ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் அகதி வாழ்வின் அவலங்கள்! | இரா.ம.அனுதரன்

 

அகதி வாழ்வின் அவலங்கள்

ஈழத்தமிழர்களின் அகதி வாழ்வின் அவலங்கள்

அகதி வாழ்வின் அவலங்கள் ஈழத் தமிழர்களை விடாது துரத்தும் வகையில் தாய்த் தமிழகத்தை நோக்கிய புலம்பெயர்வு இன்று இலங்கைத் தீவு சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடி எனும் புதிய பின்னணியில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கைத் தீவின் ஆதி குடிகளாக விளங்கும் ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தை, சுதந்திரத்தின் பெயரால் பறித்தெடுத்து அதனை சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் பிரித்தானிய அரசால் 1948 பெப்வைரி 04 இல் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.

அன்று தொடங்கிய அவல வாழ்வு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணிகளின் பெயரால் ஈழத்தமிழர்களை விடாது துரத்தி வருகின்றது.

தாய் நிலத்தில் வாழவே முடியாத நிலையில் விடிவு தேடும் ஈழத்தமிழர்களின் முதற்தெரிவாக தமிழகம் நோக்கிய புலம்பெயர்வே அமைந்து விடுகிறது. இவ்வாறு விடிவு தேடும் புலம்பெயர்வு நாலா திசைகளை நோக்கியதாக இருந்து வந்தாலும், தமிழ்நாடு நோக்கிய புலம்பெயர்வு என்பது சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகவே பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு மாறிவிடுவது கசப்பான உண்மையாகும்.

அகதி வாழ்வின் அவலங்கள்தமிழ்நாட்டுடனான கடல் வணிகம் செய்து வந்த ஈழத்தமிழர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக தமது சொந்தப் படகுகளிலேயே சத்தம் சந்தடியின்றி தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தமை ஆரம்ப நாட்களில் இடம்பெற்றிருந்தது. இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் பெயரால் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அட்டூழியங்களில் இருந்து தப்பிக்கும் நோக்குடனேயே இவ்வாறான குடிப்பெயர்வு ஆரம்ப நாட்களில் இடம்பெற்றிருந்தது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நிகழ்வுகள், தமிழ்நாடு நோக்கிய ஈழத்தமிழர்களது புலம்பெயர்வை அதிகப்படுத்தியிருந்தது. அப்போது தொடங்கிய விடிவு தேடும் ஈழத்தமிழர்களின் படகுப் பயணம் தொடர்கதையாகி வருகிறது.

தமிழ்நாடு நோக்கி அகதிகளாக ஈழத்தமிழர்களது புலம்பெயர்வானது, வெளிப் பார்வைக்கு ஆறுதலான விடயமாகத் தென்பட்டாலும், உண்மை அதுவல்ல என்பது கசப்பான உண்மையாகும்.

அகதி வாழ்வின் அவலங்கள்தொப்புள்கொடி உறவு, தொப்புள்கொடி தேசம் என்பதெல்லாம் வெற்று அரசியல் கோசங்களாகவே அமைந்துவிடுவதே இதற்கு மூலகாரணமாகும். ஈழத்தமிழர்கள் மீதான உணர்வு ரீதியான பற்றும் பாசமும் உள்ள தமிழ்நாட்டு மக்களின் நிலையானது, தமிழ்நாட்டில் சூன்யமாகிப் போகும் ஈழத்தமிழர் வாழ்வில் சிறுதுளியளவு மாறுதல் எதனையும் ஏற்படுத்தி விடுவதில்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை நிலையாகும்.

தாய்த் தமிழகத்தை நம்பி கால்வைக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் குடிமக்களையும் ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்றே இந்தியச் சட்டம் வரையறுக்கின்றது. ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்ற வகைப்படுத்தலே தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்களின் மிகப்பெரும் சாபக்கேடாகும். இந்நிலையை மீறி ஈழத்தமிழர்கள் அங்கு தம்மை நிலைநிறுத்தி பொருளாதார ரீதியில் வளப்படுத்துவது என்பது கல்லில் நாருரிக்கும் செயலிலும் கடினமானது.

ஈழத்தமிழர்களை கண்கொத்திப் பாம்பாக விரட்டிவரும் தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் அடுத்த சவாலாகும். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினரது பழிவாங்கற் செயற்பாடு எப்படியோ அதற்கு நிகரான அச்சுறுத்தல்களை கியூ பிரிவு காவல்துறையினரிடம் இருந்தும் தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கி வருவதனை எவராலும் மறுக்கமுடியாது.

தமிழ்நாட்டு அரசியலில் அவ்வப்போது ஏற்படும் ஈழத்தமிழர் மீதான கரிசனையின் பாற்பட்டு சில-பல ஆறுதலளிக்கும் விடயங்கள் நடந்தேறிவரினும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தமிழ்நாட்டு அகதி வாழ்க்கை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கொதிக்கும் சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாகத்தான் இருக்கும்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வதியும் ஈழத்தமிழ் அகதிகள் சந்தித்துவரும் மேற்சொன்ன நெருக்குவாரங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றி அரவணைக்கும் வல்லமை ஈழத்தமிழ் ஆதரவுத் தரப்பினர், அவர்கள் அரசியல் தரப்பாக இருப்பினும் எவருக்கும் இல்லை.

