சர்வதேச மகிழ்ச்சி நாள்
மகிழ்ச்சியின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். பணம், சுவையான உணவு, விலையுயர்ந்த பொருட்கள், பயணம், வெற்றி, உறவு, அன்பு என அவை வகைப்படும் . ஆனால், ஐ.நா.சபை, ‘போர் மற்றும் வறுமையை உலக அளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி’ எனக் கருதுகிறது.
மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை இலட்சியம் என்கிற அடிப்படையில் 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் திகதியை சர்வதேச மகிழ்ச்சி நாளாக அறிவித்தது.
தற்போதைய சூழ்நிலையில் தாயகத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சி நாள் குறித்து கூறும் கருத்துக்கள்:
என். கௌசிகன்
புதுக்குடியிருப்பு
மனிதனாக பிறந்த எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுவார்கள். அதுக்காக தானே இரவுபகலா பணம், பதவி, உறவு எண்டு சொல்லி எல்லாத்தையும் வாழ்க்கைல சம்பாதிக்கிறது மகிழ்ச்சிக்காக தான். சிலர் துன்பத்தினை கூட சந்தோஷமாக தான் ஏற்று கொள்கின்றனர்.
இப்படியிருக்க எவ்வளவு காலம் தான் நாங்கள் துன்பத்தினை மறைத்து மகிழ்ச்சியாக இருப்பது போல் வாழ்வது?
தமிழர்களாக பிறந்தது எம் தவறா? இலங்கையில் பிறந்தது எம் தவறா? எங்கட சந்தோசம் கடந்த போர்க்காலத்தில துலைஞ்சு போனது. இப்பவரை மகிழ்ச்சியே இல்ல, சரி யுத்தம் தான் முடிஞ்சுது. இனியாவது சந்தோசமா இருப்பம் எண்டா இலங்கை அரசாங்கம் விடுறாங்களா?
திடீரென்று அன்றாட பொருட்களுக்கு விலையேத்துறாங்கள். அத பார்த்து எப்பிடி மகிழ்ச்சியா இருக்கிறது. அதுதான் போகட்டும் எண்டு பார்த்தா இரவு நித்திரை கொண்டு விடிய எழும்ப முதல் திருப்ப பெற்றோல் டீசலுக்கு விலையை கூட்டினாங்கள். சரி என்னடாப்பா இவங்கள் இப்பிடி ஒரு பொழுதுக்க விலை யேத்துறாங்கள் எண்டா உக்ரைன் ரஷ்யாவில சண்டையாம். அதால கூட்டிடாங்கள் இதில எங்க மகிழ்சியா இருக்கிறது. சரி வெளிய போக மோட்டர் சைக்கிலுக்கு பெற்றோல் அடிக்க செட்க்கு போனா அங்க லைன் அதில நிண்டு ஒருமாரி பெற்றோல் அடிக்க கேட்டா அண்னே 300 ரூபாய்க்கு தான் பெற்றோல் எண்டு சொல்லி அடிக்கிறாங்கள். அது என்னத்துக்கு காணும் எங்கயும் போய்கூட வரஏலாது அதிலேம் பாதி சந்தோசம் போட்டுது.
பிறகு பார்த்த பொருளாதார தடை எண்டு சொல்லி முழு பொருளுக்கும் விலையேத்திட்டாங்கள். இனி சந்தோசமா கூட சாப்பிட ஏலாது. சனம் எல்லாம் பஞ்சத்தில பட்டினி கிடந்து சாகப்போது. இதில எங்க மகிழ்ச்சியா இருக்கிறது. பிறகு எங்க மகிழ்ச்சி தினத்தை கொண்டாடுறது.
உ.யசோதா
முல்லைத்தீவு
மகிழ்ச்சி தினமோ அப்பிடியும் ஒண்டு இருக்கோ? நாங்கள் மகிழ்சியா இருந்து எத்தினை வருஷம் ஆகிட்டுது. எங்க மகிழ்ச்சியா இருக்க விடுறாங்கள். பொருட்கள் எல்லாம் விலையேறிட்டுது என்னண்டு குடும்பத்த பார்க்கிற எண்டு தெரியல.
ஒவ்வொரு நாள் வாழ்க்கை செலவுகளும் கூடிட்டு போகுது. பிரச்சினைகளும் கூடிட்டு போகுது எங்களுக்கு எங்க மகிழ்ச்சி வரப்போது. அன்றாடம் வேலைக்கு போய் உழைச்சிட்டு வாற காசு ஒரு நாள் சீவியத்துக்கே காணாது. ஒவ்வொரு நாளும் எங்கட பிள்ளையளிட்ட வாழ்க்கைய பற்றிய யோசனையோடே நாள் போகுது. பிறகு எப்பிடி சந்தோசமா இருக்கிறது.
சமைக்கிறதுக்கு மண்ணெண்ணை இல்ல, காஸ் இல்ல, சரி விறகில சமைப்பம் எண்டா விறகும் விலை. அதவிட சமையல் பொருள் எல்லாம் விலை கூடிட்டு, நாளுக்கு நாள் அதுக்கே தட்டுப்பாடும் வருது. இப்பிடியே நாடு போய் கொண்டிருக்கேக்க இந்த நாட்டில எப்பிடி சந்தோசமா இருக்கிறது.
