தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் – பா.அரியநேத்திரன்

124 Views

கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள்
பா.அரியநேத்திரன்

கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்: மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்.

கேள்வி:
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளாக நீங்கள் எதனைப் பார்க்கின்றீர்கள்?

பதில்:
பிரதான பிரச்சினையாக மக்களின் காணி அபகரிப்பு மற்றும் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை. அதைவிட வேலை வாய்ப்பு, பொருளாதாரப் பிரச்சினைகள், தற்போது விவசாயிகளுக்கு உரங்கள் இல்லாத பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் கிழக்கு மாகாணத்தில் தோன்றியிருக்கின்றன.

கேள்வி:
காணி அபகரிப்புப் பிரச்சினை தற்போது எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது?

பதில்:
இராணுவ முகாம்களாக இருந்து காணிகள் அபகரிக்கப்பட்ட நிலை ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும்கூட, தற்போது புதிய ஆளுநர் வந்ததன் பிற்பாடு மேய்ச்சல் தரைகள் இருக்கும் கிரான், மாதவனை, கெவுளியாமடு, வவுணதீவு போன்ற இடங்களிலே மேய்ச்சல் தரைகளாக இனங்காணப்பட்ட இடங்கள் தற்போது பெரும்பான்மையினத்தவர்கள் பயிர் செய்வதற்காகவும், சேனைப்பயிர்ச்செய்கை, தோட்டச் செய்கை என்ற பெயரில் அதிகமாக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறான காணி அபகரிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகளும், சிங்கள மக்களின் அத்துமீறிய குடியேற்றங்களும் போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக காணி விடயத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.  இராணுவமயப்படுத்தப்பட்ட காணிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டிருக்கின்றது. ஓரிரு இடங்கள் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டிய இடங்களாக இருக்கின்றன.

கேள்வி:
கடந்த சில வருடங்களாக கிழக்கு மாகாணசபை செயலிழந்த நிலையில் இருக்கின்றது. அதன் காலம் காலாவதியாகி புதிதாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் ஆளுநரின் செயற்பாடுகள் தான் அங்கு கூடுதலாக செயற்பட்டு வருகின்றது. புதிதாக ஒரு சிங்களப் பெண்மணி ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன.  குறிப்பாக குடியேற்றம், காணி விவகாரம், சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை அவர் எவ்வாறு கையாள்கின்றார் என்று குறிப்பிட முடியுமா?

பதில்:
கிழக்கு மாகாண மக்களுக்குரிய பல வேலைத்திட்டங்கள் இருந்த போதும், அவர் அந்த வரையறையை விட்டு, பெரும்பான்மையின மக்களை திட்டமிட்டு குடியேற்றம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியாகத்தான் இங்கு பலரும் பார்க்கின்றார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறாகத்தான் பார்க்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம். அல்லது வேறு பலர் அதை எதிர்த்தாலும்கூட அவரின் செயற்பாட்டை விட்டு விலகுவதாக இல்லை.

இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த  கலாமதி அவர்கள் மேய்ச்சல் தரை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றிற்கு இணங்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேய்ச்சல்தரை அபகரிப்பை மேற்கொண்ட விவசாயிகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியிருந்தார். அவரின் இந்த செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் கண்டித்தது மாத்திரமல்ல, மூன்று நாட்களுக்குள் அவரை வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்து, புதிய அரச அதிபர் வருவதற்கும் துணையாக இருந்தார்.

கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள்தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திற்குட்பட்ட மாநகர சபை முதல்வருக்கு எதிராக அங்கு இருக்கும் ஆணையாளரை இயக்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகளுக்கும் இந்த ஆளுநர் தான் காரணம் எனப் பரவலாகப் பார்க்கப்படுகின்றது. அவரின் நோக்கம் என்னவெனில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய தமிழர்களின் விகிதாசாரத்தைக் குறைத்து, எதிர்வரும் காலங்களில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முன்னேற்பாடாக திட்டமிட்டுச் செய்வதாகத் தான் இங்கு கருதப்படுகின்றது.

கேள்வி:
இதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது?

