இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக இந்தியா தொடர்ந்தும் ஆதரவினை வழங்கும்-இந்திய தூதரகம்

இந்தியா ஆதரவு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக இந்தியா ஆதரவு

2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார உதவிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியினை தெரிவித்திருந்தார்.

இதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவினை வழங்கும் என்று கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் உறுதியளித்திருந்தார் என்று கொழும்பில் உள்ள இந்திய தாதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கர், பல தரப்புக்களுடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்ததுடன் பிம்ஸ்டெக் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அமைச்சர்   எஸ்.ஜெய்சங்கரின் பயணம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் 2022 மார்ச் 28ஆம் திகதி பல்வேறு தரப்பினருடனும் மேற்கொண்ட சந்திப்புக்களுடன் தனது பயணத்தின் முதலாவது நாளினை நிறைவு செய்துள்ளார். இதேவேளை இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடு ஆகியவற்றுக்காக புதுடில்லியில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சின் ஐவரடங்கிய பேராளர்களும் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுடன்  குத்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிரத்தியேகமான வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார உதவிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியினை தெரிவித்திருந்தார். இதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவினை வழங்கும் என்று கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் உறுதியளித்திருந்தார். இச்சந்திப்பின்போது அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்றிருந்த பேச்சுக்கள், பாதுகாப்பு மற்றும் சக்தித்துறைசார் ஒத்துழைப்பு, மற்றும் மீனவர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்திய முதலீடுகள் மீதான விசேட அக்கறையுடன் பொருளாதார மற்றும் வர்த்தகரீதியான தொடர்புகளை மேலும் வலுவாக்குவதற்கு இச்சந்தர்ப்பத்தில் இணக்கம் காணப்பட்டது.

யாழ்ப்பாணக் கலாசார நிலையத்தினை மெய்நிகர் மார்க்கமாக திறந்து வைப்பதற்காக அலரிமாளிகையில் நடைபெற்றிருந்த விசேட நிகழ்வொன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் இணைந்திருந்தார். இந்திய மற்றும் இலங்கை மக்களுக்காகவும் அவர்களின் நிலைபேறான நட்புறவுக்காகவும் பிரார்த்தித்து அர்ப்பணிக்கும் வகையிலான பரதநாட்டிய ஆற்றுகை ஒன்று யாழ்ப்பாணக் கலாசார நிலையத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அந்நிகழ்வுகளையும் அவர்கள் பார்வையிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வரும் செயற்கைக் கால் பொருத்தும் முகாமினை மெய்நிகர் மார்க்கமாக அவர்கள் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் நன்கொடை உதவித் திட்டம் ஒன்றை அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணக் கலாசார நிலைய நிர்மாணம் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒன்பதாவது சரத்திற்கான திருத்தம் குறித்த ஆவணங்களும் இருதரப்பினர் இடையிலும் பரிமாறப்பட்டிருந்தது.

இதேவேளை 28ஆம் திகதி காலை நிதி அமைச்சர்  பசில் ராஜபக்ஷ அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் சந்தித்ததுடன், கோவிட்-19 பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பங்களிலும் இரு அயல் நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட ஆழமான பொருளாதார ஈடுபாடுகளின் முக்கியத்துவத்தினை தற்போதுவரை மிகவும் வலுவாக உணரமுடிகின்றதென அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அவர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தார். இலங்கையுடனான இந்தியாவின் பங்குடைமையானது அயலுறவுக்கு முதலிடம் மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் வலுவடைந்து காணப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் இந்தியா இலங்கையுடன் துணை நிற்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் அன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார். இருதரப்பு ஈடுபாடுகளின் சகல கோணங்கள்மீதும் இச்சந்திப்பின்போது அவர்களால் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்துடன் இருதரப்பு உறவின் பரந்தளவிலான போக்கிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பல்வேறு துறைகள்சார்ந்த இருதரப்பு உடன்படிக்கைகள் அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமையை (SL-UDI)  அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.

1.கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை:

யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்துவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை;

இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை;

காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் பிரத்தியேகமான கல்வி மென்பொருளுடனான ஸ்மார்ட் அட்டைகள் மற்றும் நவீன கணனி ஆய்வு கூடங்களை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா ஸ்வராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

இதேவேளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பிரத்தியேகமாக சந்தித்திருந்தார். மீனவர்களுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்விஜயத்தின் போது HCL தொழில்நுட்ப நிறுவனம், LIOC எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். HCL தொழில்நுட்ப நிறுவனம் உள்ளூரில் 1800க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இரு தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த கம்பனியாக ஸ்தாபிக்கப்பட்ட காலம்முதல் LIOC நிறுவனம் இருநாடுகளுக்கும் இடையிலான சத்தித்துறைசார் ஒத்துழைப்பில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியா இலங்கை அபிவிருத்தி பங்குடைமையின் மிளிரும் உதாரணமாக யாழ்ப்பாணக் கலாசார நிலையம் அமைகின்றது. வடமாகாண மக்களின் கலாசார உட்கட்டமைப்பினை விஸ்தரிப்பதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நல்லிணக்க திட்டமே இதுவாகும். இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இக்கலாசார நிலையம்,  இரு தள நூதனசாலை, 600க்கும் அதிகமானோர் அமரக்கூடிய வசதிகளுடனான நவீன கேட்போர் கூடம், 11 தளங்களைக் கொண்ட கற்றல் பிரிவு,  திறந்தவெளி அரங்காக பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான சதுக்கம் போன்றவசதிகளையும் கொண்டுள்ளது.

2022 மார்ச் 29ஆம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது