கல்வித்துறையினரின் போராட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்- மாவை

177 Views

Mavai கல்வித்துறையினரின் போராட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்- மாவை

கல்வித் துறையினரின் போராட்டங்கள் தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வை காண வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

“இலங்கை ஆசிரியர் சங்கமும் தொடர்புடைய ஏனைய தொழிற் சங்கங்களும் ஆசிரிய சமூகத்தின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், அத்துடன் கொத்தலாவலை பல்கலைக்கழகம், “கொத்தலாவலை (பாதுகாப்பு) பல்கலைக் கழகம்” எனும் பெயர் மாற்றத்துடன் ஒரு சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்” எனப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இச் சட்டமூலம் நிறைவேற்றப் படுவதன் மூலம் பல்கலை மாணவ சமூகத்தையும் இராணுவ மயமாக்க அரசு முயற்சிக்கின்றதா என்கிற கேள்வி எழுகின்றது.

கடந்த இருபத்து ஐந்து நாட்களாக நடைபெறும் போராட்டங்களையும் இக் கோரிக்கை களையும் ஆதரித்து பல்கலை மாணவர் சமூகமும் பொது அமைப்புக்களும் அரசியல் அமைப்புக்களும் போராட்டங்களை நடத்துவதை அரசாங்கம் ஒரு தீர்வுக்கு கொண்டு வராமல் அமைச்சர்களும் அமைச்சரவையும் கூட தொடர்ந்தும் பொறுப்பற்ற வகையில் இழுத்தடிப்பதை நாம் கண்டிக்கிறோம்.

இத்தகைய பிரச்சனைகளுக்குப் பொருத்தமான ஒரு தீர்வை தீர்மானிக்க அரசு தவறுவதால் கல்வித்துறையும் சீரழிந்து விடப்போகின்றது.

ஆசிரிய சமூகம் எதிர்கால சந்ததியை, மாணவர்களை பலதுறைகளிலும் உயர் தரத்திற்கும் நாட்டிலும் உலகிலும் அறிவியல் சமூகமாக நாட்டை நிர்வகிக்கும் தலைமைச் சமூகமாக கட்டியெழுப்புவதில் கல்வித்துறைக் குருத்துவத் தலைமைத்துவம் கொண்டிருப்பதை அரசு பொருட்படுத்தவில்லை.

அதுவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நெருக்கடி நிலையில் ஆசிரியர் சமூகமும் பொது அமைப்புக்களும் பல்கலை மாணவர்களும் தெருவெல்லாம் நிறைந்து போராட்டங்களை நடத்தி வருவது அரசின் மீதும் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கையற்ற ஒரு நெருக்கடி நிலையையே தோற்றுவித்துள்ளது. அரசின் மீது நம்பிக்கையிழந்த நிலையையே தோற்றுவித்துள்ளது.

“ஆசிரிய சமூகத்தின் சம்பளப் பிரச்சினைக்கு அரசு உடன் தீர்வு காண வேண்டும். இன்று இது ஒரு உடனடிப் பிரச்சனையாகி விட்டது. கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலப் பிரேரணையை கைவிட வேண்டும்” என்பதை நாமும் வற்புறுத்தி நிற்கின்றோம். அல்லது ஆசிரிய சமூகப் பிரதிநிதிகளுடன் நேர்மையுடன் இணக்கத்துடன் நம்பிக்கை வாய்ந்த ஒரு தீர்மானத்தை அரசு எட்டியாக வேண்டும். போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமெனவும் வற்புறுத்துகின்றோம்.

ஆசிரிய சமூகம், மாணவ சமூகம் மட்டுமல்ல அரசியல் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட்டு. இன்றைய அரசை, ஆசிரிய சமூகத்தினதும் பல்கலை மாணவர் சமூகத்தினதும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்த வேண்டும். அத்துடன் பொருத்தமான ஜனநாயக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாமும் வற்புறுத்துகிறோம்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply