சம்பள உயர்வு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் தமது நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இன்று (23) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி, வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

முன்பள்ளி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வை வழங்குவதுடன், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பாடசாலைகளை நடத்துவதற்குத் தாம் செல்லப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.