அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான எப்.பி.ஐ. அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு மீண்டும் விசேட விசாரணைகளுக்காக வருகை தந்திருப் பது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர் பான விசாரணைகளுக்குப் பின்னர் குறித்த குழு இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
அமெரிக்காவின் நோர்த் கரோலினா மாநிலத்தின் சார்லோட் களப் பணியகத்தைச் சேர்ந்த எப்.பி.ஐ.யின் விசேட நிபுணர்கள் குழுவொன்று கடந்த வாரம் கொழும்புக்கு வருகை தந்து, இலங்கைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளது.
இதனை வெறுமே அமெரிக்காவின் சாதாரண இருதரப்பு ஒத்துழைப்பாக அன்றி, இலங்கையை மையமா கக் கொண்டு இயங்கும் நாடுகடந்த இணையவழி மோசடி வலையமைப்புகளை வேரறுக்கும் ஒரு தீர்க்கமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரிலேயே இந்தக் குழு கொழும்புக்கு வருகை தந்திருந்தாலும், இந்தக் குழுவின் விசாரணைப் பரப்பு அமெரிக்காவின் தேசிய மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
ஒருபுறம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் நெருக்கடிகளுக்கு இலங்கை முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், மறுபுறம் தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா, மியன்மார் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் விசாரணைகள் இறுக்கமடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளி யேறிய நாடுகடந்த இணையவழி மோசடிக் கும்பல்கள் இலங்கையைத் தமது புதிய கேந்திர நிலையமாக மாற்றியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்குள் மாத்திரம் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சீனப் பிரஜைகள் என்பதுடன், வியட்நாம், இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குகின்றனர்.
கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, இராஜகிரிய மற்றும் கரையோர சுற்றுலாப் பிரதேசங்களான ஹிக் கடுவை, அளுத்கம, கல்பிட்டி, மிதிகம, தலல்ல உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு விடுதிகளையும் பலமாடிக் கட்டடங் களையும் பல மில்லியன் ரூபா வாடகைக்குப் பெற்று, வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்களின் உதவியுடன் இவர்கள் பாரிய சைபர் மோசடி நிலையங்களை நடத்தி வந்துள்ளனர்.
இந்த மோசடிக் கும்பல்கள் இலங்கையைத் தமது பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்திய போதிலும், இவர்களின் பிரதான இலக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களாகவே இருந்துள்ளனர்.
இலங்கையில் உள்ளூர் மக்களை இலக்கு வைத் தால் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், அவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய குடிமக்களைக் குறிவைத்துச் செயற்பட்டுள்ளனர்.
குறிப்பாக, காதல் வலையில் வீழ்த்தி நம்பிக் கையை ஏற்படுத்திய பின்னர் முதலீடுகளைப் பெற்று ஏமாற்றும் ‘பிக் புட்சரிங்’ மோசடிகள், போலி பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டுச் செயலிகள் ஊடாகப் பல பில்லியன் டொலர்களை இக்கும்பல்கள் கொள்ளை யடித்துள்ளன.
நீர்கொழும்பு மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதற்கான வழிகாட்டிக் குறிப்புகள், போலி அடையாள அட்டைகள், வெளிநாட்டு வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ‘பைனான்ஸ்’ ஊடாக நிதியை கிரிப்டோகரன்சியாக மாற்றிய தடயங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியிலேயே அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பின் சார்லோட் களப் பணியகம் இலங்கையில் குறித்த வலையமைப்பை இலக்கு வைத்து நேரடியாகக் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா முழுவதும் 55 களப் பணியகங்களைக் கொண்டுள்ள எப்.பி.ஐ., வெளிநாடுகளில் இருந்து நடத்தப் படும் இணையவழி மோசடிகளை விசாரிக்கும்போது, எந்தப் பணியகத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகமான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அல்லது எந்த அலுவலகத்தில் முதல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த அலுவலகத்திடமே சர்வதேச விசாரணைப் பொறுப்பை ஒப்படைக்கும்.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கி மற்றும் நிதி மையமாக விளங்கும் சார்லோட் நகரில் பாரிய வங்கிகளின் தலைமையகங்கள் அமைந்துள்ளன.
இலங்கையிலிருந்து இயங்கும் மோசடி மையங்க ளால் நோர்த் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமக்களும் அங்குள்ள வங்கிகளும் பாரிய நிதி இழப்புகளைச் சந்தித்தமையாலேயே, பாரிய நிதி மோசடிகள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சார்லோட் பணியகம் இப்பொறுப்பை ஏற்றுள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் வெளியிட்ட அறிக்கையிலும், வெளிநாடுகளில் இயங்கும் குற்றக் கும்பல்கள் பல பில்லியன் டொலர்களைத் திருடி வருவதாகவும், அமெரிக்கக் குடிமக்களை நிதிச் சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சர்வதேசச் சட்ட அமுலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து தொடர்ந்து செயற்படுவோம் எனவும் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில், இலங்கைப் பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த சைபர் மோசடிகளை முறியடிப்பதில் பாரிய கட்டமைப்பு, வளப்பற்றாக்குறை மற்றும் சட்ட ரீதியான சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
ஒவ்வொரு சுற்றிவளைப்பின் போதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கைப்பற்றப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தையும் பகுப்பாய்வு செய்வதற்கான போதிய தொழில்நுட்ப வளங்களோ, அரச இரசாயனப் பகுப்பாய் வாளர் திணைக்களத்தின் விரைவான ஒத்துழைப்போ இலங்கை அதிகாரிகளிடம் இல்லை.
