இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? – அகிலன்

இலங்கை அரசின் தவறு


இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன?

இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்வதென்ற தனது முடிவு இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச எதிர்பார்த்திருக்க மாட்டார். இது இலங்கை அரசின் தவறு. வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் விவசாயிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டங்கள் அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடமான நிலையைக் கொடுத்திருக்கின்றது. அடிமட்ட மக்கள் மத்தியில் அரசின் மீதான ஆதரவு பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

அரசாங்கத் தரப்பினரே இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால், அரசாங்கம் தோல்வியடையும் என இராஜாங்க அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கின்றார். ஆனால், இதனைத் தெரிந்து கொண்டுதான் அரசாங்கம், நாட்டின் எதிர்கால நலன்கருதி செய்திருக்கின்றது என்பது அவரது கருத்து. அதாவது, இது ஒரு கசப்பான மருந்து என்பதுதான் அவரது கருத்து.

இராஜாங்க அமைச்சர் கூறியிருப்பது போல, இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பாவனையைத் தடை செய்வதும், இயற்கை விவசாயத்துக்குச் செல்வதும் வரவேற்கத்தக்க முடிவுதான். அது அவசியமானதும் கூட. விவசாய நிலத்தில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதை தெற்காசிய நாடான பூட்டான் ஏற்கனவே தடை செய்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் சீனாவும் சேதன (இயற்கை) விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுகின்றன.

இலங்கையில் நெல் மற்றும் காய்கறிப் பயிர்ச்செய்கைக்கு விவசாயிகள் இரசாயன உரங்களை அதிகளவில் நம்பியிருப்பதால், இவ்வாறான நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களை உடனடியாகப் பாதித்திருக்கிறது. அவர்கள் பூச்சிக்கொல்லிகள், களைநாசினிகள் மற்றும் இரசாயன உரங்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். இது நச்சுச் சுழற்சியாக மாறி, குறிப்பிட்ட காலத்திற்குள்  மண்ணுக்குள் உள்ள ஊட்டச்சத்துக்களை அழிக்கும் என்பதும் உண்மை.

இலங்கையில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலத்தின் பரப்பளவு சுமார் 708 ஹெக்டேயர்கள் ஆகும். நெற்பயிர்ச் செய்கையின்போது இரசாயன உரத்தின் விளைவாக வளரும் நெல்லின் அளவு 66.8 வீதமாகும். 32.9 வீதமானோர் இரசாயன மற்றும் சேதன உரத்தை பயன்படுத்துகின்றனர். 0.02 வீதமானோர் மட்டுமே சேதனப் பசளையைப் பயன்படுத்துகின்றனர். நெற்பயிர்ச் செய்கையின்போது 74 சதவீதம் பூச்சிக்கொல்லிகளும் 84 வீதமான களைநாசினிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கைகளால் களைகளை அகற்றுவதற்கான பாரம்பரிய முறைகளை 12 வீதமானோர் மட்டுமே பின்பற்றுகின்றனர்.

இந்த இரசாயனப் பயன்பாட்டால் எமது உணவு விநியோகத்தில் ஏற்படும் தீங்கின் அளவை கணிக்க முடியும். எனினும், இரசாயன உரத் தடை காரணமாக, உடனடியாகத் தீர்வுகாண முடியாத பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. இரசாயன உரத்தின் பயன்பாடின்றி வளரும் பழங்களும், காய்கறிகளும் போதிய வேகத்துடன் வளராமல் இருக்கலாம். ஆகையால், விநியோக நடவடிக்கை 50 வீதத்தால் குறையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால், எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்யும் நிலை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அதேவேளையில், இலங்கை இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தினால், சுமார் 221 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார். ஆக, பெருமளவுக்கு அந்தியச் செலாவணியை மீதப்படுத்தவும், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்கும் உதவக்கூடிய ஒரு திட்டம்தான் இந்த இரசாயன உரங்களின் இறக்குமதிக்கான தடை. இதன் மூலமாக நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிதிப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதையும் அரசாங்கம் கணக்குப் பார்த்திருக்கும்.

