ஆளும் கூட்டணியில் பெரும் வெடிப்பு அதிருப்தியின் உச்சத்தில் மக்கள்! | அகிலன்

ஆளும் கூட்டணி

ஆளும் கூட்டணியில் பெரும் வெடிப்பு

ராஜபக்சக்களைப் பொறுத்தவரையில் நெருக்கடியின் உச்சத்துக்குச் சென்று விட்டார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்காமையால் ஜெனீவாவில் நெக்கடி, ஐரோப்பிய ஒன்றிய அழுத்தம் என்பன ஒரு புறம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த உபாயமும் இல்லாமையால் அதிகரிக்கும் மக்களின் அதிருப்தி மறுபுறம்.

இரு அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டமையால் சீற்றமடைந்திருக்கும் பங்காளிக் கட்சிகளின் நெருக்குதல் மறுபுறம் என அரசு தடுமாறிக் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் அரசுக்கான பெரும்பான்மை கேள்விக் குறியாகலாம் என்ற நிலையும் உள்ளது. இவ்வளவு நெருக்கடிகளையும் ராஜபக்சக்கள் எப்படிச் சமாளிக்கப் போகின்றார்கள்?

ஆளும் கூட்டணிஅமைச்சர் பதவியிலிருந்து விமல் வீரவன்ச வையும், உதய கம்மன்பிலவையும் துக்கி எறிவதென்பது ஆபத்தான முடிவு என்பது ராஜபக்சக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. பொருளாதாரப் பிரச்சினையால் நாட்டு மக்கள் அனைவருமே அதிருப்தியின் உச்சத்தில் இருக்கின்றார்கள். ஆளும் கூட்டணியில் இருக்கும் பங்காளிக் கட்சிகள் அனைத்துமே ராஜபக்சக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டிருக்கின்றன. மொட்டுக் கட்சிக்குள்ளேயே அதிருப்தியாளர் குழு ஒன்று உருவாகியிருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில், சிங்கள – பௌத்த மக்களின் அபிமானத்தைப் பெற்ற இருவரைத் தூக்கி எறிவது அரசின் இருப்பையே ஆட்டங்காணச் செய்யக்கூடிய ஒன்றாக மாறலாம் என்பது ராஜபக்சக்களுக்கு தெரியாததல்ல. ஆனால், அவ்வாறு செய்வதற்கு ராஜபக்சக்கள் எவ்வாறு துணிந்தார்கள்?

ராஜபக்சக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பொறுமையின் எல்லைக்கே சென்று விட்டார்கள். குறிப்பாக மொட்டு கட்சியின் ஸ்தாபகரும், அதன் மூளையாக வர்ணிக்கப்படுபவருமான பஸில் ராஜபக்சவை இலக்குவைத்து விமல் வீரவன்ச தொடர்ச்சியாகத் தாக்குவதைப் பொறுத்துக் கொண்டிருப்பது என்பது ராஜபக்சக் களைப் பலவீனமானவர்களாக காட்டிவிடும். அத்துடன் விமல் சொல்வது அனைத்தும் உண்மை என்பதையும் அவர்களே ஏற்றுக்கொள்வது போலாகிவிடும். மக்களும் அதனை நம்பத் தொடங்கிவிடுவார்கள்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் அதிரடியாக விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்பட்டனர். பஸில் கொடுத்த அழுத்தத்தையடுத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அதிரடி முடிவை எடுத்தார். இருந்த போதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த முடிவுடன் ஒத்துப் போகவில்லை எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஒரு கதை உள்ளது. மஹிந்தவின் மீளெழுச்சிக்கு துணையாக இருந்தவர்கள் இந்த இருவரும்தான்.

நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடி நிலைமையில் இருந்து அதனை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பிலான வேலைத்திட்டங்கள் அடங்கிய தேசிய கொள்கை பிரகடனம் மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளில் 11 கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தப் பிரகடனத்தை வெளிட்டன. அரசுக்குள் இருந்துகொண்டே இவ்வாறான பிரகடனம் ஒன்றை வெளியிடுவவதென்பது அரசுக்கு சவாலான ஒன்று என்பது ராஜபக்சக்களின் சீற்றத்துக்கு முதலாவது காரணம்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். அத்துடன் அமைச்சர்களான திஸ்ஸ விதாரண வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். அதுமட்டமன்றி தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவும் பங்கேற்றிருந்தார்.

ஜயவர்தனபுர கோட்டை மொஹான் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் பஸில் ராஜபக்‌ஷவை இலக்கு வைத்து கடுமையாகத் தாக்கினார். ராஜபக்சக்களின் சீற்றத்துக்கு பிரதான காரணம் இதுதான். இதனையடுத்தே அடுத்த நாள் அவரையும் உதய கம்பன்பில வையும் பதவி நீக்கும் தீர்மானம் அதிரடியாக எடுக்கப்பட்டது.