கைப்பற்றப்படும் கருவிகளில் உள்ள தரவுகளைப் பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் உரிமங்களும் மனித உரிமை மற்றும் தனியுரிமைக் காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், சீன மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்களுக் குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சந்தேகநபர்க ளிடம் வாக்குமூலங்களைப் பெறுவதிலும் பாரிய தாமதம் ஏற்படுகிறது.
மேலும், சுற்றிவளைப்புகளின் போது மெய்நிகர் சேவையகங்கள் தொலைவிலிருந்து அணைக்கப்படுவதா லும், கடவுச்சொற்கள் வழங்கப்படாததாலும் தடயங்களைத் திரட்டுவது கடினமாகிறது.
சட்ட ரீதியான சிக்கல்களும் விசாரணைகளுக்குப் பெரும் தடையாக உள்ளன. 2007 ஆம் ஆண்டின் கணினி குற்றச் சட்டம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதில் உள்ள சட்ட வியாக்கியானச் சிக்கல்கள் காரணமாக, இதுவரை ஒரு சைபர் மோசடி வழக்கைக் கூட நீதிமன்றத்தில் நிரூபித்துத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
மாறாக, கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படுவதுடன் மட்டுமே நடவடிக்கைகள் முடிவுக்கு வருகின்றன.
இராஜகிரிய போன்ற இடங்களில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை களிடம் பொலிஸ் அதிகாரிகளே இலஞ்சம் பெற்று கடவுச் சீட்டுகளை விடுவித்த குற்றச்சாட்டுகளும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய பலவீனங்களை நிவர்த்தி செய்யும் முகமாகவே, எப்.பி.ஐ. அதிகாரிகள் இலங்கைப் புலனாய்
வாளர்களுக்கு டிஜிட்டல் தடயவியல், புலனாய்வு நுட்பங்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல் மற்றும் வலுவான வழக்குகளைக் கட்டமைக்கும் முறைமைகள் குறித்து ஆழமான பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
அத்துடன், சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட சில முக்கிய இலத்திரனியல் கருவிகளை மேலதிகப் பகுப்பாய்வுக்காக தாய்லாந்திலுள்ள எப்.பி.ஐ. மற்றும் ரோயல் தாய் பொலிஸ் கூட்டு மையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இது வெறுமனே ஒரு வார காலப் பயணத்துடன் நின்றுவிடாமல், இலங்கை அதிகாரிகளின் புலனாய்வுத் திறனை நிரந்தரமாக வலுப்படுத்தும் நீண்டகாலக் கூட்டாண் மையின் ஆரம்பமாக அமைந்துள்ளது.
இவ்விடயத்தில் பூகோள அரசியல் கோணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. சீன நீதிமன்றங்களில் 2019 முதல் 2026 வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகள் ஊடாகவும், கொழும்பில் இடம்பெற்ற சுற்றி வளைப்புகள் ஊடாகவும் இலங்கையில் இயங்கும் மோசடி வலையமைப்புகளின் பின்னணியில் சீனக் குற்றக் கும்பல்களின் ஆதிக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக, கொழும்பு துறைமுக நகரில் இணைய மோசடிக் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் இடம் பெற்ற கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் சீன அரசாங்கமும் விழிப்படைந்துள்ளது.
வெளிநாடுகளில் சீனப் பிரஜைகள் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவது சீனாவின் சர்வதேச நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால், கூட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பீஜிங் முன்வந்துள் ளது.
ஏற்கனவே நீர்கொழும்பு ஹோட்டல் சுற்றிவளைப் பின் போது சீனப் பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு வந்து தடயங்களைப் பிரித்தெடுக்க உதவியிருந்தது. எவ் வாறாயினும், தற்போதைய கட்டத்தில் சீனாவின் உதவியை விட அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிபுணத்துவத்தைப் பெறு வதற்கே இலங்கை முன்னுரிமை அளித்துள்ளது.
எப்.பி.ஐ.யின் இந்த வருகையானது, இலங்கையைப் புவிசார் அரசியல் தளமாகப் பயன்படுத்தி சீனாவை வேவு பார்க்கும் நகர்வாகக் கருதப்பட முடியாதென இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாறாக, இலங்கைக்குள் ஏற்கனவே ஊடுருவியுள்ள சர்வதேச சைபர் மோசடி வலையமைப்புகளை முறியடிக் கவும், அமெரிக்க மற்றும் இலங்கை மக்களை நிதி மோசடிகளில் இருந்து பாதுகாக்கவுமே இந்த ஒத்துழைப்பு முன்னெடுக்கப்படுகிறது.
ஆனாலும், எப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்த நீண்டகாலப் பங்காளித்துவமும், புலனாய்வுப் பகிர்வும் தனியே சைபர் மோசடிகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுமா அல்லது பிராந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.



