ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்து | சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா-90வது அகவை வாழ்த்து

ஈழத்தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமக்களின் தன்மான நிலையில் அவர்கள் மேம்பாடடையக் கவிபடைக்கும் பெருநோக்குக் கொண்டவர் ஈழத்துக் கவிஞர் மாரீசன்; என்றால் மிகையாகாது.  இதனை அவர் தனது மாரீசன் கவிதைகள் முன்னுரையில் தானே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

அந்த வகையில் 17ஆண்டுகள் ஆசிரியத்துவ பணியிலும், 22 ஆண்டுகள் தலைமையாசிரியத்துவ வழிகாட்டலிலும் ஈழத்தமிழ்க் கல்விக்கு ஒளி விளக்காக விளங்கிய தமிழறிஞர் சவிரிப்பிள்ளை பேராசான் அவர்கள் மண்ணினதும் மக்களதும் அடிமைத்துவ இருள் அகற்றும் பணியில் வன்னியில் வாழ்ந்து தன் கவிதைகளை மக்களுக்கும் மண்ணுக்கும் சிந்தனை வளமும் செயற்பாட்டு உறுதியும் பெற அளித்து, ஈழத்தமிழர் வரலாற்றில் தன் பெயரைப் பொறித்த கவிஞராகக் கனடாவில் 2012 டிசம்பர் முதல் இன்று வரை வாழ்ந்து வருகிறார்.

இவ் ஈழத்தமிழ்ப் பெரியாருக்கு 21.03.2022 இல் அகவை தொண்ணூறு இறையருளால் இனிதுற அமைதல் கண்டு ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் அன்னாரை நெஞ்சார வாழ்த்தி நூறாண்டு நோய் நொடியில்லாது வாழ்கவென மகிழ்ச்சிக் கீதம் பாடுகின்றனர்.

மண்ணின் கவிஞன் தான் பிறந்த மாரீசன்கூடல் என்னும் மண்ணின் பெயரைத் தான் கவிதாவாற்றல் வெளிப்பாட்டுக்கான தன் புனைபெயராக அமைத்துக் கொண்டதால் அவர் கவிஞர் மாரீசன் என்றே வாழ்வியல் வழக்குப்பெயர் கொண்டு திகழ்கிறார்.

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாஇவர் சொல்லேருழவர் மட்டுமல்ல செயலேருழவரும் கூட என்பதால் இவரின் அருமக்களில் ஒருவர் மண்ணின் மங்காத மாவீர ஒளியாக மாவீரர் தனேந்திரன் என ஈழமக்கள் வணங்கு நிலை எய்தி பெருவாழ்வு பெற்றுள்ளார். இன்னொருவர் கிறிஸ்துவின் துறவியாய் அமலமரித் தியாகிகள் சபையில் மண்ணும் மக்களும் வாழ உளவளத்துணையும் இறையருள் பிணைப்பும் அளித்து உதவும் அருட்தந்தையாக அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு தன் பிள்ளைகளையே மண்ணினதும் மக்களதும் பணிநிறுத்திய இத்தந்தை தமிழீழ மக்கள் அனைவராலும் தந்தைக்குரிய வாஞ்சையுடன் போற்றப்படுவது இயல்பானதே.

காலத்தின் பெருந்தலைவன் எனத் தேசியத்தலைவனைத் தன்கவியால் உலகின் முன் நிறுத்தி, ஈழமக்கள் அடிமைக் கோலம் மாற பண்பாடி இறைதுணையும் இயதத் துணையும் தரு தமிழ் இனத்துவக் கிறிஸ்தவக் கவிஞர் மாரீசன். ஆவார்.

மாறாத பேரன்போடு தேசியத் தலைவரை

“நாலுபத்தாண்டுகளாய் நலிந்தழிந்த தமிழர்க்குப்

பாலூட்டி யரவணைக்கு மன்னையாய் உதித்தவனே

வேலெடுத்துப் பகைகடிந்த வீரத்தின் விளைநிலமே

ஆலெனவே வளர்ந்து நிழலளித்தவனே! வாழ்க!”

என வாழ்த்தி

“எழுமெங்க ளுள்ளத்து உணர்வுகளில் குருதியினில்

நுழைந்தெம்மை யாட்கொள்ளும் மாசற்ற தலைமகனே

செழுமையுற ஒளிதுலங்க நீர் சமைத்த ஈழமெனும்

களிப்பூட்டும் தேசமோர்நாள் மலருமதில் நீ வாழ்க”

எனக் கவிதா சத்தியம் செய்து, ஈழத்தமிழ் இளம் சந்ததிக்குச் சரித்திரநாயகனின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி பெற தளராது தொடர்ந்து பயணியுங்கள், அது ஒருநாள் நடைமுறைச் சாத்தியமாகுமெனத் தன் கவிதா ஆளுமையால் உறுதியான எதிர்வு கூறும் இறைவல்லமை பொருந்திய பெருங்கவிஞராக கவிஞர் மாரீசன் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

சிறிலங்கா வன்னியின் நடைமுறை அரசின் வீர எழுச்சியைச் சிதைக்கச், சிறிதும் அனைத்துலகச் சட்டங்களை மதியாது, குண்டுமழையாலும் எறிகணை வீச்சாலும் உயிரிழப்புக்களையும் உடல்சிதறல்களையும் உடமையழிவுகளையும் இலட்சக் கணக்கில் பெருக்கி,  இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் முந்நிலை இனஅழிப்புக்களையும் ஒரேகாலத்தில் சிறிலங்கா தன்படைபலம் கொண்டு அப்பாவி ஈழத்தமிழர்கள் மேல் நடைமுறைப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் பொழுது, அந்த யுத்தக் குற்றச் செயல்களின் மனிதாயத்துக்கு எதிரான குற்றங்களின் மனிதஉரிமைகள் வன்முறைகளின் ஈவிரக்கமற்றதன்மைகளைக் கண்டு அனுபவித்து, மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கவிஞர் மாரீசன் கவியுள்ளம் படைத்த படைப்பாக்கங்கள், வரலாறு உள்ளவரை மனிதத்துக்காக படைப்பாக்கம் செய்த மனிதஉரிமைக்கவிஞன், அமைதியின் கவிஞன் என்றெல்லாம் கவிஞர் மாரீசன் அவர்களை நன்றியோடு உலகு நினைந்து போற்றும் என்பது உறுதி.