அதனையடுத்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன், அமைச்சரவைக் கூட்டங்களில் தான் பங்கேற்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார். மற்றொரு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா செய்திருக்கின்றார்.

மொட்டுக் கூட்டணியில் ராஜபக்ச சகோதரர்கள் பிரதானமாக இருந்தாலும், அதில் 11 கட்சிகள் பங்காளிகளாக உள்ளன. பங்காளிக் கட்சிகளை ராஜபக்சக்கள் எவ்வாறு நடத்துவார்கள் என்பதற்கு இரு அமைச்சர்கள் தூக்கப்பட்டது சிறந்த உதாரணம். ஏனைய கட்சிகளுக்கும் இது எச்சரிக்கையாக இருக்கும் என ராஜபக்சக்கள் நினைத்தாலும், அதில் அவர்களுக்கும் ஆபத்து உள்ளது.

மொட்டுவில் உள்ள 15 வரையிலான பின்வரிசை உறுப்பினர்கள் அதிருப்தி யடைந்தவர்களாக உள்ளனர். பங்காளிக் கட்சிகள் வெளியேற முற்பட்டால் இவர்களும் வெளியேறலாம். இது தொடர்பில் இரகசியப் பேச்சுக்களும் நடந்துள்ளன. அரச புலனாய்வுப் பிரிவு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததையடுத்தே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரப் பேச்சுக்குச் சென்றிருந்தார்.

பங்காளிக் கட்சிகளில் 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனைவிட, மொட்டுவின் பின்வரிசை உறுப்பினர்கள் 15 பேர் அதிருப்தியாளர்களாக இருக்கின்றார்கள். நிலைமை மோசமானால் இந்த 46 பேரும் அரசிலிருந்து வெளியேறினால் அரசு ஆட்டம் காணும். கப்பல் கவிழும் நிலை உருவாகினால் அதில் இருப்பவர்களும் பாய்ந்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் முற்படுவார்கள்.

மைத்திரியுடன் பேசி அவரை சமாதானப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என ராஜபக்சக்கள் முன்னெடுத்த நகர்வுதான் கடந்த செவ்வாய்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்திய பேச்சு. மைத்திரி தலைமையில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். மைத்திரியை சமாளித்தால் வீரவன்ச குழுவுக்கு அஞ்சத் தேவையில்லை என்பது ராஜபக்சக்களின் கணிப்பு!

மைத்திரியை இலகுவாக சமாளிக்கலாம் என ராஜபக்சக்கள் கணக்குப் போடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக – உயித்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் மைத்திரிதான் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சொல்லி வருகின்றார். வத்திக்கான், ஜெனிவா எனவும் நீதி கேட்டு அவர் யாத்திரையை ஆரம்பித்து விட்டார். ஆக, மைத்திரியின் தலைக்கு மேல் கத்தி ஒன்று தொங்கிக்கொண்டுள்ளது. அவரைக் காப்பாற்றக் கூடியவர்கள் ராஜபக்சக்கள் தான். அதனால், ராஜபக்சக்களுடன் பகையை வளர்க்க அவர் விரும்ப மாட்டார்.

மறுபுறத்தில் இன்றைய நெருக்கடியிலிருந்து ராஜபக்சக்களைப் பாதுகாக்கக் கூடியவராக மைத்திரிதான் உள்ளார். அதனால்தான் மைத்திரியின் கோரிக்கையை ஏற்று சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக் கின்றார். மைத்திரியை டீல் பண்ணுவது இலகுவானது என ராஜபக்சக்கள் மதிப்பிடுகின்றார்கள். பங்காளின் கட்சிகளின் சீற்றத்தினால் வரக்கூடிய ஆபத்தை சமாளிக்க மைத்திரியை கைகளுக்குள் போட்டுக்கொண்டால் போதுமென்ற நிலையில் தான் அவருடனான பேச்சுக்களுக்கு ராஜபக்சக்கள் இணங்கினார்கள்.

மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஒரு செய்தி கசியவிடப்பட்டது. ரணில் அதனை மறுத்தார். நீங்கள் வெளியேறினாலும் பிரச்சினையில்லை நாங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்து நிலைமைகளை சமாளிப்போம் என பங்காளிக் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இந்தச் செய்தி கசியவிடப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் உள்ளது.

எது எப்படியிருந்தாலும் மொட்டு கூட்டணியில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்பட்டு விட்டது. அதனை ஒட்டுப்போட்டு அடைப்பது இனி கடினமானதாகவே இருக்கும் என்பது மட்டும் உண்மை. அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையால் உருவாகியுள்ள நெருக்கடி – வாழ்வாதார பிரச்சினைகளால் மக்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள். இந்த நிலையில், அரசைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதென்பது தமது எதிர்கால அரசியலுக்கே ஆபத்தான தாகலாம் என பங்காளிக் கட்சிகள் கருதும் நிலையும் உருவாகிவிட்டது

Tamil News