ஐ.நா மனித உரிமைக் கழகம் என்பது ஓர் அரசியல் சார்ந்த அமைப்புதான் | ராஜ்குமார்

அரசியல் சார்ந்த அமைப்பு

ஐ.நா ஓர் அரசியல் சார்ந்த அமைப்புதான்

 பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜ்குமார் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

கேள்வி:
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமக்கு சாதகமான முடிவுகளை எடுப்பதற்காகவே ஐ.நாவில் எமது பிரச்சனை கையாளப்படுகின்றதொரு வலுவான கருத்து உள்ளது. இது தொடர்பாகவும் அந்த நாடுகளின் நலன்களூடாக தமிழர் தரப்பு தமது நலன்களை அடைய அதனைப் பாவிக்க வேண்டுமென்ற கருத்து தொடர்பாகவும் உங்களது பார்வை என்ன?

பதில்:  
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை என்பது நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்து, நாடுகளுக்கு எந்தவித பங்கமும் வராமல்,  நாடுகளுக்கிடையே மனித உரிமையை வளப்படுத்துவது தான் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செய்பாடுகளிலும் மனித உரிமைக் கழகம் நேரடியாக ஈடுபடப் போவதில்லை. ஆகவே இலங்கைக்கான அழுத்தம் கொடுக்கும் ஒரு தளமாக மனித உரிமைக் கழகம் பாவிக்கப்படலாம். பாவிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது ஒரு முக்கிமான தளம். அதே நேரத்தில் இன அழிப்புக் குற்றத்திற்கான அல்லது தொடர்ச்சியாக அங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு தீர்வு அல்லது நீதி விசாரணையோ அல்லது அதற்கான நீதி வழங்கல் என்பது இந்தக் கழகத்திற்கு ஊடாக மிக அரிதாகவே காணப்படும்.

அரசியல் சார்ந்த அமைப்புஏற்கனவே மனித உரிமைகள் சபையில் பல நாடுகள் தொடர்பான தீர்மானங்கள் ஏற்படுத்தப் பட்டது. ஆனால் அந்தத் தீர்மானங்களில் எந்தவிதமான அழுத்தமான முடிவுகளும் வந்ததில்லை. இஸ்ரேலை எடுத்துப் பார்த்தால், இஸ்ரேல் தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் எவையும் ஏற்படுத்தப் படவில்லை. ஆகவே இலங்கையைப் பொறுத்தவரையில் இது ஒரு அழுத்தம் தான் என்று தெரிந்தும் அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாள்கின்றது என்பது தான் எனது கருத்தாக இருக்கின்றது. அதேநேரத்திலே தமிழர் தரப்பிலே இந்த அழுத்தத்தை சரியாகப் பயன்படுத்துவதாக தெரியவில்லை. ஆகவே அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு தளமாக இருந்தாலும், அதில் நாங்கள் சரியாக அழுத்தத்தை பயன்படுத்துகின்றோமா என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.

கேள்வி:
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆரம்பகால தீர்மானத்திற்கும் அதன் பின்னர் வந்த தீர்மானங்களுக்கும் இடையில் பல மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது இலங்கை அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து செல்வதாக உணர்கின்றோம் அதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:
ஆம். ஆரம்பத்திலே 2009ஆம் ஆண்டு வன்னியிலே மிகக் கொடூரமான ஒரு இன அழிப்பை அரங்கேற்றி விட்டு, அதன்பின் இலங்கை அரசாங்கமும், அதன் ஆதரவு நாடுகளும் இணைந்து இலங்கையைப் பாராட்டுவது அதாவது இலங்கை பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்திருக்கின்றது. அந்தப் போரையே நடத்தியது என்ற ஒரு பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. உண்மையில் அந்த நேரத்திலே வல்லரசு நாடுகள் பலவற்றிற்கும், பிராந்திய நலன் சார்ந்து பிராந்தியத்தில் இருக்கின்ற நாடுகளுக்கும் இங்கே நடந்த கொடூரமான இன அழிப்பு பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தும், அவர்கள் பெரிதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில், இந்த விவாதம் வரும்போது அதற்கு எதிராக செயல்படவில்லை என்பது தான் நாங்கள் இங்கே பார்க்க வேண்டும்.

