இலங்கையில் உள்ள பொருளாதார ஒழுங்கு நிச்சயம் மாற்றப்பட வேண்டும் | விரிவுரையாளர் ராஜ்குமார்

இலங்கையின் பொருளாதார ஒழுங்கு

மாற்றப்பட வேண்டிய இலங்கையின் பொருளாதார ஒழுங்கு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், அந்த நெருக்கடி ஏற்பட்ட காரணத்தையும், அதனை சரிசெய்வது தொடர்பாகவும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான விரிவுரையாளர் ராஜ்குமார் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்.

கேள்வி:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவிடம் கடன் வாங்கியது. இந்தியா கடனைக் கொடுப்பதற்கு முன்னர் நிபந்தனை விதித்தது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவிருப்பது. இலங்கையில் கடன் தொகை ஒரு பாரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. கடன் தொல்லையால் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மூலம் நாட்டை அதள பாதாள நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அத்துடன் மீள முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்கள். இது பற்றி நேயர்களுக்கு அறியத்தாருங்கள்?

பதில்:
பொருளாதாரப் பிரச்சினை அல்லது சிக்கல் என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல. பலருடைய கருத்தின்படி கொரோனாவிற்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை தான் இந்தளவுக்கு அதள பாதாளத்திற்கு இலங்கையைத் தள்ளியது என்ற ஒரு பார்வை இருக்கின்றது. ஆனால்  உண்மையிலே இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில், தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பொருளாதார கொள்கைகளும், பொருளாதாரமும் அதைவிட ஊழல் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. இந்த அடிப்படையில் தான் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 15, 20 ஆண்டுகள் வீச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.  இதில் முக்கியமான பகுதி தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை மிக உக்கிரமாக நடத்திக் கொண்டிருக்கும் போது இலங்கை அரசாங்கமானது மிக அதிக வட்டி வீதத்தில் பல கடன்களை வாங்கியிருந்தது. அந்த நேரத்தில் பொருளாதாரத்தை சீர் செய்வதற்காக பல கடன்களை வாங்கியிருந்தார்கள்.

அதன்பின் அந்த கடன்கள் என்பது உண்மையிலேயே ஒரு  கடன் வலைக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்காக முக்கியமாக சீனா விரித்த ஒரு வலையாகக்கூடப் பார்க்கப்படுகின்றது.  மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை இலங்கை அரசாங்கத்திடமிருந்து  தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது தங்கள் செல்வாக்கைச் செலுத்த வேண்டும் என்ற வகையில் இரு செய்யப்பட்டது எனக் கூறப்படுகின்றது. வெளிப்படையாக இதைக் கூறுவதாக இருந்தால், கடந்த 10 வருடங்களாக இலங்கையின் பொருளாதார உற்பத்தியில் 87 வீதம் கடன்களின் வட்டிகளைச் செலுத்த மட்டும் பயன்பட்டு வந்துள்ளது. அப்படித்தான் இலங்கையின் பொருளாதாரம் கடந்த பத்து வருடங்கள் ஓடியிருக்கின்றது.

இதன் அடிப்படையில் தான் கொரோனா பெருந்தொற்று மிகப் பாரிய அளவிலே இலங்கையின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது. சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகின்ற, சுற்றுலாப் பயணிகள் ஊடாக அந்நிய செலாவணி இலங்கைக்கு வருகின்ற ஒரு தன்மை இருந்தது. கடந்த இரண்டரை வருடங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக இலங்கையை தக்க வைக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்று கொண்டிருந்த போது தான், உக்ரைன் சண்டையினால் இன்று உலக சந்தையில் எண்ணையின் விலை இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்திருப்பதனால்  இலங்கையின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு செல்லப் போகின்றது.    இந்த இடத்திலே வழமையாக இப்படியான ஒரு நிலையில் இலங்கை போன்ற ஒரு நாடு வரும்போது அதை மீட்பதற்கு பல வழிகள் இருக்கின்றன.  ஒன்று சர்வதேச நாணய நிதியம்  ஊடான உரையாடல்கள் ஊடாக கடன்களை வாங்குவார்கள். சர்வதேச நாணய நிதியம் ஒரு விசித்திரமான நிலையில் இருக்கின்றது.  இலங்கை உட்பட 90 நாடுகள் கொரோனாவிற்கு பிந்திய தங்களுக்கான உதவியை சர்வதேச நாணய நிதியத்திடம்  கோரி நிற்கின்றன.

அதே நேரத்தில் பணம் பொருந்திய பொருளாதார நாடுகள் பொருளாதார சிக்கலில் தாங்கள் எப்படி மீள்வது என்பதை சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  ஏனென்றால் இந்த உக்ரைன் போரின் விளைவாக அவர்களுடைய பொருளாதாரங்களும் பாரிய சரிவை எட்டிக் கொண்டிருக்கின்றன. அது இன்று உலகத்தில் எல்லாப் பொருளாதாரங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே முன்னைய காலத்தில் இலங்கை போன்ற நாடுகள் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வந்தார்கள். அதற்கு சர்வதேச நாடுகள் அல்லது நாணய நிதியத்தின் உதவி கிடைத்தது போல இம்முறை கிடைப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது.  இந்தக் காரணத்தினால் இலங்கையின் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. பொருட்களின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் பொருட்கள் இல்லாத காரணத்தினால், சர்வதேசத்திலிருந்து பொருட்களை இறக்குவதற்கு அவர்களிடம் வெளிநாட்டு நாணயம் இல்லாத காரணத்தினால் இலங்கை மிகவும் ஆபத்தான பொருளாதார நிலையை எட்டியிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

கேள்வி:
விடுதலைப் புலிகளுடனான போரின் போது அவர்களின் பொருளாதாரத்தை தாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்:
இன்றைய உலகத்தில் பொருளாதாரம் மிக முக்கியமான ஒரு அடிப்படையாக இருக்கின்றது. பொருளாதாரத்தை தாக்கினால் அரசியல் மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மூலோபாயமாக பல நாடுகள் கொண்டு வருகின்றது. உதாரணமாக ரஸ்யாவிற்கு எதிரான போரில் பொருளாதாரம் தான் ஆயுதமாக எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள், பொருளாதாரத்திற்கு ஊடாக ரஸ்யாவில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்குத் தான் முயற்சிக்கின்றன. அதேபோல தான் பொருளாதாரம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பதை அந்தக் காலத்திலே விடுதலைப் புலிகள் மிக முக்கியமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். போர் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதாரத்தை இலக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். அரசியல் போராட்டமாக மாறிய பின் அதாவது 2009 இன அழிப்பு யுத்தத்தின் பின்  புலம்பெயர் தேசங்களிலும், தாயகத்திலும் அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளை நகர்த்துகின்ற தமிழ் அமைப்புக்கள் இந்த பொருளாதாரத்தை எப்படி  கையாள்வது என்பதில் எந்தவித கவனமும் செலுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

