மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான்

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்

மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதி மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆதிவாசி மக்களாக நீண்டகாலம் குடியிருக்கும் இந்த மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் துயரமான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.

கரடியன்குளமானது செங்கலடி-பதுளை பிரதான வீதியில் கரடியனாறு விவசாயப் பண்ணையூடாகச் செல்லும் வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. குசனார்மலை அடிவாரத்தில் உள்ள இக்கிராமமானது, நீண்ட பழைமையான கிராமமாக காணப்படுகின்றது.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்

ஆயுதப் போராட்டக் காலத்தில் பல தியாகங்களை இந்தக் கிராமம் செய்துள்ளது. இங்கிருந்து பல இளைஞர்கள் மாவீரர்களாகியுள்ளனர். போராட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தியாகங்களைச் செய்த கிராமமாகவும் இந்தக் கிராமம் உள்ளது. யுத்தகாலத்தில் பல்வேறு அழிவுகளைச் சந்தித்து, மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்தக் கிராமத்தில் நூறுவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

இந்தக் கிராமத்தினைச் சூழ வயல் நிலங்களும், காடுகளும், மலைகளும் காணப்படுகின்றன. வயல்களில் கூலித்தொழில் செய்யும் இவர்கள், வயல் வேலைகள் இல்லாத காலப்பகுதியில் காடுகளையும், ஆற்றினையும் நம்பியே தமது வாழ்க்கையினை ஓட்டிவருகின்றனர்.

இப்பகுதியில் சுமார் 250இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரொயொரு ஆரம்பப் பிரிவுப் பாடசாலையே உள்ளது. இதில் சுமார் 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இரண்டு வகுப்பறைகள் காணப்படுகின்றன. அவற்றிலேயே குறித்த மாணவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர். அதிலும் ஐந்தாம் தரம் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. அதன் பின்னர் கல்வி கற்கவேண்டுமானால், சுமார் 15கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பாடசாலைகளுக்கே செல்லவேண்டிய நிலையுள்ளது.

குறைந்தது 09ஆம் ஆண்டு வரையாவது பாடசாலையொன்றை அமைத்துத் தருமாறு நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், பாடசாலை அமைப்பதற்கான காணிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரையில் பாடசாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் ஐந்தாம் தரம் கற்று வெளியேறும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் ஆறாம் தரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி விடவும், சிறு வயதிலேயே தொழில்களுக்குச் செல்லும் நிலையும் காணப்படுவதுடன், சிறுவர் திருமணங்களும் இப்பகுதியில் அதிகளவில் நடைபெறுவதாக பிரதேசத்தில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரின் மாமாங்கம் பகுதியிலிருந்து தினமும் தான் குறித்த பாடசாலைக்கு வருகைதந்து பாடம் நடாத்துவதாகவும், குறித்த பகுதி மாணவர்கள் போசாக்குக் குறைந்த மாணவர்களாக உள்ளதாகவும் அந்த ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.

ஐந்தாம் தரம் வரையில் உள்ள குறித்த பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களும், அதிபர் ஒருவரும்  கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். சில மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கவருகின்ற போதிலும், சில மாணவர்கள் குடும்ப நிலைமை காரணமாக பாடசாலைக்கு வருவதில்லையெனவும், அவ்வாறான மாணவர்களை வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் அழைத்துவந்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐந்தாம் தரத்தினைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள், நீண்டதூரம் வயல்வெளி ஊடாகவும், காடுகள் ஊடாகவும் பாடசாலைகளுக்குச் சென்றுவருவது ஆபத்தானதாக பெற்றோர் கருதுவதாலும், ஐந்தாம் தரத்துடன் ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் விளங்கியவர். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.மாணவர்களின் கல்வியை முடித்துக்கொள்வது இப்பகுதியில் பெரும் பிரச்சினையாக காணப்படுவ தாகவும், குறித்த பகுதியில் குறைந்தது 10ஆம் தரமாவது கல்வியைப் பெறக்கூடிய வசதிகள் இருக்குமானால், ஓரளவு மாணவர்கள் கல்வியைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்றும் கிராமத்தினைச் சூழ வயல்வெளியும், காடுகளும் உள்ளபோதிலும் இங்குள்ள மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே தொடர்ந்து இருந்துவருவதாக இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு முன்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கிணறு ஒன்று கட்டி வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தக் கிணற்றில் கோடை காலத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், நிறம் மாறிய தண்ணீரே குறித்த கிணற்றில் காணப்படுவதனால், குளிப்பதற்குக்கூட குறித்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலையில் காட்டுப்பகுதியில் உள்ள குளத்திற்கு இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் சென்று குடிநீரைப்பெற்றுக் கொள்ளவேண்டிய நிலையிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையிடம் தெரிவித்தால், சில நேரங்களில் மட்டும் குடிநீர் வழங்குவதாகவும் பிரதேசசபை வாகனங்கள் வந்துசெல்வதற்கான வீதி சீரின்மை காரணமாக குறித்த பகுதிகக்கு வருவதற்கு தயங்கும் நிலையும் காணப்படுகின்றது. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய பிரதேசசபை இவ்வாறு செயற்படுவது உண்மையில் கவலைக்குரியது. ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளதால், அனைத்துப் பிரதேசங்களுக்குமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் ஆளணிப் பிரச்சினைகள் காணப்படுவதாகப் பிரதேசசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள் இந்த கரடியன்குளம் மக்கள், இன்று தமது வயற்றுச் சோற்றுக்காகவும், குடிநீருக்காகவும், வீதிக்காகவும் போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளதாக இப்பகுதியில் நீண்டகாலமாகச் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் திருமதி றொமிலா செங்கமலன் தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள மக்களை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ முறையாகக் கவனிக்காத காரணத்தினால், இந்த மக்களின் நிலை மிக மோசமானதாக வுள்ளதாகவும் அவர் கவலை தெரிவிக்கின்றார். இன்று தமிழர்களின் போராட்டம் பற்றியும், வீரம் பற்றியும் பேசுவோர் அதற்காக ஆகுதியாக்கியவர்களின் தியாகத்தினைச் செய்த குடும்பங்கள் பற்றிக் கதைப்பதில்லையெனவும் தெரிவித்தார்.

கரடியனாறு விவசாயப் பண்ணையிலிருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் இக்கிராமத்தின் வீதியின் நிலைமை என்பது மிகவும் மோசமாகவே இருக்கின்றது.  மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இரவில் பயணிக்கமுடியாத நிலையே உள்ளது. குறித்த கிராமத்தில் வைத்திய சாலை இல்லை, போக்குவரத்து வசதிகள் இல்லை. அவ்வாறானால் இந்த மக்களின் நிலைமையென்ன என்பதைச் சிந்திப்பவர்கள் உணர்வார்கள்.

இங்குள்ள பெருமளவான குடும்பங்கள் இளம் வயது திருமணங்களைச் செய்த நிலையில் உள்ளனர். கணவர்மார் கூலித்தொழில் செய்வதற்காக செல்லும்போது, பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும், குறைந்த கூலிக்கு அவர்களைப் பயன்படுத்துவதுடன், பெரும்பாலான காலத்தில் தொழிலற்ற நிலையே காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் தமது கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்ற போதிலும், தேர்தலின் பின்னர் தமது பகுதியை எட்டிக்கூட பார்ப்பதில்லையெனவும், தமது பகுதியை தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் புறக்கணித்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பெருமளவான வளங்கள் கொட்டிக் கிடக்கும் நிலையில், இப்பிரதேச மக்கள் இன்றும் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குச் செல்வதே மிகவும் கவலைக்குரிய விடயமாகவுள்ளது. இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி, முறையான உற்பத்திகள், பண்ணைகள் அமைக்கும் போது, இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அதற்கான முதலீடுகளைச் செய்வோர் அதிக இலாபமீட்டக் கூடிய நிலையும் உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள வறுமை நிலைமையினை போக்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இதனைப் புலம்பெயர்ந்துள்ள மக்கள் ஒரு தடவை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதேபோன்று தமிழ்த் தேசியபட பரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துள்ள அபிவிருத்தி அரசியல்வாதிகளும் இந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான பாடசாலை, வீதி, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போது, இப்பிரதேசம் எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களுக்கு இணையாக வளர்ச்சியடையும் நிலையேற்படும். இதனை உணர்ந்து செயற்பாடுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! - மட்டு.நகரான்