இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்

321 Views

இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்

வலுவடையும் இந்திய மேலாண்மையும் தளர்வடையும் ஈழத்தமிழர் அரசியல் உரிமைகளும்

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியிலிருந்து  அதனைப் பிணை எடுக்கும் நட்பு நாடாக இந்தியா இன்று உள்ளது. இந்தப் பிணை எடுப்புக்கு பதிலீடாக இந்தியாவின் பாதுகாப்புக்கு மாலைதீவையும் சிறிலங்காவையும் இணைத்து கடந்த ஆண்டில் இந்தியா உருவாக்கிய உயரதிகாரக் குழுவின் தலைமையகமாகச் சிறிலங்கா கொழும்பை அனுமதித்துள்ளது. இதனால் இந்த உயரதிகாரக்குழுவின் பெயர் ‘பாதுகாப்புக்கான கொழும்பு உயரதிகாரக் குழு’வென்று மொரிசியசின் இணைப்புடனும் சீசெல்சு, பங்காளாதேசின் பார்வைநிலை அனுமதிப்புடனும் பரிணாமம் பெற்றுள்ளது. கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடல், இணையப் பாதுகாப்பு உட்பட்ட முக்கியமான உட்கட்டமைப்புக்கள், தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்கள் என்னும் ஐந்து விடயங்களில் இந்நாடுகள் ஒருமித்துச் செயற்படுதல் என்பது இந்த நாடுகளின் அரசாங்கங்களின் உறுதித்தன்மைக்கு ஒவ்வொரு நாடும் உதவும் பாதுகாப்பு முறைமையாக அமைகிறது. இது இன்றைய நிலையில் சிறிலங்காவுக்குத் தனது அரசாங்கத்தைப் பலப்படுத்தும் பெருந் துணையாகவும் அமைகிறது.

மேலும்  சிறிலங்கா தொடர்பான விடயங்களைத் தனது உள்நாட்டு விவகாரமாகவே இந்தியா மாற்றிவிட்டதற்கு உதாரணமாகப் புதுடெல்லியில் வெளிவிவகாரங் களுக்கான பிரதமரின் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு என்பன உள்ள பகுதி எனச் சொல்லப்படும் நோர்த் புளொக்கில் அல்லாது உள்விவகாரங் களுக்கான பகுதியான சவுத் புளொக்கிலேயே சிறிலங்காவின் நிதியமைச்சர் பசில் ராசபக்சவுடன் கடன் ஒப்பந்த விடயங்களைக் கையாண்டுள்ளமை, இனி சிறிலங்காவும் மறைமுகமான இந்திய மாநிலமாகவே பெயரளவில் இறைமையுடன் செயற்படும் என்பதை உறுதியாக்கியுள்ளது. இந்த இறுக்கமான சமூகப் பொருளாதார அரசியல் ஆன்மீக நிலையெடுப்புக்கு உதவியாகவே பலாலி விமான நிலையமும், காங்கேசன்துறைத் துறைமுகமும் மனிதவள மூலவளப் போக்குவரத்துக்களை இலகுபடுத்த மீண்டும் இந்தியாவால் திறப்பிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா தனது இந்த மேலாண்மைகளுக்கு அனுசரணையாகப் பௌத்த சிங்கள பேரினவாதத்தைக் கண்டுகொள்ளாத அரசியலில் ஈடுபடும் என்பதும், இது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தளர்வடைய வைக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படுவனவாக உள்ளன. சிறிலங்காவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தோற்றுவித்த எந்த 13வது திருத்தத்தையும், வடக்கு கிழக்கு மாகாணசபைகளையும் செயலிழக்க வைக்க வேண்டுமென விரும்பியதோ அதனை இந்திய ஆதரவுடனேயே நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியுடன், இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளது.