கேள்வி:
தமிழ் தரப்புடன் பேசுதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்.    பொருளாதார பிரச்சினையை, நிதிப் பிரச்சினை, அந்நிய செலாவணி பிரச்சினைகள் இருக்கின்றன.  தலைதூக்க முடியாமல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சர்வதேச நாடுகளில் பல நாடுகளில் தமிழ் மக்கள் அமைப்புகள் எல்லாம் இருக்கின்றார்கள்.  வளங்கள் வசதிகளோடு எல்லாம் இருக்கிறார்கள். இப்படியான இந்த நேரத்தில் தமிழ் மக்களின் வேணவா தாயகம், தேசியம், தன்னாட்சி தொடர்பாக இந்த நிலையில் தற்போது தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்:
ஆழமான அரசியல் அல்லது மூலோபாயத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்கள், தமிழ் மக்களின் சக்திகள் இன்று இருக்கின்றன. ஏனென்றால், இலங்கையை மீட்டெடுக்க சில சக்திகள், சில நாடுகள், சர்வதேச நாணய நிதியம் போன்றவை முன்வரத்தான் போகின்றன. வரும்போது அவர்கள் சில நிபந்தனைகளை முன்வைக்கப் போகின்றார்கள்.  அந்த நிபந்தனைகள் அவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். முக்கியமாக தனியார்மயப்படுத்தல் என்பது மிக முக்கியமான ஒரு பொருளாதாரக் கொள்கைகளாக முன்னுக்கு வைப்பார்கள்.  அப்படியான தனியார் மயமாக்கப்படும் கொள்கைகள் வரும் போது, அந்த தனியார் மயமாக்கம் என்பது சர்வதேச முதலீடுகளுக்கு ஊடகவும், பாரிய நிறுவனங்கள் அதை கையகப்படுத்தும் தன்மைகளை நாங்கள் பல நாடுகளில் பார்த்திருக்கின்றோம். முக்கியமாக தென்னமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் நாங்கள் இதைக் கண்டிருக்கின்றோம். இப்படியான மாற்றத்திற்காக உலக நாணய நிதியமோ, அல்லது உதவி வருகின்ற நாடுகளோ முயற்சிக்கும்.

756294 இலங்கையில் உள்ள பொருளாதார ஒழுங்கு நிச்சயம் மாற்றப்பட வேண்டும் | விரிவுரையாளர் ராஜ்குமார்அதே நேரம் பொருளாதார மாற்றத்தை வைத்துக் கொண்டு அரசியல் நகர்வு களையும், அரசியல் மாற்றங்களையும் நகர்த்தியதையும் நாங்கள் பார்த்திருக் கின்றோம். சில இடங்களில் அரசியல் கொள்கைகள் மாற்றப்பட்ட வேண்டும். அரசியல் திடத்தன்மை எங்களுக்கு தெரியும் பொருளாதார முதலீடுகள் தனியார் மயப்படுத்தப்பட்டு பொருளாதார முதலீடுகளை உள்ளே கொண்டுவர சில  திட்டங்கள் இருந்தால் மட்டுமே இவர்கள் இந்தக் கடனுதவியை வழங்குவார்கள். இந்தக் கடனுதவியின் நோக்கம் வருகின்ற 15 அல்லது 30 வருடங்களுக்குள் பொருளாதாரத்தை தங்களுக்கு வாய்ப்பாக  மாற்றுவதற்கும் இந்தக் கடனை   திருப்பிக் கொடுக்கக்கூடிய அளவில் இலங்கை பொருளாதாரம் மாற வேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களை செய்வார்கள். இதிலே அரசியல் திடத்தன்மை என்பதை மிக முக்கியமாக வலியுறுத்துவார்கள்.

இந்த இடத்திலே தான் தமிழ்த் தரப்புகள் அரசியல் திடத்தன்மை எப்படி வடிவமைக்கப்பட வேண்டும். எப்படியான அரசியல் தீர்வை நாங்கள் முன்வைக்கின்றோம் என்பது பற்றி வெளிப்படையான உரையாடல்களில் இந்தத் தரப்புக்களுடன் ஈடுபட வேண்டிய மிக முக்கியமான ஒரு நிலையில் இருக்கின்றார்கள். இராஜதந்திர அரசியல் அழுத்தங்களினால் வாக்குகளினால் சாதிக்க முடியாத ஒரு பாரிய மாற்றத்தை பொருளாதாரத்தால் சாதிக்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும் முக்கியமான கருத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று இந்த இடத்தில் வேண்டிக் கொள்கின்றேன்.

கேள்வி:
என்னவிதமான அணுகுமுறைகளை இவர்கள் செய்யலாம் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்?

