பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும் இம்முறையாவது சாத்தியமாகுமா? | பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும்

பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும்

இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் அழுத்தங்கள் கூடியிருப்பதைக் காண முடிகின்றது. பொறுப்புக் கூறலுக்கும், நீதி நிலை நாட்டலுக்கும் ஆதரவான குரல்கள் இம்முறை முன்னரிலும் பார்க்க அதிகரித்திருக்கின்றன.

ஆனால், இந்த அதிகரிப்பு இலங்கை அரசாங்கத்திற்கு மீள முடியாத அழுத்தத்தைக் கொடுக்குமா? அப்படியானால், எந்த வகையில் அழுத்தம் அமைந்திருக்கும்? அந்த அழுத்தங்களுக்கு இலங்கை அரசு, குறிப்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசு பணிந்து செயற்படுமா? – இது போன்ற பல கேள்விகளை இந்த வருட ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எழுப்பியிருக்கின்றது.

பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும்ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் வாய்மொழியிலான இலங்கை பற்றிய அறிக்கை முன்னரிலும் பார்க்க காரசாரமாக, நேரடியான தாக்குதல்களைக் கொண்டதாக, குறைகளைச் சுட்டிக்காட்டும் தன்மையில் அமைந்திருந்தது. அந்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமை தொடர்பில் பிந்திய நிலைமைகள் தொடர்பான அச்சொட்டான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நேரடித் தாக்கத்தைக் கொண்ட ஆணையாளரின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்தைத் திக்குமுக்காடச் செய்திருக்கின்றது என்றே கூற வேண்டும். குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் பதிலளிக்கும் வகையிலான கருத்துக்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அரசு எதிர்பார்த்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் தென்படுகின்றன. இந்த இரண்டு காரணங்களும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான நிலைமைகளில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

பிரேணை மறுப்பும் பிடிவாதப் போக்கும்

போர்க்கால மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூற வேண்டும். அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். அத்தகைய வன்முறைகளும் வரையறையற்றச் செயற்பாடுகளும் இனிமேல் இடம்பெறாமல் உறுதி செய்ய வேண்டும். இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழ்த் தரப்பினரே இது வரையில் போராடி வந்தனர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, இந்தப் போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை. நியாயத்தை வழங்கி நீதியை நிலைநாட்டவில்லை. மாறாக இப் போராட்டங்களை விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கான ஒரு நடவடிக்கையாகவே நோக்கியது. அது மட்டு மல்லாமல் அதற்குப் பயங்கரவாத சாயத்தைப் பூசி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடக்கி, அவர்களின் குரல்களை நசுக்குவதற்கான செயற்பாடுகளையுமே முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நல்லாட்சி அரசாங்கம் ஐநா மன்றம் மற்றும் சர்வதேச நாடுகளின் நிலைமாறு கால நீதிக்கான கோரிக்கையை ஏற்றுச் செயற்படுவதாகவும், ஐநா மன்றத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் உறுதியளித்திருந்தது. அந்த ஆட்சிக் காலத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு அரசு அனுசரணை வழங்கி ஒத்துழைத்திருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை அந்த அரசு நிறைவேற்ற வில்லை. நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறி முறைகளை உருவாக்கிப் பொறுப்புக் கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுகின்ற செயற்பாட்டில் மிக மிகத் தாமதமாகவே செயற்பட்டது.

இதனால் உள்ளுரில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்தனர். இலங்கை அரசு ஒருபோதும் தங்களுக்கு நியாயத்தை வழங்கமாட்டாது. தமக்குரிய நீதியை நிலைநாட்ட மாட்டாது என்ற முடிவுக்கு வந்தனர். எனவே தங்களுக்கு நீதி கிடைப்பதாக இருந்தால், அது சர்வதேச விசாரணையொன்றின் மூலமே சாத்தியாமாகும் என்ற தீர்மானத்திற்கு வந்தனர். தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அதற்கான போராட்டங்களிலும் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித்தின் நீதிக்கான எழுச்சி

பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும்ஆனால் இரண்டாவது தடவையாக 2019 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராஜபக்சக்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46/1 பொறுப்பு கூறலுக்கான பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து வெளியேறுவதாகவும், அதனை ஏற்க முடியாதென்றும் வெளிப்படையாகவே கூறி பொறுப்புக் கூறும் செயற்பாட்டை மறுத்துவிட்டது.

உள்ளூர் நீதிப் பொறிமுறைகளின் ஊடாகவே பொறுப்பு கூறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எதேச்சதிகார ரீதியில் பதிலளித்திருந்தது. அதற்கேற்ற வகையில் பொறுப்பு கூறும் விடயங்கள் மற்றும் உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. மாறாக அதற்கு நேரெதிரான நடவடிக்கைகளிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் பிடிவாதமாக ஈடுபட்டது.

உள்ளக விசாரணைகளில் நீதி வழங்குவதாகப் போக்குக் காட்டி ஐநா மனித உரிமைப் பேரவையையும் சர்வதேச நாடுகளையும் தவறாக வழிநடத்தி பிரச்சினைகளைப் பூசி மெழுகி மறைத்து விடுவதற்கான முயற்சிகளிலேயே புதிய அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் மூலம் தேசிய பாதுகாப்பு நல்லாட்சி அரசாங்கத்தினால் சிதைக்கப்பட்டதாக ராஜபக்சக்கள் குற்றம் சாட்டிப் பிரசாரம் செய்தனர். அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டை நல்வழியில் ஆட்சி செய்வதாக பௌத்த சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்து வரலாறு காணாத வகையில் தேர்தல்களில் ராஜபக்சக்கள் வெற்றி பெற்றனர்.

ஆனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் அமைந்த புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டது. இராணுவ ஆட்சியையும் சர்வாதிகாரப் போக்கையும் நிலைநிறுத்துவதிலேயே கண்ணும் கருத்தும் செலுத்திச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தங்களுடைய மீள் அரசியல் பிரவேசத்திற்கு உறுதுணையாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேரின் உயிரிழப்புக்கும் காயப்பட்டவர்களுக்கும் நீதி வழங்குவதில் இழுத்தடிப்புப் போக்கையே அரசு பின்பற்றியது. இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் வெகுண்டெழுந்தனர். குறிப்பாக அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் கூடிய அளவில் உயிரிழந்த கிறிஸ்தவர்களின் சார்பில் குரல் எழுப்பிய பேராயர் மல்கம் ரஞ்சித்தின் நீதிக்கான கோரிக்கைக்கு அரசு உரிய முறையில் செவிசாய்க்கவில்லை.

இதனால் உள்ளுர் விசாரணைகளின் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட அவர், சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார். இது தொடர்பில் வத்திக்கானுக்குச் சென்று பாப்பரசரையும் சந்தித்து சர்வதேச அளவில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

பாப்பரசரைச் சந்தித்ததுடன் அவர் நின்றுவிடவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய அவர், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டை நேரில் சந்தித்து பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்தத் தாக்குதல் வெறுமனே பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், அது ஒரு திட்டமிட்ட அரசியல் சதியென்றும் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துரைத்தார்.

பதினான்கு நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட அப்பாவிகளான 269 பேரின் படுகொலைகளுக்கு நீதி தேடுகின்ற அவரது கோரிக்கை நியாயமானது எனக் கண்டறிந்த மனித உரிமைகள் ஆணையாளரும் அதனை ஏற்றுக்கொண்டு மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு அந்த விடயத்தையும் கொண்டு வந்தார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்ததுடன் ஓய்ந்து விடவில்லை. மனித உரிமைகள் பேரவையின் அமர்விலும் தனது நியாயத்துக்கான தனது குரலை ஒலிக்கச் செய்தார். அத்துடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகிய ஹரின் பெர்னாண்டோவும் நீதிக்கான குரலை அந்தப் பேரவையில் ஒலிக்கச் செய்தார். சிங்களவர்களான அவர்கள் இருவருடைய நீதிக்கான குரல்களும் பேரவையின் உறுப்பு நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்தன.