எங்களுக்கும் ஆசைதான் நிம்மதியாய் எங்கட பிள்ளையளோட மகிழ்ச்சியா வாழணும் எண்டு ஆனா நாடு போற போக்கில நாங்கள் இருப்பமோ எண்டே பயமா இருக்கு . அப்பிடி இருக்கேக்க எத வைச்சு நாம மகிழ்ச்சியாய் இருக்கிறது. மகிழ்ச்சி தினம் எண்டு சொல்ல முடியுமே தவிர இந்த நாட்டில இருக்கிற ஒரு சனமும் மகிழ்ச்சியாய் இல்ல எண்டுதான் சொல்லமுடியும்.
எஸ். ராமகிருஷ்ணன்
வள்ளிபுனம்
மகிழ்ச்சி எண்டு சொன்னால், நான் ஒரு காலம் மகிழ்சியா வாழ்ந்தனான் . அது ஒரு காலம் ஆனால் இப்பத்தே காலத்தில மகிழ்ச்சி எண்டு சொல்லே நாங்க மகிழ்சியா இருக்கிற அளவுக்கு இந்த நாட்டில இதுவரை காலமும் ஒண்டுமே நடக்கல. எப்ப பார்த்தாலும் ஒரே பிரச்சினை தான்.
நான் அன்றாடம் கூலிவேலைக்கு போய் தான் பிள்ளையள படிப்பிக்கிறதும், வாழ்க்கை செலவ பார்க்கிறதும். பொருட்கள் விலை குறைஞ்சு இருக்கும் போதே கஸ்டபட்டம் இப்போ வாழ்க்கை செலவும் கூடிட்டு நாளுக்கு வாற 2000 காசு சமையல் பொருள் வாங்கவே காணாது. இதில பிள்ளையள்ட கல்வி செலவை எப்பிடி பார்க்கிறது. நாங்க மகிழ்ச்சியா இருந்து நிறைய காலமாச்சு.
நாங்கள் மகிழ்ச்சியா வாழ்ந்த காலம் போட்டுது. எங்கட பிள்ளையள் படிச்சு நல்ல நிலைக்கு வந்து அதுகள்ட காலத்திலயாவது மகிழ்ச்சியா வாழணும் எண்டு தான் ஆசை. எங்கள போல கஸ்ரப்பட கூடாது. நீங்கள் மகிழ்சியா இருக்கிறீங்களா எண்டு இந்த காலம் கேட்டிருக்கிறீங்க உண்மையா சொல்றன் நான் மட்டுமில்ல எங்கட நாட்டை பொறுத்தவரை யாருமே சந்தேசமாய் இல்ல. இனிவாற மகிழ்ச்சி தினத்திலயாவது நாட்டு நிலமை மாறி சுமுகமா மக்கள் எல்லாரும் மகிழ்சியாய் வாழணும் எண்டு கடவுளிட்ட வேண்டிக்கொள்றன்.
இ.யசோ
பருத்தித்துறை
உண்மையை சொல்லவேணும் என்டால் ‘மகிழ்ச்சி’ என்பதை சொல்லக்கேட்கும் போது ‘மகிழ்ச்சி’யாக இருக்குது.
சண்டை காலத்தில சாவு எங்களை துரத்திக் கொண்டு இருந்திச்சு…. பொருளாதாரத்தடை கழுத்தை நெரிச்சுக்கொண்டு இருந்திச்சு…. வாழ்வா சாவா…? என்று தெரியாமலே ஒவ்வாரு நாளும் விடிஞ்சுது…. ஆனாலும் அப்பேக்க நாங்கள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தனாங்கள்.
என்ன ஒண்டு… அப்பேக்க எங்களுக்கு அதின்ர அருமை தெரியாமல் போச்சுது….
அரிசி, மா, சீனி சாமானுகள் எல்லாம் விக்கிற விலையில் என்னத்தை வாங்கி எதை சமைக்கிறது என்றதே பெரும்பாடா கிடக்குது… அங்கனேக்க பாண், பனிஸ் அதுகளை வாங்கித்தன்னும் ஒரு நேர சாப்பாட்டு பொழுதை சமாளிக்கிறமாதிரி இருந்திச்சு…. விலை கூடினதால இப்ப அதுக்கும் வழி இல்லாமல் போச்சுது.
அடுப்பை பத்தவைக்கவே வழியில்லாத நிலைக்கு இந்த அரசாங்கம் எங்களை கொண்டுவந்து நிப்பாட்டியிருக்கிற நேரத்தில் ‘மகிழ்ச்சி’ என்பதை சொல்லக்கேட்கும் போதுதான் ‘மகிழ்ச்சி’யாகவே இருக்கு.