பதில்:
அடிப்படையிலே இந்தக் கடனுதவிகளை வழங்க முன் பொருளாதார திடத்தன்மை அதாவது அரசியல் திடத்தன்மை பற்றிண ஒரு உரையாடல் வரும் போது, தமிழ் மக்கள் எப்படியான ஒரு அரசியல் திடத் தன்மையை எதிர்பார்க்கின்றார்கள். அப்படியான ஒரு அரசியல் திடத்தன்மை வரும்போது தமிழ் மக்களுடைய பங்களிப்பு எப்படி இருக்க போகின்றது என்பதை புரிந்து கொண்டால் அது யாவரும் புரிந்த விடயம். ஏனெனில், தமிழ் மக்களுக்கான ஒர சுயநிர்ணய உரிமை கொண்ட அல்லது தனியான ஒரு சுய ஆட்சி கொண்ட ஒரு அலகு ஒன்று வரும் போது, அவர்களின் முதலீடுகள் அந்தப் பகுதியிலே அதிகரிக்கும் என்பது உலகம் அறிந்த உண்மை. எந்த உலகமும் அதை மறுக்கவில்லை. இலங்கையில் உள்ள மூன்று சமூகங்களிலும் பொருளாதாரத்தில்  பலம் பொருந்திய ஒரு சமூகமாக ஈழத் தமிழர்கள் இருக்கின் றார்கள்.

இலங்கை அதை சரியாகக் கட்டமைக்கும் போது, அதீத தேசியவாதக் கொள்கையாக இலங்கையை கொண்டு வந்து நடுத்தெருவில் நிறுத்தி இருக்கின்ற அரசியல், இந்த அரசியலிலிருந்து மீண்டு வருகின்ற அரசியல் திடத்தன்மையை  உருவாக்குவதற்கு ஒரு மாநில சுயாட்சி என்ற அளவிலேயோ அலகுகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் வடக்குக் கிழக்கு இணைந்த தாயகப் பகுதியை தனியான அலகாகவும், அதற்கான ஜனநாயக சுய உரிமைகளுடன் கூடிய ஒரு செயற்பாடு இருக்கும் போது நிச்சயமாக அங்கு வெளிநாட்டு அந்நியச் செலாவணியின் வருகை அதிகமாக இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே.  ஆகவே இந்த அடிப்படையில் இந்த விடயங்களை உரையாட வேண்டும். அல்லது இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தக்கூடிய அல்லது ஊன்றுகோல்  கொடுக்கக்கூடிய தமிழரின் பொருளாதார செயற்பாடுகளையும்  நேரடியாக நிறுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

கேள்வி:
பொருளாதாரத்தை தாக்கினால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நீங்கள் கூறினீர்கள்.  சர்வதேசத்தின் அழுத்தம் கொண்டு வந்து இந்த அரசியலில் இந்த ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரத்தின் தாக்கத்தினால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது?

பதில்:
நிச்சயம் இலங்கையில் உள்ள பொருளாதார ஒழுங்கு மாற்றப்பட வேண்டும் என்பது அடிப்படை. மக்கள் இப்படியான ஒரு பொருளாதாரத்தில் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களையோ அன்றன்றைய தங்கள் செயல்பாடுகளை செய்ய முடியாத தோர் மிகவும் பாதகமான நிலையில் இருக்கிறது.  இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு வெளிப்படையாக ஒரு தடையாக இருக்கின்ற மிக முக்கியமான காரணியாக இலங்கையில் இருந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினை பார்க்கப்பட வேண்டும். அப்படியான ஒரு பார்வையை தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் உலகத்திற்குக் கொடுக்கின்றார்கள் இல்லை என்பது தான் எனது கருத்தாக இருக்கின்றது.

இலங்கையில் இவ்வளவு பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கு உள்ளக அரசியல் பிரச்சினைகளும், வெளியே இருக்கின்ற ஒரு பலமான முதலீடு செய்யக் கூடிய சமூகமாக இருக்கும் ஒரு சமூகம் அதைச் செய்யாதிருப்பதும் தான் கரணமாக இன்று உலகப் பரப்பிலே வெளிப்படுத்த வேண்டும். இப்படி வெளிப்படுத்தும் போது கடனைக் கொடுப்பவர்கள் அதாவது கடன் கொடுப்பவர்கள் மீண்டும் கடனைப் பெற வேண்டும் என்றால், எப்படி அந்த  மாற்றத்தை மாற்றவேண்டும் என்ற வழியில் சிந்திக்கத் தொடங்குவார்கள்.

