“என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்

தாயின் உருக்கமான வேண்டுகோள்

பாலநாதன் சதீஸ்

என்ரை கடைசி காலத்திலாவது பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன்.

தாயின் உருக்கமான வேண்டுகோள்: உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த போது பலர் காணாமலாக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும்  முகவரியில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தம் உறவுகளைத் தொலைத்து விட்டு காணாமல் போன  உறவுகளைத் தேடி அலைந்து  கொண்டிருக் கிறார்கள் பலர், சிலர் தம் உறவுகைளைத் தேடியே இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை.

காணாமல் போன உறவுகள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.  வவுனியா நகரில் சிறிய கொட்டகை அமைத்து  இரவு, பகல் பாராது  தம் உறவுகளை மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து போராடி வருகின்றாரகள். அந்த போராட்டப் பந்தலில்  இராணுவம் தன் கண் முன்னே பிடித்து சென்ற  தன் மகனைத் தேடிலையும் அன்னையும், தன் மகனின் வரவுக்காக போராட்டப் பந்தலிலே காத்திருக்கின்றார். அந்த அன்னையின் நிலையை சொல்கின்றார் சற்று பொறுமையுடன்  வாசித்துப் பாருங்கள் அந்த அன்னையின் வலியை.

தாயின் உருக்கமான வேண்டுகோள்எனது பெயர் இராசதுரை தேவி. நாங்கள் மதியாமடு, புளியங்குளத்தில் வசித்து வருகின்றோம் . எனது கணவன்  செபமாலை இராசதுரை அவர் சுகயீனம் காரணமாக 2021.07.09 அன்று இறந்திட்டார். எனக்கு ஐந்து பிள்ளைகள் திருமணம் செய்திட்டினம். கடைசி மகள் என்னோடதான் இருக்கிறா. என்ரை மகன் இராசதுரை விஜி. இவர் தான் காணாமல் போனவர் இவரை எங்கு தேடியும் எங்களால் கண்டுபிடிக்க முடியலை. என்ரை பிள்ளை எப்பிடி இருக்கிறான் எண்டும்  தெரியலை.

நாங்கள் இறுதி யுத்த நேரம் மதியாமடுவிலிருந்து வவுனியாவிற்கு செல்ல முடியாமல் இடம்பெயர்ந்து  முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தான் இருந்தனாங்கள்.

2009 ஆம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நேரம் எல்லாரும் இடம் பெயர்ந்து அரச கட்டுபாட்டுக்கும் தஞ்சம் தேடி வரும்போது 2009 ம் ஆண்டு 02ஆம் மாதம் 24 ம் திகதி மாலை 3.30 மணியளவில் இராணுவத்தினர் என்ரை மகனை எங்கட கண்ணுக்கு முன்னால் முள்ளிவாய்காலில் பிடிச்சவங்கள். அண்டுதான் என்ரை பிள்ளைய கடசியா பார்த்தம். பிறகு அவனுக்கு என்ன நடந்தது எண்டு இதுவரை தெரியலை.

பின்னர் முள்ளிவாய்காலில் இருந்து எங்களை இராணுவம் பேருந்து ஒன்றில் ஏற்றிக்கொண்டு வந்து வவுனியா செட்டிக்குளம் இராமநாதன் முகாமில் விட்டாங்கள். அங்க ஒரு வருஷமாக இருந்தனாங்கள். அங்க இருக்கும் போது என்ரை பிள்ளை வருவான் எண்டு எதிர்பார்த்தன். ஆனால் கடைசி வரை வரவே இல்லை. பின்னர் 2011ல் எங்கள முகாமில் இருந்து மீண்டும் எங்கட சொந்த இடத்துக்கு மீள் குடியமர்த்தினவங்கள்.

பின்னர் என்ரை பிள்ளையைத் தேடினம். கண்டுபிடிக்க முடியேலை. அதன் பின்னர் ரெட் குறோஸ், ஜனாதிபதி ஆணைக்குழு, வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வவுனியா என எல்லா இடமும் முறைப்பாடு செய்தனான். எல்லாரும் மகனை கண்டுபிடிச்சு தாறாம் எண்டவை.  ஆனால் யாருமே எந்த பதிலும் சொல்லேல்ல.

இப்ப என்ரை கணவரும் இல்லை. எனக்கும் வயது போட்டுது. என்ரை மகளுக்கும் இன்னும் நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்கேலை. என்ரை பிள்ளை வந்தான் எண்டாலும் அம்மாவையும், தங்கச்சியையும் உழைச்சுப் பாப்பான். இப்ப என்ரை பிள்ளை எங்க இருக்கிறான் எண்டு கூட  எங்களால கண்டுபிடிக்க முடியலை.

தாயின் உருக்கமான வேண்டுகோள்என்ரை பிள்ளைய இராணுவம் பிடிச்சுக் கொண்டு போகேக்க 22 வயது அவனுக்கு எதுவுமே தெரியாது. என்ரை பிள்ளை அப்பாவி. எந்த குற்றமுமே செய்யலை. என்ரை பிள்ளைய இராணுவம் பிடிச்சு  இப்போ 12 வருஷம் போயிட்டுது.  என்ரை மகனுக்கு இப்போது 34 வயதாகிட்டுது. எங்க என்ன செய்றானோ தெரியலை. இப்போ எனக்கு 66 வயது என்ரை கடைசி காலத்திலாவது என்ரை பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன். எப்பிடியாவது என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ!..

எல்லா இடமும் முறைப்பாடு செய்தும் எந்த தகவலும் இல்லை. அதால வவுனியாவில் காணாமல் போன உறவினர்களால் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலிற்குப் போய் ஒவ்வொரு போராட்டத்திற்கும் போறனான். முதல் கணவரும் இடைக்கிடை எனக்கு போக முடியாத  சந்தர்ப்பங்களில் போராட்டத்திற்கு அவர் போறவர். இப்போ அவரும் வருத்தத்தால இறந்துவிட்டார். ஒரு மகளை கரைசேர்க்க வேண்டிய நிலையில் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றேன். மகனை தேடி அலைவதோ, மகளை கரைசேர்க போராடுவதோ என தெரியாத நிலையில் தான் இருக்கிறன்.

பிள்ளைய தொலைச்சிட்டு தேடிக்கொண்டிருக்கிற எங்கட வலியை யாருமே கண்டு கொள்ளேல்லை. பெத்த பிள்ளைய தொலைச்ச வலி பெத்தவளுக்குத்தான் தெரியும்.  எப்பிடியாவது என்ரை பிள்ளைய மீட்டுத் தாங்கோ!”

என மகனைத் தொலைத்த அந்த  அன்னை கூறிய ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பில்லாதது. தான் பட்ட வலியை அந்த அம்மா கூறும் போது அந்த அம்மாவின் நிலையை எப்படி சொல்வது. இப்படி எத்தனை பெற்றோர் ஆசையாக பெற்றெடுத்த  தம் பிள்ளைகளைத் தொலைத்து விட்டு இரவுபகல் பாராது வீதிகளிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி கிட்டுமா?

Tamil News