ரஸ்ய – உக்ரேன் போரில் இந்தியா அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான நிலையை எடுக்க மறுத்து, ரஸ்யாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வாக்களிக்காது விட்டதும், ரஸ்யாவிடம் இருந்து மலிவு எண்ணெய் கொள்வனவை அதிகரித்துள்ளதும் இதுவரை இந்தியாவின் உலகச் சந்தை நிலைக்காக இணைந்து பயணித்த அமெரிக்காவுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் விளைவாக இந்தோ பசுபிக் கடல் பாதுகாப்பில் அமெரிக்கா, தானே நேரடியாக இறங்கிச் சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரோறியா நூலண்ட் தலைமையில் உயர்மட்ட இராஜதந்திரக் குழுவைச் சிறிலங்காவுடன் பேச்சுகளுக்காக அனுப்பியுள்ளது. இந்த மாற்றத்திற்குக் கட்டியம் கூறுவது போல பாத்பைண்டர் கருத்தரங்கில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் யூலிசங் “எமது கிரகத்தின் எதிர்காலத்தின் பெரும்பகுதி இந்தோ பசுபிக் பகுதியில் எழுதப்படும் என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது. இந்தோ பசுபிக் பகுதியின் மையத்தில் உள்ள இலங்கை முன்னணிப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்” என உரை நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் அனைத்துலக நாணய நிதியத்தின் வழிகாட்டலை ஏற்க இணக்கம் தெரிவித்துள்ள சிறிலங்கா, 22ஆம் திகதி அதாவது ஜனாதிபதி கோட்டாபயவுடனான அமெரிக்கச் சந்திப்புக்கு முதல்நாள் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் என இருந்த பேராசிரியர் ஜி எல் பீரிசின் அமைச்சினை மீளவும் சிறிலங்காவின் ‘வெளிவிவகார அமைச்சு’ எனப் பெயர் மாற்றம் செய்து, அமெரிக்காவுடன்  உறவு கொண்டாடுதல் என்கிற தனது சமநிலைப் பெருமை பாராட்டும் நிலையில் நின்று இறங்கி, விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் பாணியில் அமெரிக்காவை ஏற்கும் விருப்பினை வெளியிட்டுக் கொண்டது.

அமெரிக்காவும் சிறிலங்காவை மனித உரிமைகளின் நிலை என்னும் அடிப்படையில் அணுகாது என்பதை உறுதி செய்யும் வகையில், அமெரிக்க உதவிச் செயலர் விக்ரோறியா நூலண்டும் சிறிலங்காவின் உண்மையைக் கண்டறியும் பொறி முறைக்கும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்தியமைத் தமைக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் பேச வேண்டும் என விக்ரோறியா நூலண்ட் அழைப்பு விடுத்தமை, கோட்டாபயவுக்கு தனது வெளிநாட்டுத் தமிழரை வடக்கு கிழக்கில் முதலிட வைக்க வேண்டும் என்னும் நரித்தந்திர நோக்கை நிறைவேற்ற இது உதவுமென்ற நம்பிக்கையையும் அளித்துள்ளது. அமெரிக்கா எம் சி. சி பொருளாதார உதவிகளையும், அனைத்துலக நாணய நிதிய உதவிகளையும் வழங்கி, சிறிலங்காவைப் பலப்படுத்தப்போகிறது என்பது ஊகிக்கப்படக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது வேறெந்த நாடாக அமைப்பாக இருந்தாலும் சரி ஈழத்தமிழர்களுக்குச் சிறிலங்கா செய்த இனஅழிப்புக் குறித்து தங்கள் தேவைகளின் அடிப்படையில் தண்டனை நீதியோ, பரிகார நீதியோ, அல்லது நிலைமாற்று நீதியோ பெற்றுக் கொடுத்தலை முன்னிலைப்படுத்த மாட்டா. புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் எந்த அளவுக்கு இந்த விடயத்தில் ஒருங்கிணைந்து நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்துவார்களோ, அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழர்களுக்கான சமூக நீதி என்பதை மனித உரிமைகளிலும், அமைதியிலும் அக்கறை காட்டும் உலக மக்களையும், அவர்களது அமைப்புக்களையும் கொண்டு நடைமுறைச் சாத்தியமாக்க இயலும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News

Leave a Reply