்ததுடன் இதனால் பெருமளவு அந்நியச் செலாவணியும் இலங்கைக்குக் கிடைத்தது. எனினும் கொரோனாவின் பின்னரான நிலைமைகளால் சுற்றுலாத்துறை தேக்கநிலை அடைந்திருந்த நிலையில் மீண்டும் பாரிய மிடுக்குடன் அரசாங்கம் இத்துறையை கட்டியெழுப்பி இருந்தது. எனினும் ரஷ்யா, உக்ரேன் மோதலானது சுற்றுலாத் துறையின் பின்னடைவிற்கு உந்துசக்தியாகி இருக்கின்றது. இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிப்பினால் அந்நியச் செலாவணி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவு காரணமாகவும் அந்நியச் செலாவணி வருகையானது கேள்விக்குறியாகியுள்ளது.

இது ஒரு புறமிருக்க ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இலங்கை அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்யும் நிலையில் அந்நாடுகளில் இடம்பெறும் மோதல் காரணமாக அங்கு பொருளாதார பாதிப்பு ஏற்படுமிடத்து தேயிலைக்கான கேள்வி குறைவடைவதோடு, தேயிலையின் விலை வீழ்ச்சி அடைவதற்கும் இது ஏதுவாகலாம் என்றும் கருதப்படுகின்றது. இத்தகைய நிலைமைகளால் பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கைகளின்போது அது தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை. ஏற்கனவே தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளின்போது தேயிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்து சம்பள உயர்வில் இழுபறி நிலையினை முதலாளிமார் சம்மேளனம் தோற்றுவித்திருந்தது. இந்நிலையில் சமகால நிலைமைகளால் இச்சிக்கல்கள் மென்மேலும் அதிகரிக்கும் நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

கோதுமைப் பயன்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே கோதுமை மாவின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. வேலைப்பழுவுக்கு மத்தியில் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உரொட்டி போன்ற உணவுகளையே தொழிலாளர்கள் பெரிதும் உண்கின்றனர். இதன் காரணமாகவே கோதுமை மாவினை மானிய விலையில் தொழிலாளர்களுக்குப்  பெற்றுக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. எனினும் இத்திட்டம் பூரண வெற்றி பெறவில்லையென்றும் கண்டனக் குரல்கள் எதிரொலித்ததனையும் அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை அதிகளவான கோதுமை மாவினை இறக்குமதி செய்கின்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் நிலைமைகளால் கோதுமை இறக்குமதி பாதிப்படையுக் கூடிய அபாயம் உள்ளது.

இவ்வாறாக கோதுமை மாவின் இறக்குமதி பாதிக்கப்படும் நிலையில், பெருந் தோட்டத் தொழிலாளர்கள் இதனால் அதிகமான பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிநேரிடும்‌ என்றும் அஞ்சப்படுகின்றது. இதுபோன்றே மோதல் நிலைமைகளால் எரிபொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. எரிபொருட்களின் தட்டுப்பாடு மக்களை ஆத்திரமடையச் செய்துள்ள நிலையில், போக்குவரத்துக் கட்டணங்களும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அத்தோடு எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிலும் தாக்கத்தினை செலுத்தியுள்ளது. இதனால் வருமானம் குறைந்த பின்தங்கிய நிலையில் வாழும் மலையக சமூகத்தினர் பெரும்  பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை ரஷ்யா, உக்ரேன் மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் நாட்டில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, மின்துண்டிப்பு என்பவற்றின் காரணமாக ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் வெதுப்பகங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறாக நாட்டில் 60 வீதமான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்நிலை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் மாத்திரம் சுமார் 1500 உணவகங்கள் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிகின்றனர். இந்நிலையில் உணவகங்கள் மூடப்பட்டு வருவதால் இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளன. இத்தகையோர் மலையகப் பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்பிவரும் நிலையில் பெற்றோர்களில் தங்கி வாழும் நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த வகையில் ரஷ்யா, உக்ரேன் மோதல் பல நிலைகளிலும் மலையக மக்களின் வாழ்க்கையை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tamil News