தனித் தரப்பினராகவும், அரசியல் தரப்பினராகவும் தார்மீக ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது கரிசனை கொள்ளும் தமிழ்நாட்டு உறவுகளின் ஆதரவு செயற்பாடுகளில் எவரும் குறைகண்டுவிட முடியாது. இருப்பினும் பல தசாப்தங்கள் கடந்தும் தொப்புள்கொடி உறவுகளை உரிமையுடன் அரவைணைத்து வாழவைக்கும் வகையில் அரசியல் மாற்றம் எதனையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தாது, அவர்களை பரிதாபத்திற்கு உரியவர்களாக கொல்லைப்புறத்தில் அகதிகளாகவே குந்தவைக்கப்பட்டிருக்கும் அவல நிலையே அவர்களது கையாலாகத் தனத்தின் சான்றாகும்.

ஈழத்தமிழர் ஆதரவுக் கட்சிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது, ஈழத்தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும் ஆதரவுடன் செயற்படுவது ஆறுதலளிக்கும் விடயமாகும். அகதித் தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்கள் சகல உரிமைகளுடன் சக மனிதர்களாக தமிழ்நாட்டில் வாழும் நிலையை அரசியல் தீர்மானமாக கொண்டுவராதவரை தற்போதைய ஆதரவு நிலையும் கானல் நீராகவே மாறும் என்பது திண்ணம்.

இலங்கையில் இருந்து விடிவு தேடிப் புறப்பட்டோரின் நிலைகளை ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்ப்போமாயின், தமிழ்நாட்டு அகதி வாழ்வின் அவலத்தை உணர முடியும். ஒரே தாய் வயிற்றில் பிறந்து, ஒருவர் ஐரோப்பிய நாட்டிலும் மற்றுமொருவர் தமிழ்நாட்டிலும் வாழும் நிலையை சற்று சிந்தித்துப் பார்த்தால் தமிழ்நாடு எவ்வளவு கீழான நிலையில் எம்மை கையாள்கிறது என்பது வெட்டவெளிச்சமாகும்.

எங்களுடைய இனமும் இல்லை, நாங்கள் பேசும் மொழி பேசுபவர்களும் இல்லை, எமது கலை – கலாசார – பண்பாட்டு விழுமியங்களைப் பேணுபவர்களும் இல்லை, அம்மா என்று அலறினால் கூட அந்த ஒலியினூடாக வலிகளை உணரக்கூடியவர்களும் இல்லை. ஆம், யாவற்றிலும் இல்லை என்றான மேற்குலகத்தார் அகதித் தஞ்சம் கோரிச் சென்ற ஈழத்தமிழர்களது கோரிக்கைகளை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமது குடிகளுக்கு சமமாகவே நடத்துகின்றனர். ஆனால் மேற்சொன்ன யாவற்றிலும் ஓமென ஒருமைப்படும் தாய்த் தமிழ்நாட்டில் மட்டும் பரிதாபத்திற்குரிய சமூகமாக எம்மை இன்றளவும் பேணிவருகின்றமையை யாரேனும் மறுக்க முடியுமா?

இந்தப் பின்னணியில் தான் இலங்கைத் தீவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தமிழ்நாடு நோக்கி அகதிகளாகப் படகேறுபவர்களது எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதனை வேதனையுடன் நோக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

முன்னர் குறிப்பிட்டதைப் போன்று தற்போதைய தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் பின்னணியில் தற்போது அகதித் தஞ்சம் கோரிச் செல்வோருக்கும் நல்ல வரவேற்பிருக்கும், கவனிப்பும் இருக்கும். ஆனால் அதுமட்டும் போதவே போதாது என்பதை படகேறும் எமது உறவுகள் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்று நேரச் சாப்பாடும், உடுத்த உடையும், ஒதுங்குவதற்கு நிழலும் இருந்தால் போதும் என்றால், தமிழ்நாட்டு அகதிவாழ்வு தற்போதைக்கு ஓர் ஆறுதலே. நாளைய எமது எதிர்காலம்…? என்பதை சிந்திப்போமாயின், தமிழ்நாட்டு அகதி வாழ்க்கை சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்ததாகவே மாறும்.

தற்போது இப்பத்தி எழுதப்படும் வரை இரு முயற்சிகளில் 16 பேர் தமிழ்நாட்டிற்கு அகதித் தஞ்சம் கோரி படகு மூலமாக சென்றுள்ளனர். இவர்களை இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்குமாறு இராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த அடிப்படையில் சட்டவிரோத குடியேறிகளாக புழல் சிறையில் அடைக்கும் நிலையே வழமையானதாயினும், தற்போதைய அரசு மனிதாபிமான ரீதியில் இவ்விடயத்தை அணுகியுள்ளது என்பதன் வெளிப்பாடாகவே அகதிகள் முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை உணர்த்தி நிற்கின்றது.

இந்நெகிழ்வுப் போக்கானது எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் தமிழ்நாட்டை நோக்கி பயணிப்பதற்கான சாதகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிநிலை காரணமாக சுமார் இரண்டாயிரம் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டை நோக்கி வரக்கூடும் என்பதாக தமிழ்நாடு அரசுதரப்பில் உணரப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

எது எப்படி இருந்தாலும், இலங்கையில் வாழமுடியாத நிலை உருவாக்கப்பட்டிருப்பது உண்மை. அதன் விளைவாக வேறெதனையும் கருத்தில் கொள்ளாது தற்காலிக ஆறுதலை நோக்கியதாக தமிழ்நாடு நோக்கிய படகுப் பயணங்கள் தொடர்வதும் தவிர்க்கவியலாததாகவே மாறிவிட்டதையும் மறுப்பதற்கில்லை.

Tamil News