பொருளியல் நெருக்கடி: இருளும் ஒளியும் | தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

பொருளியல் நெருக்கடிதியாகு

பொருளியல் நெருக்கடி: இருளும் ஒளியும்

பசி பஞ்சத்தால் துரத்தப்பட்டு, உயிரைப் பணயம் வைத்துக் கடல்கடந்து தமிழ்நாட்டில் கரையேறிய ஈழத்தமிழ் ஏதிலியரைப் புழல் சிறையில் அடைத்து வைத்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. இந்திய அரசின் ஆணைப்படியே தமிழக அரசு இப்படிச் செய்துள்ளது எனப்படுவது உண்மையாகவே இருப்பினும் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஈழத்தமிழரை ஆதரித்து, அரவணைத்து, ஆறுதலளிக்க வேண்டிய தமிழ்நாட்டில் அவர்களுக்கு எதிராக அயலார் சட்டம் ஏவப்பட்டிருப்பதாகவும், அதன்படியே புழல் சிறை அவர்களுக்கு முகாம் ஆக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். எண்பதுகள் தொடக்கம் தமிழினவழிப்புப் போருக்கு அஞ்சித் தமிழ்நாட்டில் கரை சேர்ந்த பல்லாயிரம் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழ்நாடு, இப்போது பசிபஞ்சத்துக்கு அஞ்சி வருவோரைச் சிறையில் அடைப்பதென்றால் இது ஈழத்தின் அவலமா? தமிழ்நாட்டின் அவலமா?

ஏதிலியர் (அகதிகள்) தொடர்பான பன்னாட்டுச் சட்டங்களின் படி, அரசியல் ஏதிலியர் போலவே பொருளியல் ஏதிலியரும் உண்டு. அவர்களையும் ஏதிலியராக மதித்து அவர்களின் நலவுரிமைகளைக் காக்க வேண்டும். ஏதிலியர் தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களில் இந்தியா ஒப்பமிடவில்லை என்று சாக்குச் சொல்ல முடியாது. 1948ஆம் ஆண்டின் உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரிமையில் (UDHR) ஒப்பமிட்டுள்ள இந்தியா, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. இந்திய அரசைத் தட்டிக் கேட்டு ஈழத்து ஏதிலியரை உரிய கண்ணியத்துடன் நடத்தத் தமிழக அரசு உடனே முன்வர வேண்டும். ஈழத்தமிழரைத்தான் என்பதில்லை. இலங்கைத் தீவிலிருந்து நாளைக்கே சிங்கள மக்கள் ஏதிலிகளாகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களுக்கும் அடைக்கலம் தருமாறு தமிழ்நாடு கேட்கத் தயங்காது.

இந்தப் பொருளியல் நெருக்கடிக்கு என்ன காரணம்? கோவிட் பெருந்தொற்று ஒரு காரணம். இலங்கைத் தீவின் சுற்றுலா வருமானம் வற்றிப் போனது இன்னொரு காரணம். முறையான திட்டமிடலும் மக்கள் பங்கேற்பும் இல்லாமல் அவசரக் கோலமாய் இயற்கை வேளாண்மை என்ற பெயரில் வேதி உரங்களைத் தடை செய்ததால் உணவு தானிய விளைச்சல் குறைந்து தேயிலை ஏற்றுமதியும் சரிந்து விட்டது. ஆடைகள் ஏற்றுமதியும் சுருங்கி விட்டது. கடன்மேல் கடன், கடனை அடைக்கக் கடன், வட்டிகட்டக் கடன் என்று நாடு கடன் சுழலில் சிக்கிக் கொண்டு விட்டது. புதைச் சேற்றில் சிக்கிய யானை காலை வெளியே எடுக்க முயலும் போதெல்லாம் மேலும் ஆழமாகச் சிக்கிக் கொள்ளும் அதே நிலைதான்!

எல்லாம் உண்மைதான். ஆனால் நெருக்கடியின் முதற்பெரும் காரணம் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்தான் என்பதை சிங்கள மக்கள் இப்போதாவது உணர வேண்டும். போரினால் ஏற்பட்டது உயிர்ச் சேதம் மட்டுமன்று. பற்பல அரசுகளும் போர்த் தளவாடங்களை வாரி வழங்கவில்லை, விலைக்குத்தான் விற்றன. அந்த வகையில்தான் கடன் ஏறிப்போயிற்று. இரண்டு கோடிக்குச் சற்றே மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய தீவு நாடு தனக்குட்பட்ட தேசிய இனச் சிக்கலை குடியாட்சிய (ஜனநாயக) முறையில் தன்தீர்வு (சுயநிர்ணய) உரிமை அடிப்படையில் தீர்த்துக் கொள்ளாமல் இனநாயக முறையில் அணுகி இனத் துடைப்பு செய்ததன் கொடும்பலன்தான்  இப்போதைய நெருக்கடி.