அரசியல் சார்ந்த அமைப்புஆனால் இதனை தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழர்களின் அமைப்புகள் என்பன தொடர்ச்சியாக ஆதாரங்களை திரட்டி, இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு அல்லது அங்கே நடந்த போர்க் குற்றங்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும் அல்லது நீதி வேண்டும் என்ற ஒரு குரல் ஒருமித்து ஒலிக்கத் தொடங்கியதன் விளைவாகவும், சர்வதேச ஊடகங்களில் பிரதானமாக பிரித்தானியாவின் சனல் – 4 இன் The Killing Fields என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின்னர் ஏற்பட்ட அழுத்தங்களின் ஊடாக மனித உரிமை சபையில் மீண்டும் இலங்கை விவகாரம் முன்னே கொண்டு வரப்பட்டு, அதன் ஊடாக 2021ஆம் ஆண்டிலிருந்து பல தீர்மானங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் காலங்காலமாக ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது என்பது ஓரளவு உண்மை தான். விசாரணைகள் பல நடந்தன.

முதலிலே டெஸ்மன் தலைமையிலே 3பேர் கொண்ட ஆணைக்குழுவில் விசாரணை அறிக்கை வந்திருந்தது. இந்த அறிக்கையிலே மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும், போர்க் குற்றங்களும் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை முடிவுகள் காணப்பட்டதால், அதைத் தொடர்ந்து வந்த பிரேரணையும் இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவனீதம் அம்மையார் மனித உரிமை ஆணையாளராக இருந்த காலத்திலே OISL விசாரணை என்பதும் மனித குலத்திற்கு எதிரானதும், இன அழிப்பு சமிக்ஞைகள் இருக்கின்றன என்ற அளவிலே வெளியிலே இருக்கின்ற மனித உரிமைகள் அமைப்புகள் முக்கியமாக புலம்பெயர்ந்த அமைப்புகள் தமிழரின் நீதிக்கான போராட்டத்தை நடத்திய அமைப்புக்களும் முன்கொண்டு வந்ததன் காரணமாகவும் இந்த அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த அழுத்தங்கள் ஓரளவு இலங்கைக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டு, இந்த அழுத்தங்களின் காரணமாக இலங்கை அரசு சில சர்வதேச தளங்களில் முடக்கப்பட்டதன் காரணமாகவும், இலங்கை அரசிலே ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கு சில வல்லரசு நாடுகளின் முயற்சியிலும் அந்த வல்லரசு நாடுகளின் முயற்சியின் பின்னணியில் ஏற்பட்ட தமிழர் அமைப்புக்கள் முக்கியமாக தாயகத்தில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சடியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சியும் இணைந்து, இந்த ஆட்சி மாற்ற செயற்பாட்டின் ஊடாக 2015ஆம் ஆண்டு, அங்கே ஒரு ஆட்சி மாற்றம் உருவானது. அந்த ஆட்சி மாற்றத்தில் நல்லாட்சி என்ற அடிப்படையிலே இந்த அழுத்தங்கள் எல்லாம் ஓரளவு நீர்த்துப் போகப்பட்டது. அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பது தான் யதார்த்தம்.

இதிலே உண்மையிலே சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், தாயகத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதிக பங்கு இருக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இந்த அழுத்தக் குறைப்பு அல்லது இந்த அழுத்தம் பின்தள்ளப்பட்டது என்பது ஒரு உள்ளக விசாரணையை ஏற்படுத்தலாம் என்ற ஏற்படுத்தலாம் என்ற ஒரு அடிப்படையிலே இந்த அழுத்தம் குறைக்கப்பட்டது.  இதுவரை வெளியக விசாரணை தான் வேண்டும் என்று தமிழர் தரப்பு கேட்டுக் கொண்டதிலிருந்து உள்ளக விசாரணை ஏற்படுத்தலாம் என்ற வகையிலே இந்த அழுத்தம் குறைக்கப்பட்டது.

அதன் பின் 2019, 2020 ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி மாற்றம் வந்ததன் பின்னர் தான்  உலக நாடுகள் மீண்டும் ஓரளவு அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியது.  முக்கியமாக மனித உரிமைக் கழகத்தில் அரசியல் சார்ந்த ஏனென்றால், மனித உரிமைக் கழகம் என்பது ஓர் அரசியல் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கின்றது. அமெரிக்கா தலைமையிலான வல்லரசு நாடுகள் மீண்டும் இந்த முயற்சியை எடுத்திருந்தன.

ஆனால் 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக உலகில் பல மாற்றங்கள் அதாவது பொருளாதார வீழ்ச்சி, பின்னடைவுகள் போன்ற நிகழ்ச்சி நிரல் மாற்றம் என்பது இலங்கைக்கு எதிரான அழுத்தத்தை மீண்டும் நீர்த்துப்போகச் செய்து விட்டது என்பது தான் இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது.

கேள்வி:
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கு சென்று வந்துவிட்டால் தமது கடமை முடிந்துவிட்டதாக அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும், செயற்பாட்டாளர்களும் எண்ணுவதுபோலவே நாம் கருதுகிறோம் இதை நீங்களும் அவதானித்தீர்களா? 

பதில்:
அரசியல் சார்ந்த அமைப்புஆம். நான் அவதானித்துள்ளேன். மனித உரிமை ஆணைக்குழு அல்லது சபை. மனித உரிமை ஆணைக்குழு என்று சொல்வதைவிட சபை என்று சொல்வதே பொருத்தமானது. ஏனென்றால், மனித உரிமை சபை தவிர்ந்த ஏனையஅங்கங்கள் ஐ.நா.வில் இருக்கின்றது. ஐநாவின் ஜெனீவாவிலேயே போர்க் குற்றங்களுக்காக, காணாமல் ஆக்கப்பட்டோருக்காக இவ்வாறு தனித்தனி அங்கங்கள் இருக்கின்றன. மனித உரிமை சபை என்பது முழுக்க முழுக்க ஒரு அரசியல் சார்ந்தது. அதாவது நாடுகளின் பிரதிநிதிகள் அங்கே விவாதித்து சில முடிவுகளை எடுப்பார்கள். நாடுகளுக்கு ஒரு பிரச்சாரத்தை அல்லது அந்த நாடுகளுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு நாங்கள் போய் வரலாமே ஒழிய ஐ.நாவின் ஆவணப்படுத்தலும், ஐ.நாவின் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களின் குழுக்களுடன் செயற்பட வேண்டியது என்பது தொடர்ச்சியாக செயற்பட வேண்டிய ஒரு விடயம்.

ஆகவே தமிழர் அமைப்புக்கள் முக்கியமாக தாயகத்தில் உள்ள அமைப்புக்களோ அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ மனித உரிமை சபைக் காலமான உதாரண மாக பெப்ரவரி, மார்ச் காலப்பகுதியில், ஜுன், செப்டெம்பர் காலப்பகுதியில் மட்டும் தங்கள் பிரசன்னத்தை அங்கே காட்டி, 2 நிமிடங்களில் தமது அறிக்கைகளை வாசிப்பதன் மூலம் மாற்றங் களைக் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணு வதாகத் தோன்றுகிறது. உண்மையிலே அப்படியான மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்துவிட முடியாது. இந்த நாடுகளுடனான தொடர்ச்சியான உறவைப் பேணி, தொடர்ச்சியாக அந்த நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அது பன்னிரண்டு மாதங்களாக இருக்க வேண்டும். அதேவேளை நிபுணத்துவ நிபுணர்கள் ஊடாகவும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

மிக முக்கியமாகத் தொடர்ச்சி ஒன்று இருக்க வேண்டும். 2009ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் தொடர்ச்சியாக இந்த ஐ.நாவின் செயற்பாடுகள், – இலங்கையில்நடந்த இன அழிப்பு, போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை என்பது, அல்லது இப்படியான விசாரணையைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான நீதிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில்,  12, 13 வருடங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு, அந்த தொடர்ச்சியைப் பேணி, அதில் ஏற்கனவே போனவர்கள் தொடர்ந்து போயிருக்க மாட்டார்கள். பின்னர் வேறு செயற்பாட்டாளர்கள் சென்றிருப்பார்கள். இவர்களுக்கிடையே அங்கே சந்திப்புக்கள் எந்த அரசாங்கத்துடன் சந்தித்தார்கள். அவர்கள் அன்றைய தினத்தில் என்ன முடிவிலே இருந்தார்கள். பின்னர் என்ன முடிவுமாறியது. போன்ற செயற்பாடுகளை ஒருமித்து ஆவணப்படுத்தி, அடுத்தடுத்த புதிய செயற்பாட்டாளர்களுக்கு வழங்கும் முறை என்பது தமிழர் மத்தியில் இல்லை. கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இல்லை.

ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் இவர்கள் மக்களுக்கு அங்கே தாங்கள் பிரசன்னமாகியிருந்தோம். அறிக்கையை வாசித்தோம் என்பதற்காக மட்டும் செல்வது போல ஒரு தோற்றப்பாடு இருக்கின்றது என்பதைத் தான் நான் இங்கே கூறக்கூடியதாக இருக்கின்றது.

கேள்வி:
இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் மீது தீர்மானத்தை கொண்டுவந்த நாடுகள் தான் தமக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாற்கான அழுத்தங்களை பிரயோகித் திருந்தன, இந்த இடத்தில் தமிழ் இனத்தின் பங்களிப்பு ஏன் சரியாக கிடைப்ப தில்லை.? 

பதில்:
உண்மையிலேயே தமிழ் செயற்பாட்டாளர்களின் அழுத்தம் என்பது ஒருமித்த குரலில் தாங்கள் வாழ்கின்ற நாடுகள் அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில், அவர்கள் வாழ்கின்ற நாடுகளில் கொடுக்கின்ற அரசியல் அழுத்தமே மனித உரிமைக் கழகத்திலே இந்த அழுத்தத்திற்கு அதாவது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கான அழுத்தமாக மாறுமே ஒழிய வெறுமனே மனித உரிமைக் கழகத்திலே இருக்கும் ராஜதந்திரிகளுக்குக் கொடுக்கும் அழுத்தத்தின் ஊடாக மாறப் போவதில்லை. ஆனால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகின்ற நாடுகள் வல்லரசு நாடுகளாக முக்கியமாக அமெரிக்கா தலைமையிலான ஒரு அணியாக இருப்பதனால், அவர்களுக்கு அங்கே அழுத்தத்தைக் கொடுப்பது என்பது இலகுவாக இருக்கின்றது.

அதிகமான அழுத்தம் ராஜதந்திரிகள் மத்தியில் செலுத்துவதன் மூலம் எந்தவித பயனும் கிடைப்பதில்லை. ஏனென்றால், ராஜதந்திரிகள் நிரந்தர தொழிலில் இருப்பவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அந்தந்த நாட்டில் எடுக்கின்ற முடிவுகளை செயற்படுத்துபவர்களாகவே இருக்கின்றார்கள். அந்தந்த நாடுகள் எடுக்கப்போகும் முடிவுகளில் தாக்கத்தை செய்ய வேண்டுமாக இருந்தால், அந்தந்த நாடுகள் அல்லது பலம் வாய்ந்த நாடுகளில் மாற்றத்தை அதாவது அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அரசியலில் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஐரோப்பிய நாடுகளாக இருக்கட்டும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளாக இருக்கட்டும், மற்றைய தமிழர் வாழ்கின்ற நாடுகள் முக்கியமாக மலேசியா, இந்தியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளாக இருக்கட்டும், அங்கே கொடுக்கின்ற அழுத்தம் தான் மனித உரிமை சபையில் அல்லது எங்களுக்கு ஆதரவாக பிரதிபலிப்பதற்கு சாதகம் இருக்கின்றது. இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:
மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை நாங்கள் பலப்படுத்த வேண்டும் என்றால், அங்கு நமக்கான ஒரு நிரந்தர வதிவிடம் தேவையா? இதில் உங்கள் கருத்து என்ன? 

பதில்:
நிச்சயமாக எங்களுக்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரதிநிதித்துவம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தேவை. ஏற்கனவே கூறியது போல பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இந்த நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றோம். பல்லாயிரக் கணக்கான டொலர் செலவில், பவுண்ஸ் செலவில் அமைப்புக்கள் தங்கள் செயற்பாட்டாளர்களை இங்கே அனுப்பி, பல நூற்றுக் கணக்கிலே செயற்பாட்டாளர்கள் அங்கே சென்றிருக்கின்றார்கள். ஆனால் இப்படி எல்லாம் நாங்கள் செய்தும் ஒரு தொடர்ச்சி பேண முடியவில்லை.

