ஜனாதிபதியின் நாடாளுமன்ற சிம்மாசன உரை குறித்து தமிழ்க் கட்சிகள் கடும் ஏமாற்றம்

தமிழ்க் கட்சிகள் கடும் ஏமாற்றம்ஜனாதிபதியின் நாடாளுமன்ற சிம்மாசன உரை குறித்து தமிழ்க் கட்சிகள் கடும் ஏமாற்றம்: நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நிகழ்த்திய உரை தமிழ்க் கட்சிகளுக்குக் கடும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது.

இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உரையின் போது ஜனாதிபதி தமது கருத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவை தொடர்பில் ஜனாதிபதி எதனையும் தெரிவிக்கவில்லை.

பொருளாதார விடயங்கள் தொடர்பாகவே அவர் முக்கியமாக கவனம் செலுத்தினார்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும் வருவதற்கு கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எனது ஆட்சியில் மனித உரிமை மீறலுக்கு இடமில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் இலாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்” எனத் தெரிவித்தார்.