புவிசார் அரசியல் மேல் கண் வைத்து சீனமும், இந்தியாவும் அள்ளிக் கொடுக்கிற ’உதவி’ மூழ்கிக் கொண்டிருக்கிறவனுக்கு ஒரு துரும்பு, அவ்வளவுதான். உலக வங்கியையும் பன்னாட்டுப் பண நிதியத்தையும் (ஐ.எம்.எஃப்) அணுகிக் கடன் வாங்கிக் கடன் அடைக்கிற முயற்சி எதிர்விளைவுகளைத் தோற்றுவித்து நெருக்கடியை மேலும் முற்றச் செய்யவே பயன்படும். பன்னாட்டுப் பண நிதியம் விதிக்கக் கூடிய கட்டுத் திட்டங்கள் மக்கள் மீது மென்மேலும் சுமையேற்றும்.

சிறிலங்கா அரசு பன்னாட்டு உதவியும் பங்கேற்பும் இல்லாமல் இப்போதைய பொருளியல் நெருக்கடியிலிருந்து மீள முடியாது என்பதால், உலக அரங்கில் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். தமிழர் தாயகத்திலிருந்து படைகளை விலக்கிக் கொள்வது, வடக்கு கிழக்கை இணைப்பது, சிறையிலிருக்கும் போர்க் கைதிகளையும், அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்வது, காணாமலாக்கப் பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, போர்க் குற்றம், மானிட விரோதக் குற்றம் உள்ளிட்ட இனவழிப்புக் குற்றம் புரிந்தவர்களைக் கூண்டிலேற்றுவது, ஒரே நாடு ஒரே சட்டம் போன்ற இனவாத முயற்சிகளைக் கைவிடுவது, தமிழர் தாயகத்தில் பௌத்த மயமாக்கத்தை விலக்கிக் கொள்வது… இதையெல்லாம் செய்தால் உலகம் இலங்கையை மதித்து உதவிகள் செய்யும், புலம்பெயர்த் தமிழர்களும் இதை ஆதரிப்பார்கள்.

இந்திய அரசு இலங்கைக்கு உதவட்டும், ஆனால் எவ்விதக் கட்டுத்திட்டமும் இல்லாமல் உதவுவதை ஏற்க முடியாது. தமிழர்களின் கருத்தையறிந்து அதற்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும். சிறிலங்காவின் நிதிசார் கோரிக்கைகளை நிறைவேற்றுமுன் தமிழர்களின் நீதிசார் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும். இந்தியாவிடம் இந்தக் கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் தமிழக அரசு எடுத்துச் சென்று அழுத்தம் தர வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, குடியாட்சிய மறுப்பும், குடும்ப ஆட்சியும் இந்தப் பொருளியல் நெருக்கடியை மேலும் முற்றச் செய்ததோடு, தீர்வுக்கும் தடையாக இருப்பதை உணர வேண்டும். நாட்டின் அதிபரும் பிரதமரும் இனவழிப்புக் குற்றவாளிகள், போர்க் குற்றவாளிகள். நிதியமைச்சர் பசில் ஒரு பெருங் கொள்ளையன். சோறில்லை, ரொட்டி இல்லை, சமையல் எரிவாயு இல்லை, பெட்ரோல் இல்லை, விலைவாசிகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன, வரிசையில் நின்ற முதியவர்கள் சாவு, கத்திக்குத்து போன்ற வன்முறை நிகழ்வுகள்… இத்தனையும் கிடக்கட்டும் என்று நமல் ராசபட்சே அயல்நாட்டில் உல்லாசக் கூத்தடிக்கிறான். ராசபட்சே மகளும் மருமகனும் உலக அளவில் சொத்துக் குவிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை வைத்துக் கொண்டு நெருக்கடிக்கு எப்படித் தீர்வு காண இயலும்?

மார்ச்சு 15 கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சிங்கள மக்கள் நடத்திய ஆவேசமான போரட்டம் எழுப்பிய கோரிக்கை முழக்கம் “கோத்தபயா பதவி விலகு” என்பதே. தமிழ் மக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். சிங்கள மக்களும் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். கோட்டாபய கும்பல் உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்-சிங்கள மக்களின் ஒற்றுமைக்கான தொடக்கப் புள்ளியாக அமைய வேண்டும்.

“தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழர்களின் விடுதலைக்கானது மட்டுமன்று, அதுவே சிங்களர்களின் விடுதலைக்கும் வழிகோலக்கூடியது” என்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தோழர் தங்கத்துரை முழங்கியதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிங்கள மக்களின் வறுமைக்கும் துன்பத்துக்கும் தமிழ் மக்களே காரணம் என்று காட்டும் சிங்களப் பேரினவாத வெறியர்கள், தமிழீழ விடுதலைக்குப் பின்  அந்தக் காரணத்தை இழந்து விடுவார்கள் என்று அவர் விளக்கமும் தந்தார்.

இதோ இப்போதைய பொருளியல் நெருக்கடிக்குத் தமிழர்கள் மீது பழிபோட சிங்கள அரசால் முடியவில்லை. பார்க்கப் போனால் தமிழீழத்தை சிங்களர்களே நியாயப் படுத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழினவழிப்பு குறித்து இப்போதே சிங்கள மக்கள் வருந்தும் அறிகுறிகள் தென்படுவதாகத் தோன்றுகிறது.

பொருளியல் இருளின் முடிவில் அரசியல் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்!

Tamil News