பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தலும் | துரைசாமி நடராஜா

பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தலும்

பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தலும்

சமூகப் பாதுகாப்பு என்பது தனியொரு மனிதனால் சாத்தியமாவதில்லை. அது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். அனைத்துத் தரப்பினரினதும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு சமூகப் பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றைச் சாத்தியப்படுத்துவதாக அமையும். இந்நிலையில் பெருந்தோட்ட வாழ்வியல் நிலைமைகள் மோசமடைந்து வரும் சமகாலத்தில் தொழிலாளர்களையும் தோட்டங்களையும் அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய மிகப்பெரும் தேவைப்பாடு காணப்படுகின்றது.

பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தலும்இதனை சாத்தியப்படுத்துவதற்கு சமூகத்தின் சகல தரப்பினர்களினதும் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத தாகின்றது. இதேவேளை சமூகத்தின் தேவைகளை இனங்கண்டு அவற்றை உரியவாறு அடைந்து கொள்வதற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமெனினும் இது தொடர்பான முன்னெடுப்புக்கள் எந்தளவுக்கு இடம்பெறுகின்றன என்பது கேள்விக்குறியாகும். இந்த நிலையில் மலையக சமூகம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அடைந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் என்பவற்றை புத்திஜீவிகள் மற்றும் நலன்விரும்பிகள் போன்ற பலரினதும் ஒத்துழைப்புடன் சர்வதேசமயப்படுத்தும்  ஒரு முயற்சியினை  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மேற்கொண்டு வருகின்றார். உண்மையில் இந்த முயற்சி வரவேற்கக் கூடியதே எனினும் சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதில் சகலரதும் ஒன்றுபட்ட அழுத்தமே அவசியமாகத் தேவைப்படுகின்றது.

உலகமயமாக்கல் நிலைமையின் கீழ் இன்று ஒவ்வொரு சமூகமும் உச்சகட்ட அபிவிருத்தியினை  அடைந்து கொள்வதில் பெரிதும் அக்கறை செலுத்தி வருகின்றன. கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சமூக நிலைமைகள் போன்ற பலவற்றிலும் ஒரு முன்னேற்றகரமான போக்கினை ஏற்படுத்திக் கொள்வது சமூகங்களின் பிரதான நோக்கமாக உள்ளது. இதனை அடைந்து கொள்ளும் பொருட்டு பல சமூகங்கள் தமது சமூகத்தின் சமகால நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளும் நோக்கில் ஆய்வுப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. ஆய்வின் மூலமாக அபிவிருத்தி என்ற எண்ணக்கருவிற்கு வலுச் சேர்ப்பதே சமூகங்களின் பிரதான நோக்கமாகவுள்ளது. இந்த வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இடையிலான இடைவெளிகள் களையப்பட்டும், சமூகத்தின் உள்ளக பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டும் சமூக மேம்பாட்டுக்கான வித்துக்கள் இடப்படுதல் வேண்டும். இதேவேளை சமூகத்தின் பல்துறை சார்ந்த அபிவிருத்திக்கு பொருளாதார ஸ்திரப்பாடு அவசியமென்பதனை உணர்ந்து கொண்டுள்ள சமூகங்கள் பொருளாதார அபிவிருத்தி குறித்து அதீத கவனம் செலுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த வகையில் மலையக சமூகம் தொடர்பில் நாம் நோக்குகின்ற போது, பொருளாதார பின்னடைவு நிலைமைகள் இச்சமூகத்தின் பல்துறைசார் எழுச்சியை மழுங்கடிக்கச் செய்வதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்றால் மிகையாகாது. ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு பொருளாதார ஸ்திரப்பாடு அவசியமெனினும் மலையகத்தின் நிலைமைகள் பொருளாதார ஸ்திரமற்ற ஒரு போக்கினையே வெளிப்படுத்துவதாகவுள்ளன. எனவேதான் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொடுத்து ஒரு கௌரவமான பிரஜையாக மலையக மக்களை வாழச் செய்வதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே விடுக்கப்பட்டு வருகின்றன. என்றபோதும் சாதக விளைவுகள் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதும் தெரிந்ததேயாகும். எல்லா துறைகளிலும் சாண் ஏறினால் முழம் சறுக்கும் ஒரு நிலையே இங்கு காணப்படுகின்றது.