ஆனால், மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், அதனை அரசாங்கம் சடுதியாக நடைமுறைப்படுத்தியமைதான் இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடிகளுக்குக் காரணம். அடுத்த போகத்துக்குத் தயாரான விவசாயிகளை இது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இரசாயன உரமும் இல்லாமல், இயற்கை உரமும் இல்லாமல் அவர்கள் தலையில் கைகளை வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

வறட்சி, வெள்ளம், பயிர் தொற்றுநோய்கள் மற்றும் காட்டு யானைப் பிரச்சினை என இலங்கை அரசின் தவறுஇலங்கையில் விவசாயிகள் மதிப்பிட முடியாத அளவு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கான காப்பீடு, இழப்பீடு அல்லது ஓய்வூதியத் திட்டத்தை வழங்கும் சரியான பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை. இவ்வாறான நிலையில் இந்தத் திடீர்ப் பிரச்சினை அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி யுள்ளது.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதாகக்கூறி, இயற்கை உரத்தை இறக்குமதி செய்கின்றோம் என்ற பெயரில் சீனாவிலிருந்து கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முற்பட்டமையும் புதிய பிரச்சினை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. சீனாவிலிருந்து இவ்வாறு இயற்கை உரத்துடன் வந்த கப்பல் துறைமுகத்துக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டது. குறிப்பிட்ட’இயற்கை’ உரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக்கள் காணப்பட்டதாக முதற் கட்ட பரிசோதனை உறுதி செய்தது. இதனையடுத்தே இந்தக் கப்பலை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.

20,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையுடன் குறித்த கப்பல் கடந்த 22 ஆம் திகதி கொழும்புக் கடற் பகுதியை வந்தடைந்தது. கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் காணப்படுவதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் தெரிவித்திருந்தது. சீன நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பசளைகளின் மாதிரிகளில் பக்ரீரியா காணப்படுகின்றமை இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே கப்பலைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த முடிவு நிச்சயமாக ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கலாம். மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டது. மறுபுறம் கப்பல் திரும்பிச் செல்லாமல் கொழும்பையடுத்துள்ள பகுதிகளிலேயே நடமாடுவதாக கப்பல் நிறுவனங்கள் சில தெரிவித்திருந்தன. இவ்விடயத்தை எதிரணியினரும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதால், நிதானமாகச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசின் தவறு

இலங்கைக்கு உரத்தை ஏற்றி வந்த குறிப்பிட்ட சீனக் கப்பலான ‘Hippo Spirit’ இலங்கை கடலுக்குள் நுழைவதற்காக அதன் பெயரை Seiyo Explorer என மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஏவ்வாறானாலும் இலங்கைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் கப்பல் நிறுவனமும், பசளையை அனுப்பி வைத்தவர்களும் அக்கறையாக இருப்பதையே இது வெளிப்படுத்தியது.

இயற்கைப் பசளையை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அது ஓரளவுக்காவது வெற்றியளித்துள்ளது என்பதை விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்திய பின்னர், இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்வது என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். அவ்வாறாயின் இது வெற்றி பெற்றிருக்கும். பெருமளவுக்கு விவசாயத்தை நம்பியுள்ள நாட்டில் இவ்வாறு இராணுவப் பாணியில் எடுக்கப்படும் அதிரடியான முடிவுகள் எதிர்பாராத முடிவுகளையே கொண்டுவருவதாக இருக்கும்.

இயற்கை உரம் என்பது பெருமளவுக்கு மிருகங்களின் கழிவுகள், மற்றும் தாவரங்களின் கழிவுகளிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. மிருகங்களின் கழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் போது, அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக்கள் கலந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். இந்திய அமைதிப்படை வடக்கு, கிழக்கில் இருந்த காலத்தில்தான் பயிர்ச்செய்கையைப் பெருமளவுக்குப் பாதிக்கும் பார்த்தீனியம் பரவியது. இந்தியப் படையினர் தமது உணவுக்காகக் கொண்டுவந்திருந்த ஆடுகளின் கழிவுகள் (புளுக்கை) மூலமாகவே அது பரவியது. இயற்கைப் பசளையை இறக்குமதி செய்வதில் இருக்கக்கூடிய ஆபத்துக்கு இது ஒரு உதாரணம்.

இவை எதையும் அவசர அவசரமாக செய்ய முடியாது. அத்தோடு, ஒரு கட்டமைப்பையும், வாழ்க்கை முறையையும் மாற்றுவது கடினம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேலையைச் செய்து முடிப்பதை விட ஒரே இரவில் வர்த்தமானியை வெளியிடுவது இலகுவானது.

அரசாங்கம் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமல் முக்கியமான முடிவுகளை எடுப்பதுதான் தற்போது உருவாகும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் காரணமாகவுள்ளது. இந்த அணுகுமுறையை அரசாங்கம் மாற்றிக்கொள்ளாத வரையில் இதுபோன்ற நெருக்கடிகள் தொடர்வதைத் தவிர்க்க முடியாது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? - அகிலன்