போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம் | பி.மாணிக்கவாசகம்

அரசியல் பாடம்

பி.மாணிக்கவாசகம்

போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம்

அரசியல் என்பது நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்வதற்குரிய வாய்ப்பாகக் கருதப்படக் கூடாது. அவ்வாறு செயற்படுவதற்கான அங்கீகாரமாகவும், அதிகார வலிமை கொண்ட அந்தஸ்தாகவும் அதற்குப் பொருள் கொண்டு செயற்பட முடியாது.

அரசியல் என்பது மிகவும் பொறுப்போடும் கண்ணியமான தேசப்பற்றுடன் காரியங்களை முன்னெடுக்க வேண்டிய ஒரு துறையாகும். குறிப்பாக நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயற்படுகின்ற அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் இதனை வலுவாகத் தமது கவனத்திலும் கருத்திலும் கொண்டு செயற்பட வேண்டியதாகும்.

அரசியல் வழிமுறையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசியல் தலைவர்கள் சாணக்கியத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும் தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டும். இதில் நாட்டு மக்கள் அனைவரினதும் நலன்களையும் வளமான எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.

ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்துவிட்டது என்பதற்காக நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்ள முடியாது. அதிகாரமும் எதனையும் சாதிக்க வல்ல வலிமையும் கிடைத்து விட்டது என்பதற்காக முறைதவறி நடந்து கொள்ள முடியாது. முறைகேடாக நடந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கிடைத்து விட்டது தானே என்றபதற்காக எதேச்சதிகாரமாக நடந்து கொள்வதற்கு முற்படுவது விவேகமுள்ள காரியமாகாது.

அரசியலில் எதுவும் நடக்கும். எந்த வேளையிலும் பாதகமான விடயங்கள் நடக்கும். தேர்தல்களில் மக்களின் ஆதரவு கிட்டிவிட்டது என்பதற்காக தமது விருப்பப்படியும், இஷ்டப்படியும் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள முற்படக் கூடாது. நாட்டின் எதிர்கால நலன்களையும், மக்களின் நலன்களையும் கவனத்திற் கொண்டு சம்பந்தப் பட்டவர்களுடன் கலந்துரையாடி, துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று கூட்டு முயற்சியில் செயற்பட வேண்டியது அவசியம். அதுவும் நெருக்கடிகள் மிகுந்த காலத்திலும் அழுத்தங்களும் பிரச்சினைகளும் அதிகரிக்கின்ற சந்தர்ப்பங்களிலும் இத்தகைய அணுகுமுறையும் செயற்பாடும் அவசியம். இத்தகைய அரசியல் யதார்த்தத்தை இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு இப்போதைய நாட்டு நிலைமை தெளிவாக உணர்த்தியிருக்கின்றது.

கவனக்குறைவு

அரசியல் பாடம்திடீரென அரசியலில் புகுந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கு பௌத்த சிங்கள மக்கள் பேராதரவு வழங்கினர். அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து அவருக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பற்ற ஆட்சிப் போக்கினால் ஏற்பட்டிருந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி தீவிரமான இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்து, பௌத்த சிங்கள மக்களை ராஜபக்சக்கள் தம்வசப்படுத்தியிருந்தனர்.

இந்தத் தவறான அரசியல் வழிகாட்டலின் மூலமாகவே வரலாறு காணாத வகையில் அறுபத்தொன்பது இலட்சம் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தாபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியானார். ஆனால் நாட்டின் பொறுப்பு மிக்க அந்தத் தலைமைப் பதவியை ஏற்றபின்னர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தானே தலைவர் என்ற கடப்பாட்டை அவர் கவனத்திற் கொள்ளவில்லை.

நிறைவேற்றதிகார பலத்தைக் கொண்ட ஜனாதிபதி பதவியின் செயல் வல்லமையை மேலும் அதிகரிப்பதற்காக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்கு இருந்த பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக அவர் நிறைவேற்றிக் கொண்டார்.

ஆனால் அளவற்ற அதிகாரத்தையும், ஆட்சிச் செல்வாக்கையும் கைக்கொண்ட பின்னர் நாட்டு மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திய ஆட்சிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ராஜபக்சக்கள் தவறிவிட்டனர்.