இந்த கஸ்ரங்கள் எல்லாம் சண்டை காலத்திலயும் இதைவிட மோசமாத்தான் இருந்திச்சு. ஆனாலும் அப்பேக்க சந்தோசமாகத்தான் இருந்தம்…. இப்ப அந்த காலத்தை நினைச்சு ஆறுதல்படுறதை தவிர வேறு வழியில்லை……
கமல்ராஜ்
முச்சக்கர வண்டி சாரதி, வெல்லாவெளி
சிரிக்கச்சொன்னா கஸ்டப்பட்டு சிரிச்சாலும் சிரிப்பு வருதில்ல. இன்று நாடுதான் சிரிக்கிற நிலையில இருக்கு. எங்களை சிரிக்கச்சொன்னாலும் சிரிப்பு வராது. நாங்க கஸ்டத்துக்கு மேல கஸ்டம் அனுபவிக்கிற நிலதான் இருக்கும். நாங்க அயர் ஓடினாதான் எங்கட வீட்ட நெருப்பு எரியும். டீசல்,பெற்றோல் விக்கர விலைக்கு எங்க ஓடுற. கூட காசு எடுத்தாலும் சனம் ஏறாது. டீசல் எடுக்கிறதும் கஸ்டம். இரவில தூங்கினா கூட தூக்கம் வருதுல்ல. எதிர்காலத்த நினைக்கவே அச்சமா இருக்கு.
சிவநேசன்,
கொக்கட்டிச்சோலை, மரக்கறி வியாபாரி
எங்கட சிரிப்பு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் போயிட்டு. நாங்க என்டைக்கு இவன்ட ஆட்சிக்கு கீழ வந்தோமோ அன்டைக்கே எங்களுக்கு தெரியும் இப்படி நடக்கும் என்டு. இந்த நாட்டுக்கு இவனுகள் தரித்திரம். இவனுகள இந்த சிங்கள மக்கள் இன்னும் நம்புதுகளே. இப்ப ஆரப்பாத்தாலும் சிரிச்சமுகம் இல்ல. குடும்பங்கள் கடும் கஸ்டத்தில இருக்கு எங்க சிரிப்புவாற.
கே.ஐயம்மா,
தொழிலாளி, பெரட்டாசி தோட்டம், இறம்பொடை
சர்வதேச மகிழ்ச்சி தினம்னு சொல்றீங்க. ஆனா எங்க வாழ்க்கையில எப்போதுமே மகிழ்ச்சி இல்ல. காலைல வேலக்கி போனா மாலைலதான் வீட்டுக்கு வர்றோம். மாடா ஒழைச்சி மம்பட்டியா தேய்றோம். ஆனா உழைப்புக்கேத்த ஊதியம் இல்ல. இதுனால எங்களுக்கு பொருளாதார நெருக்கடி அதிகமா இருக்கு. புள்ளைகள படிக்க வைக்க, சாப்பிட, வேறு தேவைகளைக் கவனிக்க கையில காசு இல்ல. யானையத்தாரேன் குதிரையத்தாரேன்னு அரசியல்வாதிங்க பேசுறாங்க. ஆனா கெடைச்சது ஒண்ணுமில்ல. தேர்தல் காலத்துல கைய தூக்கிட்டு எல்லாரும் ஓட்டு கேட்டு வருவாங்க. தேர்தல்ல வெற்றி பெற்றா திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறாங்க. ஆத்த கடக்கும் வர அண்ணன் தம்பி. கடந்துட்டா நீ யாரோ நா யாரோங்கிறாங்க.நாங்க குத்துசுரும் கொல உசுருமா ஒழைச்சி ஒழைச்சி ஒண்ணுமில்லாம இருக்கோம். ஒவ்வொரு நாளும் விடியாமலே எங்களுக்கு முடியுது. என்னக்கிதான் விடிவு கிடைக்குதுன்னு பார்ப்பம்.
மத்த சமூகத்தவங்கள பார்க்கையில எங்களுக்கும் அதுபோல நல்லா வாழணும்ணு ஆசையா தான் இருக்கு. சிலவேளை பொறாமையாவும் இருக்கு ஆனா வாழ்வதற்கு ஏத்த வருமானமில்ல. என்ன பண்றது. எங்களுக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான். அரை வயிறும் கால் வயிறுமா சாப்பிட்டு கிட்டு நாங்க படுற கஷ்டத்த எங்க புள்ளங்க படக் கூடாதுன்னுதான் நெனைக்கிறோம். ஆனா அது சாத்தியப்படுமான்னு தெரியல. இப்படியான எங்களுக்கு எங்க மகிழ்ச்சி. சந்தோஷம். கடவுள்வுட்ட வழியில எல்லாம் நடக்கட்டும். வேறு என்ன பண்ண சொல்றீங்க.
- இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்
- உயிர்களின் பெறுமதி – ஒரு இழிவான மதிப்பீடு | தமிழில்: ஜெயந்திரன்
- நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்
[…] சர்வதேச மகிழ்ச்சி நாள் மகிழ்ச்சியின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். பணம், சுவையான உணவு, விலையுயர்ந்த பொருட்கள், பயணம், வெற்றி, உறவு, அன்பு எனமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/ilakku-weekly-epaper-174-march-19-2022/ https://www.ilakku.org/ […]