தான் பட்ட துன்ப துயர வாழ்வின் அடிப்படையில் எத்துன்பம் வந்தாலும் அசையாத உள்ளமுடன் எத்தடைகளையும் ஒன்றிணைந்த உழைப்பாலே கடந்து வள்ளுவரின்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலிதரும்

என்னும் குறள்மொழிக்கு ஏற்ப மக்களுக்கான நம்பிக்கை வாழ்வை இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் மாரீசன்.

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாஇதற்கு இவரின் கிறிஸ்தவத்தின் மேலான உறுதியும் மரியன்னை மேலான பக்தியும் அருளாளளர்கள் மேலான நம்பிக்கைகளும் துணை நிற்கின்றன என்பதை இவரின் கவிதைகளில் காணலாம். ஆயினும் தன்னுடைய சமய நம்பிக்கையைத் தனக்கான பலமாகக் கொண்டு,  மற்றைய எல்லா சமயங்களிலும் கடவுளைக் காணும்,  ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’  என்ற திருமூலர் உள்ளம் கவிஞர்; மாரீசனின் தமிழிலக்கிய பலம். எத்துணை இடர் வரினும்,  இன்னும் பேரன்பே பெருக்கு என்னும் காரைக்காலம்மையாரின் நெஞ்சுறுதியுடன் செயற்பட்டு, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் அப்பரின் தொண்டுத் தத்துவ வழி, அப்பரின் அதே ‘அஞ்சுவதும் ஒன்றுமில்லை அஞ்ச வருவதும் ஒன்றுமில்லை’  என்ற உள்ள உறுதியுடன் வாழும் அப்பரைப் போன்ற மூத்த தமிழ்ப்படைப்பாளரான கவிஞர் மாரீசன் அவர்கள்  தமிழிலக்கியத்தின் அத்தனை உன்னதங்களும் இவரின் உள்ளத்து எண்ணமாக மாறிவிட்டதால், இவரின் “மாரீசன் கவிதைகள்” யார்க்கும் அஞ்சாத யார்க்கும் பணியாத உண்மைக்கும் நீதிக்கும் மனிதாயத்திற்கும் மட்டும் முன்னுரிமை கொடுத்த படைப்புக்களாக, இன்றைய வர்த்தகப்படுத்தப்பட்ட தமிழ்க்கவிதையுலகில், சத்தியத்தின் மொழியாகச் சரித்திரத்தின் இலக்கியப்பதிவாக, ஈழஇளம்  சந்ததியை மீண்டெழ வைக்கும் பூபாளராகங்களாக ஏழைகளுக்கும் நலிந்தவர்க்கும் சக்தியளிக்கும் சங்கோலியாக ஒலிக்கின்றன.

இவரின் அருங்குணங்கள் குறித்தோ படைப்புக்களின் அரிய பெரிய பெருமைகள் குறித்தோ பேசுவதானால் எழுதுவதானால் பலமாதத் தொடர்கட்டுரையாக வாழ்த்துரை வளர்ச்சி பெற்றுவிடும்.

ஆகையால் சுருக்கமாகச் சொன்னால் கவிஞர் மாரீசன் ‘நின்ற சொல்லர்’, கடவுளை மனிதத்தின் உன்னதங்களை உறுதிப்படுத்தவதில் கண்டு அனுபவிக்கும் இறையியலாளர், விடுதலைக்கு வித்திடும் செயலை தன்வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் இணைத்து வாழும் தன்னளவில் சுதந்திரமான உயர்மனிதர், எல்லாவற்றக்கும் மேலாக இச்சிறியோரில் ஒருவருக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்னும் இயேசு பெருமானின் சொல்லுக்கு உதாரணமாய் வாழ்கின்றன கிறிஸ்தவர்.

இவரின் எண்ணமெல்லாம் ஈழமக்கள் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து தேசியத் தலைவன் காட்டிய வழியில்

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

என வாழ்ந்து

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப்படும்

என்னும் வாழ்வின் உயர்நிலை எய்தல் வெண்டுமென்பது என்பதை இவரின் படைப்புக்களில் மட்டுமல்ல இவரின் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் காணலாம்.

இவரின் 90வது அகவையில் இவர் தந்த மாரீசன் கவிதையின் ஒவ்வொரு பாடலையும் ஈழமக்கள் படிக்கக் கூடிய வசதிகளை ஏற்படுத்தி ஈழமக்கள் அவற்றைப் படித்துப் பயன் பெறுவதன் வழி ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடைய உதவுவதே நாம் இப்பெரியாருக்கு அளிக்கும் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக அமையும். ஐயா! உங்களின் இந்த 90வது அகவையில் ஈழமக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பான அமைதி வாழ்வு பெற எங்களை ஆசீர்வதித்து எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுங்கள்!

Tamil News