பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கல் போராட்டமும், கிழக்கு முஸ்லிம்களின் எண்ணப்பாடுகளும் | மட்டு.நகரான்

439 Views

முஸ்லிம்களின் எண்ணப்பாடு

பயங்கரவாத தடைச்சட்டம் கிழக்கு முஸ்லிம்களின் எண்ணப்பாடு

பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது. பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக ஒரு இனத்தின் குரலை அடக்கமுடியும் என்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த சக்திவாய்ந்த ஆயுதமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் பார்க்கப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி மன்னாரிலும் கையெழுத்து போராட்டம் | Virakesari.lkஇலங்கையின் வரலாற்றில் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டமானது தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டமாகவே கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சட்டத்தின் ஊடாக இலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகவே இருந்து வருகின்றது.

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இந்த நாட்டிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை இன்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இந்த சட்டமானது சிறுபான்மை சமூகம் அனைத்திற்கும் எதிரான சட்டமாக மாற்றமடைந்திருப்பதுடன், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரை வாய்மூட வைக்கும் சட்டமாகவும் மாற்றமடைந்திருப்பதன் காரணமாக இன்று அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது மிகவும் கொடுமையான சட்டம் என்பதை தாங்கள் உணர்ந்துகொள்வதாக, இன்று அனைத்துத் தரப்பினர் மத்தியிலுமி ருந்துவரும் கருத்துகளிலிருந்து காணமுடிகின்றது. தமிழர் தரப்பினைப் பொறுத்த வரையில், இந்த நாட்டில் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இந்த சட்டத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் காலம் தொடக்கம் யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் வரைக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது தமிழர்களுக்கு எதிராக பாவிக்கப்பட்ட ஆயுதம் என்ற காரணத்தினால் தமிழர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்திருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தபோதிலும், நல்லாட்சிக் காலத்தில் இந்த சட்டத்தினை நீக்குவதற்கு முறையான நடவடிக்கையினை எடுக்க வில்லையென்ற குற்றச்சாட்டு பலமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் குறித்த சட்டத்தினை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“சென்ற ஆட்சிக் காலத்தில் இந்த சட்டமூலத்தினை இல்லாமல் செய்கின்ற சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற அடிப்படையில் அது கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை முற்றாக ஒழித்து, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அது கொண்டு வரப்பட்டபோதும், அதனை நாங்கள் எதிர்த்தோம். அதிலும் மோசமான பல விடயங்கள் இருந்தன. அதனை நாங்கள் எதிர்த்த காரணத்தினால் ஒரு பாராளுமன்ற மேற்பார்வை குழுவில் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று, நாங்கள் எதிர்த்த அனைத்து விடயங்களும் மாற்றியமைக்கப் பட்டன. அப்படியிருந்தும் வேறுசில புதுவிடயங்கள் அதிலிருந்த காரணத்தினால் பலர் எதிர்த்தார்கள். அவையும் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்லியிருந்தோம்.

இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் நடைபெற்ற காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட விரோதமாக பிரதமரை நீக்கி மகிந்த ராஜபக்சவினை நியமித்த அரசியலமைப்புக்கு எதிரான புரட்சி காரணமாக இந்த நாடு ஸ்திரமற்ற தன்மைக்கு சென்றுவிட்டது. அரசாங்கத்திற்கு அங்கு பெரும்பான்மையும் இருக்கவில்லை. அதனை தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் நடை பெற்றவுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கினால் எங்களால் தாக்குதலை தடுக்கமுடியாது என பாதுகாப்பு தரப்பினர் கோசத்தினை எழுப்பி, கடுமையான சட்டமும் கடுமையான ஆட்சியாளர்களும் வேண்டும் என்ற கோசத்தினை எழுப்பித்தான் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படாலும் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானதும் நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.

எனினும் இக்கருத்தினை மறுத்துள்ள ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கடந்த அரசுக்கு முட்டுக்கொடுத்த நிலையில் தமது கோரிக்கையினை வலிமையாக முன்வைத்து அவற்றினை நீக்கியிருக்க முடியும்” என தெரிவித்துள்ளார். தற்போது தமது அரசியல் இருப்பினை தக்கவைக்க இவ்வாறான கையெழுத்துப் போராட்டம் என்னும் நாடகத்தினை முன்னெடுப்பதாகவும் விமர்சனத்தை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், இந்த கையெழுத்துப் போராட்டம் என்பது தமிழ் பேசும் மக்கள் மத்தியிலான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமே இந்த கோரிக்கை எழுந்துவந்த நிலையில், இன்று கிழக்கில் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இந்த கோரிக்கை வலுத்துவருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கக்கோரி கோரிய கையெழுத்துப் போராட்டம் ஒரு நாடகமாக பார்க்கப்பட்டாலும், அந்தப் போராட்டம் தமது அரசியலிருப்பை தக்கவைப்பதற்கான போராட்டமாக பார்க்கப்பட்டாலும் இந்த போராட்டம் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் உள்ளக்கிடங்கை வெளிப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பாக பாவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து இன்று பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான குரல் என்பது மிகவும் பலமாக எழுந்துள்ளது. இந்த குரல் என்பது விரிவாக்கம் அடைந்து தமிழ் தேசியத்தின் கட்டமைப்புக்கான குரலாக மாற்றமடைவதற்கு அறிகுறிகள் தென்படுவதை காணமுடிகின்றது.

அண்மையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்ககோரும் கையெழுத்துப் போராட்டத்தில் பெருமளவான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்களின் உள்ளக்கிடக்கைகள் அந்தவேளையில் வெளிப்படுத்தப்பட்டன.

கடந்த 50வருடத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சட்டத்திற்கு எதிராக பல தசாப்தங்களாக போராடி வருகின்றனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் சமூகம் மீது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கோரப்பிடியை அந்த சமூகத்திற்குக் காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீடிப்பதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் கொண்டுவந்த போதேல்லாம், நீ முந்தி நான் முந்தியென கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கிய முஸ்லிம் கட்சிகள், இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவதற்கான போராட்டத்தில் கை கோர்த்து நிற்கின்றது.

இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தெளிவான அரசியல் பார்வையேற்படத் தொடங்கியுள்ளதை அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்ககோரியதான போராட்டத்தில் காணமுடிந்தது. எந்த முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கைகளுமின்றி பெருமளவான முஸ்லிம் மக்கள் அந்த போராட்டத்தில் பங்கேற்றது மட்டுமன்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  வெளிப்படுத்தியதையும் காண முடிந்தது.

அந்த நேரத்தில் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்னொருவர் தெரிவித்த கருத்து என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை வெளிப்படுத்தியதாக அமைந்தது. அதாவது கடந்த காலத்தில் “தமிழ் மக்கள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டபோது அதன் வலியை நாங்கள் உணரவில்லை. அது ஏதோ தமிழ் சமூகத்திற்கு மட்டும் கொண்டுவரப்பட்ட சட்டம். அதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று இருந்தோம். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எமது அப்பாவி உறவுகள் கைது செய்யப்பட்டு, எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி சிறையில் அடைக்கப்பட்டபோது தான் அதன் வேதனைகளை எங்களால் உணரமுடிந்தது. இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சட்டமே உள்ளது. இந்த நாட்டில் எந்த சிங்கள அரசும் தமிழ்பேசும் மக்களை மதிக்காது” என்று அந்த முஸ்லிம் பெண்மணி ஆக்ரோசமாகவும், உண்மையினையும் அந்த போராட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் போராட்டம் என்பது தமிழ்பேசும் மக்களுக்கான போராட்டமாகவே என்றும் முன்னெடுத்து வரப்பட்டது. சிங்கள பேரினவாதிகளில் பிரித்தாளும் தந்திரோபாய செயற்பாடுகள் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் இரு சமூகங்களையும் மோதவிட்டு தமது இனவாத கோரமுகத்தினை வெளிப்படுத்தி வந்தது. இரு சமூகங்கள் மத்தியில் இருந்துவந்த நம்பிக்கையீனமும் சந்தேகங்களும் இந்த தீயினால் உருவாக்கப்பட்டதே. இவை காலத்திற்கு காலம் எண்ணையூற்றி கொழுத்தப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடந்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெருமளவில் துணைபோயிருந்த நிலையில் இன்று உண்மையினை முஸ்லிம் மக்கள் உணரும் நிலையேற்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் தோன்றியுள்ள இந்த நல்ல கருத்தாடல்கள், எண்ணப்பாடுகள் வளர்க்கப்பட்டு வடகிழக்கு இணைந்த தமிழ் பேசும் தாயகத்திலேயே தமிழ்பேசும் மக்கள் நிம்மதியாகவும் சுயகௌரவத்துடன் வாழும் சூழ்நிலையேற்படும் என்பதை முன்கொண்டு செல்ல அனைத்து அரசியல் தரப்புகளும் முன்வர வேண்டும்.

Tamil News

1 COMMENT

  1. […] பயங்கரவாத தடைச்சட்டம் கிழக்கு முஸ்லிம்களின் எண்ணப்பாடு: பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது. பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக ஒரு இனத்தின் குரலைமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-173-march-13/ https://www.ilakku.org/  […]

Leave a Reply