“மக்களை சந்தித்த சந்தர்ப்பங்களில் அவர்கள் சர்வதேச விசாரணைகளை கோரியிருக்கிறார்கள். ஆனால், இதனை உள்ளூர் பொறிமுறையினூடாக விரைவான சிறந்த தீர்வுகளை வழங்கக் கூடிய வகையில் அணுகலாமா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம்” என்று காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் குழு உறுப்பினர் யோகராஜா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
‘‘மனிதப் புதைகுழிகள் தொடர்பில் பணியாற்றும் போது, காணாமல் போனவர்களுக்கும் மனிதப் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளுக்கும் அல்லது மனித எச்சங்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தடயவியல் மற்றும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்பட்டு வருகிறோம்”.
“ஒவ்வொரு மனிதப் புதைகுழியின் விடயப்பரப்புகளும் தனித்துவமானவை. கொக்குத்தொடுவாய், குருக்கள்மடம் அல்லது மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறிப்பாக செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு இடையில் ஒன்றோடு ஒன்று பல்வேறு சம்பவத் தொடர்புகளை கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது”.
“ஒவ்வொரு மனிதப் புதைகுழியும் அதனுடைய வரலாறு அல்லது ஆயுட்காலம் அதாவது, எப்போது குறித்த மனிதப் புதைகுழி அந்த இடத்தில் தோற்றம் பெற்றது என்பதிலிருந்து அந்த மனிதப் புதைகுழியில் காணப்படுகின்ற மனித எச்சங்கள் தொடர்பாக தடயவியல், தொல்லியல் சம்பந்தமான விபரங்கள், சமூகவியல் மானிடவியல் சிந்தனைகள் போன்ற பல்வேறு அறிக்கைகள் பெறப்பட்டே நீதிமன்றத்தில் தீர்மானங்களுக்கு இடமளிக்கப்படுகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக நீதிமன்றங்கள் அநேகமாக பல்துறை புலமை கொண்டவர்களுடன் கலந்துரையாடல் முறைமையை ஏற்படுத்தி, மக்களின் இணைத் தொடர்புகளுடன் கூடிய முறைகளை பின்பற்றுவதை அவதானிக்க முடிகிறது.
நீதிமன்ற நடைமுறைமைகளின் மூலமே, இந்த விடயப்பரப்புகளை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி வருகிறோம் என்றும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் குழு உறுப்பினர் யோகராஜா தெரிவித்துள்ளார்.
இதில் புலமை சார்ந்தவர்கள் உள்ளூரில் இருக்கும் போதும் அவர்களின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்கிறோம் என்றும் மேலதிக பயிற்சிகள், விடயப்பரப்புகள் தேவைப்படும்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளிடமிருந்து அந்த உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுபிள்ளைகளின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்படும்போது அவர்களுடைய உத்தேச வயதை எவ்வாறு கண்டுபிடிப்பது, இலகுவில் பாதிப்புறக்கூடிய எலும்புக்கூடுகள் என்ற காரணத்தில் இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டு எவ்வளவு காலமாகிறது போன்ற விடயப்பரப்புகளுக்கு பல்வேறு பயிற்சிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு குருக்கள்மடம் சிறந்த உதாரணம் என்றும் இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளமையினால் சிலவேளை அங்கு கண்டுபிடிக்கப்படுகின்ற மனித எச்சங்கள் தொடர்பில் ஓரளவு முடிவை எடுக்கக் கூடியதாக இருக்கும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியை எடுத்துக்கொண்டால், தகவல் தருமாறு மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
ஆனால் பல்வேறு காரணங்களினால் அதுதொடர்பான தகவல்கள் வெளியில் வரவில்லை.
இருந்தபோதும் மனித எச்சங்கள் தொடர்பான விபரங்கள் அறிக்கையாக நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியை பொருத்தவரையில் கார்பனேடிங் என்று சொல்லப்படும் காலக்கணிப்பை பார்ப்பதற்கான ஒரு யுக்தி மாத்திரமே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கொழும்பு, சம்பூர், மாத்தளை போன்ற மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறோம் என்றும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் குழு உறுப்பினர் யோகராஜா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குற்றவியல் தொடர்பான நீதி விசாரணை பொறிமுறைகளில் தலையிடுவதற்கான அதிகாரம் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்துக்கு இல்லை.
காணாமல் போனவர்களுக்கு என்னவானது என்பதை மாத்திரமே ஆராய முடியும்.
இதுவரையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் 23,352 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் குழு உறுப்பினர் யோகராஜா தெரிவித்துள்ளார்.