ஆனால் இன்று இருக்கின்ற நிலைமை அவர்கள் வெறுமனே கடனைக் கொடுத்து விட்டு தனியார்மயப்படுத்தல் ஊடாக கடனை மீட்கலாம் என்ற ஒரு அடிப்படையில் தான் அவர்கள் நகர்வார்கள் என்பது ஒரு கணிப்பாக நான் பார்க்கின்றேன். மிக முக்கியமாக நான் எதிர்பார்ப்பது சுகாதாரத்துறையையும், கல்வித் துறையையும் தனியார்மயப்படுத்தச் சொல்லி ஒரு மிகப் பாரிய அழுத்தங்களை இலங்கைக்குக் கொடுப்பார்கள் என்ற ஒரு எதிர்வு கூறலை நான் இலங்கைக்குக் கூற விரும்புகிறேன்.

கேள்வி:
அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர் தரப்பில் ஒரு சரியான வழிகாட்டல் இருக்கின்றதா? ஒரு சரியான புரிதல் இருக்கின்றதா? அமைப்புக்களாக இருக்கட்டும், அரசியல்வாதிகளாக இருக்கட்டும். இது தொடர்பாக இவர்களால் சிந்தித்து செயற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்:
இது இரண்டு தளங்களில் விவாதிக்கவேண்டிய ஒரு வினா. முதலாவது இப்படியான ஒரு சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு உருவாகியிருக்கின்றது என்பதை ஒட்டுமொத்த தமிழ் அரசியல் தலைமைகள். அது புலம்பெயர்ந்த தலைமைகளாக இருக்கட்டும், அல்லது தாயகத்தில் இருக்கின்ற தலைமைகளாக இருக்கட்டும். அதைப் புரிந்து கொள்கின்றார்களா? அல்லது புரிந்து கொண்டு அது சார்பான உரையாடல் நடக்கின்றதா? என்பது உண்மையில் ஒரு கேள்விக்குறியாகத்தான் எனக்கு இருக்கின்றது.  அப்படியான ஒரு உரையாடல் ஒரு தளத்திலும், அடுத்த உரையாடல் இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கின்றன ஓடிக்கொண்டிருக்க உலக ஓட்டத்தில் எங்கள் அடிப்படைகள் தாயகம் தேசியம் தன்னாட்சி போன்ற அடிப்படை விழுமியங்களை பாதிக்காத வகையில் எப்படி இந்த உலகத்துக்குள் எங்களை திடப்படுத்திக் கொள்வது அல்லது எங்களுடைய மக்களின் இருப்பை பாதுகாப்பது என்ற அடிப்படையில் சில சிந்தனைகளை அல்லது சில வரைபுகளை முன்வைக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார ஒழுங்குஆனால் தமிழ் மக்களின் அரசியல் தலைவர் களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு தெரிந்த ஒரே ஒரு விடயம் 13 அல்லது இலங்கை இந்திய ஒப்பந்தம் அல்லது மாநில சுயாட்சி இப்படி சில விடயங்களை சில வார்த்தைப் பிரயோகங்களை தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே ஒழிய உண்மையில் இன்றைய பொருளாதார ஓட்டத்திற்கு ஏற்ற முறையில் சர்வதேச அரசியல் மாற்றத்துக்கும் ஏற்ற வகையில் பேரம் பேசக் கூடிய அளவிலே ஒரு வரைபை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த இரண்டு தளத்திலும் இவர்கள் செயற்பாட்டால் தான் வெளிப்படையாக இந்த அழுத்தத்தை அரசாங்கத்திற்கு மேலும் அல்லது இலங்கைக்கு உதவிகளை வழங்கக்கூடிய உதவக்கூடிய நாடுகள் மேலும் செலுத்தக் கூடியதாக இருக்கும்.  அந்த இரண்டு தளமான உரையாடல்கள் தமிழ் அரசியல் தரப்பில் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Tamil News