பதில்:
சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியுள்ளது. காணி அபகரிப்பு தொடர்பாக ஆளுநருடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். சரிவரவில்லை. அதிகாரிகளுடன் பேசி சரிவரவில்லை. இதற்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியிருந்தோம். அந்தப் போராட்டங்களிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அத்துமீறிய மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கியுள்ளோம். இது தொடர்பாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகி விட்டது. கோவிட் தொற்று காரணமாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

கேள்வி:
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரைப் பிரச்சினை கடந்த வருடங்களில் பிரதான ஒரு பிரச்சினையாகக் காணப்பட்டது. அது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றீர்கள். இதில் பொது மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகள் பற்றி கூறமுடியுமா?

பதில்:
மட்டக்களப்பை எடுத்துக் கொண்டால் பசுமாடுகள், எருமைகள் உட்பட மூன்றரை இலட்சம் கால்நடைகள் இருக்கின்றன. இதன் மூலம் பல குடும்பங்கள் தங்கள் குடும்பங்களை பராமரித்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது மானாவாரி நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சல்தரையில் விட்டுத் தான் பராமரிக்கும் நடைமுறை கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது. தற்போது அந்த மேய்ச்சல் தரையிலிருந்து கால்நடைகளை அப்புறப்படுத்துகின்ற போது அதனால் பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சல்தரை இல்லாதுள்ளது. அதே நேரம் விவசாயச் செய்கையும் கால்நடைகளால் பாதிக்கப்படும் ஒரு நிலையும் உள்ளது.

கேள்வி:
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான வாக்கு வங்கி குறைவடைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலிலும் அவதானிக்கப்பட்டது. அம்பாறையில் ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியவில்லை. இதற்கான காரணம் என்ன?

பதில்:
மட்டக்களப்பில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும், எல்லா இடங்களிலும் குறைந்திருந்தது. இதற்கு முதலாவது காரணம் நல்லாட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. ஒரு அரசியல் தீர்வு கொண்டுவர வேண்டும் என்பதற்காக சில விட்டுக் கொடுப்புகளை செய்து, அரசாங்கத்துடன் சேர்ந்து ஒரு அரசியல் தீர்வின் மூலமாக தமிழர்களின் புரையோடிப் போயிருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு அதீத நம்பிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்தது. இதனால் நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

இதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். பல அபிவிருத்தித் திட்டங்களை பேரம்பேசி பெறக்கூடிய நிலை இருந்தும்கூட அதைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் இருந்தது. இந்தப் பிரச்சாரம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்திருந்தாலும்கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது வடமாகாணத்திலும் இருந்தது. பல விடயங்களை மேற்கொள்ளவில்லை என்பதற்காக எங்களுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்தது என்பது உண்மை.

கேள்வி:
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு தமிழ்க் கட்சிகள் களம் இறங்குவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவிற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால், அதனை எதிர்கொள்வதற்கு ஏனைய கட்சிகளுடன் உடன்பாடு ஒன்றுக்கு செல்வதற்கான திட்டங்கள் ஏதாவது கூட்டமைப்பிடம் உள்ளதா? அதற்கான புரிந்துணர்வு இருக்கின்றதா?

பதில்:
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிதான் போதுமான வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்துள்ள கட்சியாக இருக்கின்றது. மாகாண சபைத் தேர்தலில் கூட்டணி சேர்வதாக இருந்தால், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பான கட்சிகளுடன் கூட்டணி சேர்வது எற்றுக்கொள்ளக்கூடிய விடயமாக இருக்கும். ஏனெனில் கொள்கை ரீதியாக வடகிழக்கு இணைந்த தாயகத்தில் உரிமையைப் பெறவேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாக இருக்கின்றது. பிரதேசவாத அரசியல் பேசும் கட்சிகளுடன் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டுச் சேர்ந்து அரசியலுக்கு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இங்கு இருக்கும் இஸ்லாமியக் கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம் எனக் கருதுவோமாக இருந்தால், அது பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு இருக்கும் இஸ்லாமியர்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு எதிரான பல விடயங்களைச் செய்கின்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இஸ்லாமிய சமூகத்துடன், இஸ்லாமியக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலுக்குச் செல்கின்ற போது, அது இன்னுமொரு வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.

ஆகவே தமிழ்த் தேசியம் தொடர்பாக சிந்திக்கின்றவர்கள் யாராவது பேசுவதற்குத் தயாராக இருந்தால், நிச்சயமாக இணைந்து செல்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். தேர்தல் வரும் போது இறுதி முடிவை எடுக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

Leave a Reply