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்ட அழுத்தம், பொதுவான கோரிக்கைகள் முன்வைப்பு என்பன இல்லாத ஒரு நிலையே நிலவுகின்றது என்பது பலரின் குற்றச்சாட்டாகும். தமது கட்சியை தம்மை அபிவிருத்தி செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர சமூக மேம்பாடு கருதிய, பொதுவான இலக்குகளை முன்னிறுத்திய செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த பொது நோக்குப் பஞ்சநிலை மலையக சமூகத்தின் பின்னடைவிற்கு வலுசேர்க்கின்றது என்பதனை மறுப்பதற்கில்லை. உரிமைகள் வெறுமனே கேட்காமல் கிடைப்பதில்லை. தங்கத் தட்டிலே உரிமைகளை வைத்து யாரும் வெறுமனே தந்துவிடப் போவதுமில்லை.

அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் என்பனவே உரிமைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள உந்துசக்தியாக அமையும் என்பதும் உண்மையாகும். இதேவேளை உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு சமூகத்தினதும் இசமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதி களிடையே ஒருமைத்தன்மை பெரிதும் அவசியமாகின்றது. எனினும் மலையக சமூகத்தைப் பொறுத்தவரையில், இந்த ஒருமைத்தன்மையை காண முடியவில்லை. வீடு, காணி விடயம், அரச நிர்வாக நிறுவனங்களை ஏற்படுத்துதல் போன்ற பலவற்றுக்கும் பொது இணக்கப்பாடு அவசியமாகும். எனினும் பொது இணக்கப்பாடு கேள்விக்குறியான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளன. அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகளை மையப்படுத்தி இவர்கள் தாம் பிரிந்து நிற்பதோடு தொழிலாளர்களையும் பிரித்தாள்வதையே பெரிதும் அவதானிக்க முடிகின்றது.

இந்தியாவில் இருந்து முக்கிய பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வருகிறாரென்றால் அல்லது சர்வதேச முக்கியஸ்தர் ஒருவர் இலங்கைக்கு வருகிறாரென்றால் மலையக கட்சிகள் அவரை தனித்தனியாகச் சென்று சந்திப்பதிலும் தனித்தனி கோரிக்கைகளை முன்வைப்பதிலுமே ஆர்வம் செலுத்துகின்றன. மலையக மக்களின் தேவைகளை உள்ளடக்கிய பொதுவான ஒரு ஆவணத்தை, கட்சிகள் அனைத்தினதும்  இணக்கப்பாட்டுடன் தயார் செய்து, அவற்றை பொதுவாக சகல பிரதிநிதிகளும் இணைந்து கையளிக்கும் நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன.

இத்தகைய நிலைமைகள் அழுத்தக் குறைவினை ஏற்படுத்துவதோடு எதிர்பார்த்த சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கும் இட்டுச் செல்கின்றது. இந்நிலை விரும்பத்தக்கதல்ல. இதேவேளை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வலியுறுத்துகின்றன. அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் மலையக பிரதிநிதிகள் மோடியை சந்திப்பார்களாக இருந்தால், பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து, சகல கட்சிகளின் பங்களிப்புடனான பொதுக்குழுவாகச் சென்று சந்திப்பதே சாதக விளைவுகளுக்கு அதிகளவில் அடித்தளமாகும் என்பதனை மறந்து விடுதல் கூடாது. கடந்த காலத்தில் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இலங்கை வந்தபோது மலையகக் கட்சிகள் தனித்தனியாக சென்று சந்தித்து வரலாறு இனியும் தொடரக்கூடாது.

போலியான வெளிப்பாடுகள்

இதேவேளை வெளிநாட்டு பிரதாதிநிதிகளிடம் மலையக மக்களின் இயல்பு நிலையை வெளிப்படுத்தும் வகையில் உண்மையான வெளிப்பாடுகள் முன்வைக்கப்படுதல் வேண்டும். அதைவிடுத்து ஒப்பனையுடன் கூடிய முன்வைப்புக்கள் உரிய பயனை ஒரு போதும் தரமாட்டாது. பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஒப்பனையுடன் கூடிய பெண்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இது உண்மை நிலையை மூடி மறைத்து சர்வதேசத்திற்கு போலியான முகத்தைத் காட்டும் ஒரு நடவடிக்கை என்று விமர்சனங்கள் மேலெழுந்திருந்தமையும் தெரிந்த விடயமாகும்.

பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தலும்மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகள் சிறப்பாக உள்ளதாக போலியாக  வெளிப்படுத்துவதன் காரணமாக இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய சில சர்வதேச உதவிகளும் கிடைக்காமல் போகும் அபாயமுள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய போக்குகள் களைந்தெறியப்பட்டு சர்வதேசத்திற்கு மலையக மக்களின் உண்மை நிலை தெளிவுபடுத்தப்படுதல் வேண்டும். இந்நிலையானது சர்வதேசம் பல்துறை சார்ந்த உதவிகளையும் மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வாய்ப்பளிப்பதாக அமையும்.

மலையக மக்களின் பிரச்சினைகள்  அதிகமுள்ள நிலையில், இவை குறித்து ஒரு தெளிவான பட்டியலை முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. பிரச்சினையின் தன்மை, அதன் உக்கிரநிலை, கடந்தகால செயற்பாடுகளின் ஊடாக பிரச்சினை தீர்விற்கு வழங்கிய பங்களிப்புஇ இதனால் கிடைத்த விளைவுகள், எதிர்காலத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் என்றவாறு பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டம் இடம்பெறுதல் வேண்டும். ஆட்சியாளர்கள் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட இந்தக் கூற்றினை மறுத்துரைக்காமல் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

பெரும்பான்மை ஆட்சியாளர்களின் ஒதுக்கல் போக்கு இவர்களை கசப்படையச் செய்திருக்கின்றது. கல்லுக்குள்ளும் ஈரத்தை கசிய வைத்திருக்கின்றது. எனவே மலையக மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து, தீர்த்துக் கொள்ள முற்படுதல் வேண்டும் என்று ஒரு சாராரின் கருத்துக்களும் ஓங்கி ஒலிக்கின்றன. குறிப்பாக தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றது. தற்காலிக வீடுகள், குடிசைகள் என்பவற்றில் பல தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றமை ஒன்றும் புதிய விடயமல்ல. இவர்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய இலங்கையின் ஆட்சியாளர்களிடம் கோருவதால் உரிய சாதக விளைவுகள் ஏற்படாது. இதனை சர்வதேசத்திடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது சிலரின் கருத்தாக உள்ளது. இதன்போது  மலையக மக்களின் வீட்டுத் தேவையை பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் அதிகமாக பங்களிப்பு வழங்கி பூர்த்தி செய்ய வேண்டியதன்  அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மலையக மக்கள் இலைமறைகாயாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமுள்ளதாக குறிப்பிடும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இப்பிரச்சினைகளை பட்டியல் படுத்தி சர்வதேசத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றார். இது தொடர்பில் அவர் தலைமையில் இம்மாதத்தில் பதுளையில் உச்சிமாநாடு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் மலையக  மக்களின் நலன்களை விரும்பும் சகலரும் கட்சி, அரசியல், தொழிற்சங்க பேதமின்றி கலந்து கொண்டு, மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பலவற்றையும் முன்வைக்க முடியும்.

இப்பிரச்சினைகள் பலவும் முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் படுத்தப்பட்டு, பிரேரணையும் நிறைவேற்றப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்விடயம் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதோடு, சர்வதேச தொழில் ஸ்தாபனம், உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார். மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தும் இம்முயற்சி பல சாதக விளைவுகளையும் பெற்றுக் கொடுக்கும் என்று தான் திடமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும் மலையக மக்களின் பிரச்சினைகள் புதுப்புது வடிவில் மேலோங்கி வரும் நிலையில் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த இன்னும் பல முக்கியஸ்தர்களும் வாய்மூடி மௌனியாக இருப்பது சமூகத்திற்கு இழைக்கின்ற மிகப்பெரும் துரோகமாகும்.இது ஏறிய ஏணியை எட்டி உதைக்கின்ற ஒரு செயலுமாகும். இது சமூகத்தின் தடமிழப்பிற்கு வலுசேர்ப்பதாக அமைவதோடு நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கும் உந்துசக்தியாகும். இந்நிலையில் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்து, சமூகத்தின் உறுதியான நிலைப்பாட்டிற்கு தோள்கொடுக்க வேண்டியது சமூகம் சார் சகலரினதும் கடமையும் பொறுப்புமாகும்.இதிலிருந்து யாரும் விலகிச் செல்ல முற்படுதல் கூடாது.

Tamil News