நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்

அன்னையின் அழுகுரல்

ஓர் அன்னையின் அழுகுரல்

எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை.

 அன்னையின் அழுகுரல்இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது. யுத்த சூழல் மாறிவிட்டது. நாட்டில் சமாதானம் மலர்ந்து விட்டது. எம்  மக்கள் எல்லாம் அமைதியாய் நிம்மதியாய்  வாழ்கின்றார்கள் என  இலங்கை அரசு சொல்கின்றதே தவிர,  உண்மையில்  மக்கள் நிம்மதியாய் அமைதியாய் வாழவில்லை.  குறிப்பாக யுத்தம் தீவிரமடைந்து நடைபெற்ற வடக்கு கிழக்கு பகுதி மக்கள்  இன்றுவரை அமைதியாக இல்லை. ஆயுதவழிப் போராட்டம் நிறைவுற்றதே தவிர, மக்கள் மன நிம்மதிக்கான போராட்டம் இன்றும்  நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

குறிப்பாக யுத்த காலப்பகுதியில் தமிழ் பேசும் எத்தனையோ உறவுகள் கடத்தப்பட்டு காணாமலாக்கப் பட்டிருக்கின்றார்கள்.  இந்த காணாமல் போனவர்களின் உறவுகள் இன்றும்  தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  அவ்வாறு, தான் பெற்ற மகளை  யுத்த காலத்தில் தொலைத்துவிட்டு தன்மகளின் வருகைக்காகக் காத்திருப்பவர்தான் நாகராசா நாகம்மா. அவர் தனது பிள்ளையின் நிலை பற்றிக் கூறும் போது,

” எனது பெயர்  நாகராசா நாகம்மா

அன்னையின் அழுகுரல்எனது கணவர் அழகர்சாமி நாகராசா எங்களுக்கு 5 பிள்ளைகள். எங்கட சொந்த இடம் புதூர், புளியங்குளம். என்ர மூத்த மகள் நாகராசா நாகஜோதி. இவர் தான் காணாமல் போனவர் .

யுத்த நேரம்  நாங்கள் புளியங்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்தனாங்கள். அந்த நேரம் மடு பண்டிவிரிச்சான்  பகுதியால் போனாங்கள். அங்க  வைத்து 2008.01.11 அன்று என்ர  பிள்ளை இராணுவத்தினால் பிடித்து செல்லப்பட்டார். அதன் பின்னர் மகளை எங்கு தேடியும்  காணவில்லை.

பிறகு யுத்தம் தீவிரமடைஞ்சுது பண்டிவிரிச்சானிலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிற்கு  சென்று அங்கிருந்து தேவிபுரம் பகுதிக்கு  14.02.2009  அன்று போனாங்கள். பிறகு இராணுவம் தமிழ் பகுதிகளைக் கைப்பற்றின பிறகு  அங்கிருந்து வலைஞர்மடம் ஒற்றைப்பனையடிக்கு போனாங்கள். அதன் பின்னர்  அங்கிருந்த மக்களை  இராணுவம் பேருந்தில் ஏற்றி வவுனியா  செட்டிக்குளம் இராமநாதன் முகாமிற்கு  கொண்டுபோய்  விட்டார்கள்.  ஒருவருடம்  முகாமில் இருந்தனாங்கள்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு  எல்லா மக்களையும் மீள்குடியேற்றம் செய்தவை. அப்போது இராணுவத்தினர் புளியங்குளம் பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில் ஏற்றி கொண்டுபோய் எங்களை இறக்கிவிட்டவை. பின்னர் தற்காலிக வீட்டில் இருந்தனாங்கள். பிறகு வீட்டுத்திட்டமும் தந்தவர்கள்.

நாங்கள் பிள்ளையை காணவில்லை என்று சொல்லி வவுனியா வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம், வவுனியா மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முறைப்பாடு செய்தனாங்கள். பின்னர்  கொழும்பில் இருந்து வந்து ஜனாதிபதி ஆணைக் குழுவினால் எங்களிடம்  விசாரணை செய்தவர்கள்,

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி இடம்பெறும் போராட்ட இடத்திலும்  மகளைப் பற்றி முறைப்பாடுகளை  மேற்கொண்டுள்ளேன். ஆனாலும் இதுவரை என்ர மகன் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.

என்ர பிள்ளை காணாமல் போய் 13 வருடங்களைக் கடந்திட்டு. ஆனால் அவள் இருக்கிறாளா இல்லையா? என்ர பிள்ளைக்கு என்ன நடந்தது என்று எதுவுமே தெரியல.  என்ர பிள்ளையை இராணுவம் பிடிச்சுக்கொண்டு  போகேக்க  19 வயது. அந்த நேரம் மகளுக்கு எதுவுமே அறியாத வயது தான். இப்ப மகளுக்கு 33 வயது. என்ர பிள்ளை வருவாள் எண்டு தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறம். ஆனால் ஒரு தகவலுமே இல்லை.

நாங்கள் புளியங்குளத்துக்கு மீள் குடியேற்றப்பட்டு வந்தபோது ஆரம்பத்தில் வீடு தேடி இராணுவத்தினர், பொலிஸ், புலனாய்வுத் துறையினர் வருவார்கள். வந்து பிள்ளையை பற்றி விசாரிப்பார்கள். அப்படி அடிக்கடி வந்து விசாரித்து செல்வார்கள். நாங்களும் பிள்ளையை விசாரித்து கண்டுபிடித்து தருவார்கள் என்று நம்பிக்கையில் விபரங்களை கூறினாங்கள். ஆனால் அவர்கள் விபரங்களை எடுத்துகொண்டு போய்விட்டார்கள். அதன் பின்னர் இப்போது  வருவதில்லை.