ராஜபக்சக்களின் தேர்தல் பிரசாரத்தை ஏற்று ஜனாதிபதி தேர்தலிலும் அதனைத் தொடர்ந்த பொதுத் தேர்தலிலும் பௌத்த சிங்கள மக்கள் பொதுஜன பெரமுன கூட்டணிக்கு ஆதரவளித்த போதிலும், ராஜபக்சக்களின் எதேச்சதிகாரப் போக்கினை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

ராஜபக்சக்களின் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு என்று பல்வேறு அத்தியாவசிய தேவைகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக நாட்டின் அந்நியச் செலவாணி வீழ்ச்சியடைந்து டொலர் கையிருப்பு மிக மோசமாகக் குறைவடைந்தமையே இந்தத் தட்டுப்பாட்டு நிலைமைக்குப் பிரதான காரணம் என ஆய்வாளர்களும் பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

எங்கும் கியூ எதற்கும் கியூ

அரசியல் பாடம்ஒரு காலத்தில் இலங்கையில் மக்கள் வரிசைகளில் (கீயூக்களில்) நின்று தமக்கான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலைமைக்குத் தள்ளப் பட்டிருந்தார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் இடம் பெற்றிருந்த அப்போதைய நிலையில் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அது வழிகாட்டியாக அமைந்திருந்தது.

அதேபோன்று – அதிலும் பார்க்க மிக மோசமான கியூ வரிசை நிலைமையைப் பொதுமக்கள் இப்போது எதிர்கொண்டிருக்கின்றனர். டொலர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள பண வீக்கம் நாட்டின் வாழ்க்கைச் செலவுகளை மும்மடங்கு, நான்கு மடங்குகளாக அதிகரித்திருக்கின்றது. எல்லாப் பொருட்களுக்கும் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அனைத்துப் பொருட்களுக்கும் நீண்ட நேரம் வரிசைகளில் காவல் இருந்து பெற வேண்டிய நிலைமை நாட்டு மக்களை எரிச்சலடையச் செய்திருக்கின்றது. எரிபொருளுக்குக் கியூ. சீனிக்கு கியூ. பால்மாவுக்குக் கியூ. சமையல் எரிவாயுவுக்குக் கியூ என்று அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

போதாக்குறைக்கு நாலரை மணி முதல் ஏழரை மணித்தியாலங்கள் வரையில் நாளாந்தம் மின்சாரத் துண்டிப்புக்கும் மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக் கின்றார்கள். சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும், அதனைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கஷ்ட நிலைமையும் நாட்டு மக்களை மிக மோசமாகப் பாதித்திருக்கின்றது. சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு காரணமாக உணவு விடுதிகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமைக்கு உணவு விடுதி உரிமையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். இதேபோன்று கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள விலையேற்றமும், தட்டுப்பாடும் வெதுப்பகங்களின் உணவு உற்பத்தியைப் பாதித்திருக்கின்றன.

இத்தகைய பல்வேறு நிலைமைகளினால் மக்கள் தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கினறனர். இந்த நிலையில் கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பதை மக்கள் நன்கறிவார்கள். ஆனால் நாட்டின் டொலர் கையிருப்பை மிக மோசமாகப் பாதிக்கும் அது அமைந்திருக்கும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை. கடன் சுமைகள் ஒருபக்கம். துறைமுகத்தில் வந்து நாட்கணக்கில் காத்து நிற்கின்ற கப்பல்களில் இருந்து உணவுப் பொருட்களையும், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும்  டொலர் கையிருப்பு இல்லாத காரணத்தினால்தான் இறக்க முடியவில்லை என்பதை எழுந்தமானமாக ஏற்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

விடை கிடைக்காத வினா

நாட்டின் டொலர் பற்றாக்குறை என்பது திடீரென ஏற்படுகின்ற ஒரு விடயமல்ல. அது படிப்படியாக ஏற்படுகின்ற ஒரு நிலைமை. இதனைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். அறிந்திருக்கின்றார்கள். ஆனால் டொலர் கையிருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் திடீரென ஏற்பட்ட ஒரு விடயமாகக் காட்ட முற்பட்டிருக்கின்ற அரசாங்கத்தின் கூற்றினால் மக்கள் சினம் கொண்டிருக்கின்றார்கள். படிப்படியாக ஏற்படுகின்ற இந்தப் (டொலர்) பணப்பற்றாக் குறையை அரசாங்கம் ஏன் முற்கூட்டியே வெளிப்படுத்தவில்லை என்று அவர்கள் வினா எழுப்பியிருக்கின்றார்கள்.

