அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம்- மருத்துவர் சரவணபவன்

அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம்

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதை கவனத்தில் கொள்வதோடு, பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற கோவிட் பரவல் மற்றும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்களிற்கான மூன்றாம்கட்ட மாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியாக சைனாபோம் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இரண்டாவது தடுப்பூசியை 70 வீதமானவர்கள் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை 20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். எனவே எதிர்வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான பைசர் தடுப்பூசி வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான 3ம் கட்ட தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

எதிர்காலம் எப்படியாக அமையும் என்று உறுதியாக கூற முடியாது. தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட நாடுகளில் மீண்டும் நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இந்த இடைவெளியை பாவித்து அனைவரும் முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ்வூசியை போடாதவர்கள் போட்டுக்கொள்ளவும்.

பாடசாலை மாணவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 வீதமான மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள்.

தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பாடசாலை மாணவர்களாவர். இவ்விடயம் மிக முக்கிய கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாக அமைகின்றது. அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம்- மருத்துவர் சரவணபவன்