இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 165 ஆசிரியர் தலையங்கம்

ஒரு நாடு ஒரு சட்டத்திலிருந்தும் –  சீன இந்திய பனிப்போரிலிருந்தும்  ஈழமக்கள் காக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள். ஈழத்தமிழர்கள் 2009ஆம் ஆண்டில் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற அறிவிப்புடன் தாங்கள் மீளவும் சனநாயக வழியில் தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலையை அடைந்தனர். அந்த வகையில், சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் சனநாயகப் போராட்டம் இந்தத் தைப்பிறப்புடன் 13வது ஆண்டுக்குள் பயணிக்கத் தொடங்குகிறது. இந்நேரத்தில் கடந்த 12 ஆண்டுகளிலும் ஈழத்தமிழ் மக்கள் எந்த அளவுக்கு தங்களின் சனநாயகப் போராட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என்ற மீளாய்வை ஒவ்வொரு ஈழத்தமிழரும் சிந்திக்க வேண்டும். சிந்திக்கின்ற போது பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பதுதான் தெளிவான பதிலாக உள்ளது. அப்படியானால், இதற்கான காரணம் என்ன?

முதலில் தாயகத்தை எடுத்தால், எந்தச் சிறிலங்கா அரசு ஈழத்தமிழின அழிப்பையே அரசியற் கொள்கையாகவும், ஈழத் தமிழினத்துடைப்பையே அரசியற் கோட்பாடாகவும், பண்பாட்டு இனஅழிப்பையே ஈழத்தமிழர்களின் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் உத்தியாகவும் கையாள்கிறதோ, அந்த அரசு உலக அரசியலில் தன்னை சனநாயக அரசாகத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. ஆனால் அங்குள்ள ஈழத்தமிழ்த் தலைமைகளால் இன்று வரை இவற்றுக்கான சான்றாதராங்களுடனான அறிக்கைகளையோ அல்லது இவை குறித்த சான்றாரதார மனுக்களையோ உலக நாடுகளுக்கும், உலக அமைப்புக்களுக்கும் அனுப்ப முடியாமல், இன்றும் ஒரு பொதுவான கோரிக்கையைக் கூட உருவாக்க முடியாதிருப்பதன் காரணம் என்ன? ஆனால் ஈழத்தமிழ்த் தலைமைகள் சாதாரணமானவர்கள் அல்ல; சட்டத்திலும் கல்வியிலும் நிதியிலும் மதியிலும் பலம் பொருந்தியவர்களாகவே உள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், யார் யாரை எல்லாம் சிறிலங்காவின் உயர் நீதிமன்றங்கள் கிரிமினல் குற்றவாளிகளாகக் கண்டு தண்டனை விதித்ததோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பு விலக்களித்து, விடுதலை செய்து, உயர் பதவி கொடுக்கும் ஒரு ஜனாதிபதியாக இன்றைய சிறிலங்காவின் ஜனாதிபதி செயற்படுகிறார் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையக ஆணையாளர் கடந்த ஆண்டிலும்,  மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த 2022ஆம் ஆண்டு அதன் சிறிலங்கா குறித்த ஆண்டறிக்கையிலும், இன்னும் அனைத்துலக மன்னிப்புச் சபை பல தடவைகளிலும் சுட்டிக்காட்டியும், அதனை புலம்பதிந்த தமிழர்களால் உலக நாடுகள், உலக அமைப்புக்கள், உலக மக்கள் முன் பரப்புரைப்படுத்த இயலாதிருப்பதேன்?

ஆனால் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் அரசியல் புகலிடம் கோரி, இன்று அந்த நாடுகளின் குடிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பதிந்த ஈழத்தமிழர்கள், உலகில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பலம்படைத்த சமூகமாக உள்ளனர். இப்படிப் பலவிதத்திலும் ஆற்றலுள்ள  இவர்களால், ஏன் தங்கள் கண் எதிரே நடந்த ஒரு இனஅழிப்பின் வரலாற்றை உலகின் முன் உண்மையாகவும், நேர்மையாகவும் கட்டமைக்க 12 ஆண்டுகளாக முடியவில்லை.

இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியல் செயற்திட்டங்களால் பாதிக்கப்படும் ஈழமக்களுக்கான பலம் பொருந்திய ஆதரவுக் கட்டமைப்பை இவர்களால் ஏன் செயற்படுத்த முடியவில்லை? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும், வெளிப்படையாகச் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டும் போன தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடும் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு சமூகநீதியைக் கூட இவர்களால் ஏன் உலகிடம் பெற்றுக் கொடுக்க இயலவில்லை.

இதற்கான விடையாகத் தாயகத்திலும் சரி, புலத்திலும் சரி ஒரே ஒரு விடைதான் உண்டு. ஒருமைப்பாடுதான் சனநாயகத்தின் வழியான போராடலுக்கு முன் நிபந்தனை என்பதே அந்த விடை. அது ஈழத்தமிழரிடை இல்லாதிருப்பதே அனைத்துக்கும் அடிப்படைச் சிக்கல். இந்த ஒருமைப்பாடின்மை சாதியம், மத அடிப்படைவாதம், பிரதேச வேறுபாடு என்கிற முத்தளத்தில் ஈழத்தமிழர்களிடை உறுதி பெற்றுள்ளது. இது உள்மனம் சார்ந்த கட்டமைப்பு என்பதால், இதனை எந்தப் புறநிலை மாற்றத்தாலும் இல்லாதொழிக்க இயலாதுள்ளது.

இதனால் அறிவார்ந்த அணுகுமுறையில் தமிழருக்குச் சொந்தமான அத்தனையும் மீள் உற்பத்தி செய்யப்பட்டாலே ஒருமைப்பாடு என்பது மீளவும் ஈழத்தமிழரிடை அவர்களைப் பாதுகாக்கின்ற ஆற்றலாக கட்டியெழுப்பப்படலாம்.

இதற்கு சிந்தித்தல் சீரமைக்கப்பட வேண்டும். சிந்திக்கப் பழக்குவது மொழி; அது வெறுமனே தொடர்பாடல் கருவி அல்ல. எனவே தமிழில் சிந்திக்கப்பழக்க வேண்டும். சரியாகச் சிந்திப்பவனாலேயே மனதுக்கண் மாசில்லானாய் வாழ முடியும். உண்மை என்பதே அறம் என்பதையும், கருணை என்பதே ஒழுக்கம் என்பதையும்  உயிரின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி தங்கிவாழாத வாழ்வினை உயிர் வாழ்வதற்காக அதன் அறியாமையும் வறுமையும் நீக்க உழைப்பதே தவம் என்பதையும் மக்களிடை உணர்த்திட வேண்டும். இவற்றினை நடைமுறைப்படுத்த உலகெங்கும் உள்ள தமிழ் புத்திஜீவிகளின் இணைப்பும், சமூக மூலதனங்களை வழங்க வல்லாரின் பிணைப்பும் ஒருங்கு சேர்க்கப்பட வேண்டும்.

தமிழருக்கான இலாப நோக்கற்ற ஊடகம், அதனை மையப்படுத்திய சமூகவலை. இவற்றை எல்லாம் செய்வதற்கான தமிழரின் பொது நிர்வாக அமைப்பு. திறனில் தனித்துவமாகவும் அதே வேளை கொள்கையில் கூட்டாகவும், சமுதாயத்தை இணைக்கும் ஆற்றலுள்ள அமைப்புக்கள் – சங்கங்கள் ஈழத்தமிழரின் இன்றைய தேவை. இவைகளைக் குறித்த சிந்தனைகள், கொள்கைகள், கோட்பாடுகள் வளர்க்கும் ஆண்டாக இவ்வாண்டை ஒவ்வொரு ஈழத்தமிழனும் தாயகத்திலும், புலத்திலும் செயற்பட்டால் நிச்சயம் ஈழமக்களை ஒருநாடு ஒருசட்டத்துள்ளும், எமது தாயக மண்ணில் தொடங்கியுள்ள சீன இந்திய பனிப் போரில் இருந்தும் காப்பாற்ற முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News