வர்த்தகம், கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் – ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி

download 1 வர்த்தகம், கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி

கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு குழு கூட்டத்தில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு குழுவில் தற்காலிக உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்துக்கு   தலைமை வகிக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பொது விவாதம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக   தலைமையேற்று உரையாற்றுகையில், “கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். இதற்காக ஐந்து அம்சங்களை பின்பற்றலாம். இதன் அடிப்படையில் விரிவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கடல்சார் ஒத்துழைப்பில் உள்ள பிரச்சினைகள், பயங்கரவாதத்துக்கும், கடற் கொள்ளையர்களுக்கும் உதவுவதாக அமைந்துள்ளது. முதலாவதாக, சட்டப்படியான கடல்சார் வர்த்தகத்துக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இரண்டாவது, தற்போது உள்ள கடல்சார் உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இது ஏற்படுத்தும். சர்வதேச அளவில் இணைந்து செயல்பட இது வழி வகுக்கும்.

மூன்றாவதாக, இயற்கை சீற்றம் மற்றும் கடல் பிராந்தியத்துக்கு உள்ள ஆபத்துகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். நான்காவது, கடல்கள் மாசுபடுவதை தடுப்பதில் அனைவரும் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும். ஐந்தாவதாக, கடல்சார் ஆதாரங்களை பயன்படுத்துவதில் அனைவருக்கும் பொறுப்புணர்வு தேவை. சில நாடுகள் மட்டுமே அதிகளவில் மீன் பிடிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.”  என வலியுறுத்தியுள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021