காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தூதுவரிடம் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

இலங்கையில் தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் (ICRC) தூதுக்குழுவின் தலைவர் ஏஞ்சலிக் அப்பெய்ரூக்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்த மாத்திரத்தில் அதன் மனிதாபிமானத் தாக்கங்கள் முடிவுக்கு வருவதில்லை எனச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, தமது அன்புக்குரியவர்கள் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இனம், மதம், பிராந்தியம் அல்லது அரசியல் பின்னணி சார்ந்த பாராபட்சங்களின்றி மரியாதை, கருணை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய மனிதாபிமானத் தேவைகளுக்குத் தொழில்முறைசார் மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் பதிலளிக்கக்கூடிய நம்பகமான தேசிய நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துவதே பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காணாமல் போனோர் குறித்த தகவல்களைக் கண்டறியும் நடவடிக்கைகளுக்காகச் சட்ட மருத்துவத் துறையின் திறன்களை வலுப்படுத்துவதோடு, சர்வதேச நிபுணத்துவத்தின் மூலம் பெறக்கூடிய உதவிகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஆக்கபூர்வமாகத் தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.