இரண்டாவது மனித உரிமைக் கழகம் மட்டும் தான் எமது நீதிக்கான போராட்டத்தின் ஒரு தளமாக இல்லை. இன்றைக்கு பல தளங்கள் இருக்கின்றன.  பொருளாதார அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய தளங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் இருக்கின்றது. மற்றும் நாடுகளில் கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் இருக்கின்றன. ஆகவே மனித உரிமைக் கழகத்தில் இருக்கின்ற அழுத்தம் என்பது ஒரு தொடர்ச்சியான ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பல அமைப்புக்கள் அதாவது புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டமைப்பு பிரதிநிதித்துவமாக ஒருவர் அல்லது இருவர் தொடர்ச்சியாக செயற்படுவதென்பது மிகவும் அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியதாகவும், சிறப்புத் தேர்ச்சியை உருவாக்குவதன் ஊடாகவும் அவர்களுடன் நீண்டகால உறவையும் ஏற்படுத்தி, செயற்திட்டங்களை முன்னடத்துவதற்கு வழிவகுக்கும். ஆகவே நிச்சயமாக இப்படியான ஒரு செயற்பாடு தேவை. வருங்காலத்திலாவது இதுபற்றி சிந்திப்பது அல்லது உரையாடுவது என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

கேள்வி:
தமிழர் தரப்பு எதுவும் செய்யவில்லை என்று கூறமுடியாது. அவர்கள் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்கள். ஆனால் அவை அனைத்துலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. அதற்குக் காரணம் என்ன?

பதில்:
ஆம். தொடர்ச்சியாக தமிழர் தரப்பிலிருந்து பல செயற்பாடுகள், முன்னெடுப்புகள் செயற்பாட்டாளர்கள் மத்தியிலிருந்தும், அமைப்புக்களாகவும் இடம்பெற்றுக் கொண்டுதான் வருகின்றன. உண்மையிலே இந்த அழுத்தங்கள், இந்த செயற்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்டு, நீண்ட ஒரு நீதிக்கான போராட்டத்திற்காக வடிவமைக்கப்பட வேண்டியது தான் மிக முக்கியத்துவமானது. ஏனென்றால், எங்களுடைய இந்த நீதிக்கான போராட்டம் ஒரு கட்டத்தின் பின் முடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பிலேயே சர்வதேச தரப்புகளும், இலங்கையும் எதிர்பார்த்து நிற்கின்றன. இந்த அடிப்படையில் இந்தப் போராட்டமானது முடங்கி விடாமல் தொடர்ச்சியாக அழுத்தத்தைப் பிரயோகித்து, அந்த அழுத்தத்திற்கு ஊடாக வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் – அல்லது கவனத்தைப் பெறவேண்டுமாக இருந்தால், நாங்கள் கூர்மைப்படுத்தப்பட்ட ஒரு போராட்டமாகவும் மற்றும் சிறப்புத் தேர்ச்சி, பொருளாதார வளங்கள், மனித வளங்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாகவும், சிக்கனமாகவும் செயற்படுத்தி, மிக நீண்டகால மனித குலத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கும், இன அழிப்பிற்கான ஒரு நீதியையும், அந்த நீதிக்கு எதிராக ஒரு சரியான தீர்வையும் பெறவேண்டுமாக இருந்தால், நாங்கள் நீண்டகால நீதிக்கான ஒரு போராட்டத்தை வடிவமைக்க வேண்டும். அதற்கு எங்களுக்கிடையில் கூர்மைப்படுத்தப்பட்ட திட்டமிடலுடன் கூடிய செயற்பாடு தேவை என்பது மட்டுமே என்பதைக் கூற விரும்புகிறேன்.

கேள்வி:
சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் ஐ.நாவின் நடவடிக்கையில் தமிழ் மக்கள் பங்களிப்பு முக்கியமானது எனக் கருதுகிறீர்களா?

பதில் –
உறுதியாக தமிழ் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால், வாழும் சாட்சிகளாக இன்று இருக்கின்ற ஈழத் தமிழர்கள், அவர்களது உறவுகள் இந்த சாட்சியங்களைப் பதிய வேண்டியதும்  ஐ.நா. மட்டுமல்ல, உலகத்தில் எங்கெங்கெல்லாம் நீதி கேட்க வேண்டுமோ அங்கங்கெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும். இந்த அடிப்படையிலே வெறுமனே ஐ.நாவிற்கு மட்டுமல்ல, இந்த ஆவணங்கள், ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்  இங்கே முக்கியமானது. ஏனென்றால், கால ஓட்டத்திலே இன்று வாழும் சாட்சியங்கள் அல்லது சாட்சியங்களாக இருப்பவர்கள் இல்லாமல் போகக்கூடிய அபாயம் இருக்கின்றது.