நாட்டில் ஊழல் இல்லாததோர் ஆட்சியை உருவாக்கப் போவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்சக்களின் நிர்வாகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாக அவர்கள் கருதுகின்றார்கள். பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருட்களின் விலையேற்றம், பற்றாக்குறை என்பவற்றில் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களிடம் வெளிப்படைத் தன்மையை அவர்களால் காண முடியாமல் உள்ளது.

அமைச்சர் ஒன்றைக் கூறினால், ராஜாங்க அமைச்சர் மற்றொன்றைக் கூறுகின்றார். அதேவேளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேறொன்றைக் கூறுகின்றார்கள். இந்த நிலையில் ஜனாதிபதி ஒன்றைக் கூறினால் அது நிறைவேற்றப்படுவதாக மக்களுக்குத் தெரியவில்லை. இதனால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கின்றார்கள். யார் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொள்வது என்பது தெரியாமல் அவர்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.

இதனால் அரியணையில் அமரச் செய்த பௌத்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். அரசு மீது எரிச்சலும் கோபமும் கொண்டிருக்கின்றார்கள். இதனைத்தான் அரசுக்கு எதிராக மார்ச் மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்பட்ட பேரணியின்போது மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்தினார்கள்.

எதிர் கட்சியினராகிய ஐக்கிய மக்கள் சக்தியினர் இதனை அரசுக்கு எதிரான அரசியல் ரீதியான எதிர்ப்பாகவும், ஆட்சி மாற்றத்திற்கான ஒரு சமிக்ஞையாகவும் பிரசாரம் செய்திருக்கின்றனர். ஆனால் உண்மையில் மக்கள் தாமாகவே எழுச்சி கொண்டு அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையையும் தீரராத கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

விழிப்படைய வேண்டும்

அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு அவற்றை ஒழுங்கமைக்கின்ற அரசியல் கட்சிகள் பெரும் பணம் செலவு செய்து போராட்ட இடத்திற்கு மக்களை வாகனங்களில் அழைத்து வருவதுண்டு. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல. அரசாங்கமும் தனக்கு எதிரான கருத்துக்கள் எழுச்சி பெறும்போது, அவற்றை முறியடிப்பதற்காக மக்கள் தங்கள் பக்கமே இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக அவர்களை அணி திரட்டிக் காட்டுவதுண்டு.

ஆனால் கொழும்பு நகர வீதிகளில் அணி திரண்டு, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட போராட்ட நடவடிக்கையில் மக்கள் தாங்களாகவே எழுச்சி பெற்று இணைந்திருந்தார்கள். எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வது போன்று அவர்களின் ஆதரவு நிலையிலான மக்கள் எழுச்சியாக இதனைக் கருத முடியாது. அதேவேளை எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து, அரசாங்கத்தை அரசியல் ரீதியாக எதிர்த்ததாகக் கூற முடியாது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்திறனற்ற தன்மையினால் நம்பிக்கை இழந்திருப்பது போலவே, இந்த நெருக்கடி நிலைமையை சீர் செய்வதற்குரிய ஆற்றலும் அரசியல் வல்லமையும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து, எதிர்க்கட்சியினர் மீது நம்பிக்கை வைக்கின்ற நிலைமையிலும் அவர்கள் இல்லை. எதிர்கட்சியினர் மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்ற செய்தியும் இந்த பெரும் போராட்டத்தில் இழையோடியிருக்கின்றது.

நாட்டில் நியாயமான ஆட்சி நடத்தக் கூடிய வல்லமையுள்ளவர்கள் அதிகாரபீடத்தில் இல்லை என்பதையும் அதேவேளை இந்த நெருக்கடி நிலைமையைப் போக்கி மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத் தக்க அரசியல் தலைமைக்கான பெரும் வெற்றிட வெளியொன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்த மார்ச் மாத மக்களின் சுய எழுச்சியிலான எதிர்ப்புப் பேரணி போராட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமையை அரசாங்கத் தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் சரியான முறையில் அரசியல் ரீதியாக அடையாளம் காண வேண்டும் அதனை ஓர் அரசியல் விழிப்புணர்வாகக் கொண்டு மக்கள் எதிர் கொண்டுள்ள மிக மோசமான பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் சரியான முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இதுவே இப்போதைய இலங்கை அரசியலின் தேவைப்பாடாக உள்ளது.

Tamil News