கண்துடைப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வையொட்டி, காணாமல் ஆக்கப்பட்டோரின் இழப்பீட்டிற்கான அலுவலகம் உள்ளிட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டபாய அரசு ஊக்குவிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அத்துடன் ஐநா மனித உரிமைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேசம் ஆகியவற்றின், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கண்துடைப்புக்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்தி அமைப்பதற்கான முன்மொழிவுகளை வெளியிட்டிருந்தது.

ஆயினும் இந்த நடவடிக்கைகள் வெறும் போக்குக் காட்டும் நடவடிக்கைகள் என்பதை சர்வதேச நாடுகளும் ஐநா மனித உரிமை ஆணையாளரும் புரிந்து கொண்டனர்.

இதனை ஐநா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையும் அங்கு அவர் ஆற்றிய உரையும், இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் நடைபெற்ற விவாதங்களின்போது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் வெளியிட்ட கருத்துக்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.

இதன் மூலம் இந்த ஆண்டின் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் தனக்கு சாதகமான ஒரு நிலைமையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நப்பாசை கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபாய அரசு ஏமாற்றத்தையே சம்பாதித் திருக்கின்றது.

உள்நாட்டில் டொலர் பற்றாக்குறை, மிக மோசமான பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அவற்றுக்கான தட்டுப்பாடு, எரிபொருள், எரிவாயு, சீர்குலைந்த மின்சார விநியோகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, தனக்கு அமோகமாக வாக்களித்து ஆதரவளித்த பௌத்த சிங்கள மக்களின் பெரும் அதிருப்தியையும் வெறுப்பையும் சந்தித்துள்ள நிலையிலேயே இலங்கை அரசு சர்வதேச அளவில் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்விலும் நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றது.

கேள்விகள்

இத்தகைய பின்னணியில் தமிழ் மக்களின், நீதி கோரலுக்கான கோரிக்கைக்கு கிறிஸ்தவர்களின் சார்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகிய ஹரின் பெர்னாண்டோ ஆகிய இருவரினதும் நீதி கோரிய கோரிக்கைகள் வலுச் சேர்த்திருக்கின்றன. இது இந்த ஆண்டின் மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்களின் நியாயம் தேடும் முயற்சிக்குப் பேராதரவை வழங்கியிருக்கின்றது.

இது விடயத்தில் சர்வதேச நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பிரதிபலித்திருக்கின்றன. இலங்கையின் மனித உரிமை விவகாரத்திலும், பொறுப்பு கூறும் கடப்பாட்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான முன்னேற்றகரமான ஒரு நிலைமையை உருவாக்கியிருக்கின்றது. இதனை மறுப்பதற்கில்லை.

ஆனால் ஐநா மனித உரிமைப் பேரவையின் வாய்ப்பேச்சு மற்றும் அறிக்கை வடிவிலான ஆதரவு மட்டுமே, பொறுப்பு கூறும் விடயத்திலும் நீதி வழங்கும் செயற்பாட்டிலும் இலங்கை அரசாங்கத்தை அர்த்தமுள்ள வகையில் ஈடுபடச் செய்வதற்கான அழுத்தத்தைக் கொடுக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.

ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே மனித உரிமைப் பேரவை இத்தகைய அழுத்தத்தை இலங்கைக்கு ஏற்படுத்தி வந்துள்ளது. ஆனால் நடைமுறையில் இலங்கையின் எந்த அரசாங்கத்தையும் செயற்படச் செய்ய அதனால் முடியவில்லை. அதன் காரணமாகவே இலங்கை மீது எத்தகைய இப்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

Tamil News