ஆகவே எப்படி இந்த சாட்சியங்களை நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடிய வகையிலும், உலகத்திற்கு இந்த வரலாறு மறைக்கப்படாமல், இந்த சாட்சியங்களுக்கு ஊடாக கூறப்படக் கூடியதாகவும் ஆவணப்படுத்த வேண்டியது தமிழரின் மிக முக்கியமான கடமையாகும்.

கேள்வி:
தமிழினத்திற்கான நிலைப்பாடு என்பது ஒன்றாக இருக்க முடியும். அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமிழர்களிடையே நிலைப்பாட்டை தனித்தனியாக எடுப்பது தொடர்பாகவும், அணுகுமுறைகள், தவறுகள் அமைப்புக்களைத் தாண்டி தமிழினத்தையே பாதிக்கின்றது தொடர்பாகவும் உங்கள் பார்வை என்ன?

பதில்:
ஆம். ஒரு நீண்ட போராட்டத்தின் பின் அந்தப் போராட்டம் கொடூரமான முறையில் ஒரு இன அழிப்பிற்கு ஊடாக அழிக்கப்பட்டதன் பின் எழுந்த இந்த எழுச்சியும், எழுச்சியைத் தொடர்ந்து மக்கள் அமைப்புக்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்பது என்பது ஒரு நீதிக்கானதும், அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியுமாகும். சரியான  தலைமைத்துவம்  இல்லாத ஒரு இடைவெளியும், மக்கள் ஒவ்வொருவர் முன் அதாவது செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கு மேலும் இருக்கின்ற நம்பிக்கையீனமும் அல்லது இறுதி இலக்குத் தொடர்பான நம்பிக்கையீனமும் தங்கள் வாழ்நாளில் சில செயற்பாட்டை செய்துவிட வேண்டும். அல்லது ஒரு முடிவுகளைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று இருக்கின்ற ஒரு அவாவும் எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு அமைப்பாகவும், ஒவ்வொரு தனிநபராகவும் கடந்த 12 வருடங்களாக பலபல திசைகளில் ஈழத் தமிழர்கள் தமது போராட்டத்தை நகர்த்திச் சென்றிருக்கின்றார்கள் என்பது தான் யதார்த்தம்.

இந்த இடத்திலே மிக முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒட்டுமொத்த ஒரு இனத்தின், ஒரு தேசத்தின் மக்களாக அந்த தேசத்திற்கு ஏற்பட்ட இனஅழிப்பு மற்றும் அந்த தேசத்தின் உறுதிப்பாட்டை அல்லது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக செயற்படும் மக்களாக இருந்தால், அடிப்படையில் எங்களுக்குள் பல வேறுபாடுகள் அல்லது அமைப்புக்களுக்கிடையில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு உறுதியான திட்டமிடல் என்பதும், உறுதியான நிலைப்பாடு என்பதும் உறுதியான வெளிவிவகாரக் கொள்கை, தேசம் சார்ந்த பார்வை, பொருளாதாரக் கொள்கை, சூழலியல் சார்ந்த கொள்கைகள், சமூகவியல் கொள்கைகள் என்ற பல விடயங்களும் மிக முக்கியமானவை. இப்படியாக ஒரு தேசத்திற்குரிய அனைத்துக் கட்டமைப்புக்களும் எங்களுக்குள் இருக்க வேண்டும்.

இந்த விடயங்கள் உருவாக்கப்பட்டு, இந்த விடயங்கள் அல்லது கொள்கைகள் அல்லது நிலைப்பாடுகளின் அடிப்படையில் தான் நகர்த்தப்பட வேண்டும். அப்படியாக இந்தப் போராட்டம் நகர்த்தப்பட்டால், நிச்சயமாக வருகின்ற காலத்திலே வெற்றி என்பது அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சரியான ஒரு தீர்வை அடைவதற்கு அது ஆக்கபூர்வ மாகவும், அடிப்படையாகவும் இருக்கும் என்பது தான் எனது கருத்து.

Tamil News