அன்னையின் அழுகுரல்எப்பிடியாவது என்ர பிள்ளையை கண்டு பிடிச்சு மீட்டு கொண்டு வரோணும். பிள்ளை ஒருநாள் வருவா எண்ட நம்பிக்கையிலை தான் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியாவில் இடம்பெறும் போராட்டங் களுக்குத் தொடர்ச்சியாக நான்  போறனான். பஸ் காசு 40 ரூபாயில் இருக்கும் போது போராட்டத்திற்கு வரத்தொடங்கினான். இப்போ 100 ரூபா ஆகிட்டு ஒருநாளைக்கு சாப்பிடாம இருந்து கூட அந்த பணத்தை வைத்து பஸ்க்கு கொடுத்து போராட்டத்திற்கு வாறனான். இப்போ ஐந்து வருடங்களைக் கடந்தும் வவுனியாவில் போராட்ட பந்தல் அமைத்து  போராடிக் கொண்டிருக்கிறம்.

பிள்ளையை எப்படியாவது தேடி பிடிச்சிருவன் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறன். ஆடம்பரமா வாழணும் என்ற எண்ணமே இல்லாமல், பிள்ளையைக் கண்டு பிடிச்சிடணும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன். நான் சாகக்குமுதல் என்ர பிள்ளையை மீட்டிடணும். பிள்ளையை விட்டு பிரிஞ்சு பல வருடங்களாகிட்டு. பிள்ளையின்ர நிலை தெரியாம இருக்குது.

இந்த போராட்டத்தால் முன்னேற்றம் வரும் என்று போராட்டத்தை விடாமல் பிள்ளையை வெளியே எடுத்திடணும் என்று தொடர்ந்து போராடி வருகின்றோம். இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர் பற்றி விசாரணைக்காக கூப்பிட்ட இடமெல்லாம் போனாங்கள் எங்களை விசாரிக்கிறார்களே ஒழிய எந்தவித நடவடிக்கையும் இல்லை. இரக்க குணமென்றா என்னென்று தெரியாது இரக்கமில்லாத அரசாங்கமாக தான் இந்த அரசாங்கம் இருக்குது.

எங்கட காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள விடச் சொல்லி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தம். பிள்ளைகளை வெளியே விடுகிறோம் என விசாரணைக்கு என்று கூப்பிட்டு அதையும் குழப்பிப் போட்டார்கள்.

ஆனால் எங்கட  பிள்ளைகளை வைச்சிருக்கிறார்கள். பிள்ளைகளை உயிரோட வைச்சுக் கொண்டு தான் எங்களை இவ்வளவு சித்திரவதை செய்கிறார்கள். எங்களுக்கே இந்த நிலமை  என்றால் எங்கட பிள்ளைகளுக்கு என்ன நிலையாக இருக்கும். நாங்கள் இன்று இருப்போம் நாளைக்கு இருப்போமா என்று கூட தெரியாத நிலையில் இருக்கின்றோம். சாக முதல் பிள்ளையின்ர முகத்தை ஒருதடவையாவது பார்த்திடுவம் என்ற நம்பிக்கையில தான்  இருக்கிறம்.

அன்னையின் அழுகுரல்என்ர பிள்ளை உயிரோட இருக்கிறாள். ஏனெனில் என்ர பிள்ளையை காணவில்லை என விசாரணைக்கு போய் வரும்போது 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது எங்களுடைய பிள்ளைகள் நிற்கும் படத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நோட்டீஸில் எங்களுடைய பிள்ளைகள் நிற்கும் படங்களை அடித்து தமிழ் மக்கள் வாழும் நைனாமடு பகுதிகளில் கொடுத்திருந்தவர்கள். அந்த படங்களை பார்க்கும் போது தான் எங்களுடைய பிள்ளைகள் இருப்பது உறுதியாக தெரியவந்தது. அதன் பின்னர் தான் கூடுதலாக இந்த போராட்டங்களை பிள்ளை இருக்குது என்ற நம்பிக்கையோடு தொடர் முயற்சியோடு செய்தனாங்கள்

பிள்ளை எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் இருந்து போராடி வருகின்றோம்.  நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம்  கேட்டு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் இப்போது எங்களுடைய பிரச்சினையை தீர்த்து வைக்க சொல்லி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை கேட்டு நிற்கின்றோம். ஆனால் யாரும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. எப்பிடியாவது எங்கட பிள்ளையள மீட்டுதாங்கோ.” என்று கூறினார்.

இவ்வாறு அந்த அம்மா தான் பெற்ற மகளைத் தொலைத்து விட்டு  தான் படும் கஸ்ரங்களையும், துன்பங்களையும் கூறும் போது அந்த அம்மாவின் நிலையை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.

வயது முதிர்ந்து, உடல் பலமிழந்து தள்ளாடினாலும் உண்ணாமல் உறங்காமல் நடு வீதியிலே  தான்  பெற்ற மகளை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற  அவாவோடு தன் மகள் கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கையோடும் காத்திருக்கும் அந்த முதிய அன்னையின் ஏக்கம் நிறைவேறுமா?   அல்லது எதிர்பார்புக்கள் வீண் போகுமா?

Tamil News