கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அவலநிலை – மட்டு.நகரான்

413 Views

உறவுகளின் அவலநிலை

மட்டு.நகரான்

உறவுகளின் அவலநிலை: கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து இலக்கு தொடர்ச்சியாக எழுதி வருகின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட காரணிகளால் தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதற்கான காரணிகளாக நாங்கள் பலவற்றினைக் கூறினாலும், இந்த நாட்டில் நடந்த யுத்தம் மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்ச்சியான முறுகல் நிலைகள்தான் கிழக்கில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

யுத்தமானது வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் வாழ்வியலில் தாக்கத்தினைச் செலுத்தினாலும், கிழக்கில் யுத்தத்திற்கும் மேலதிகமாக தமிழர்கள் மீது மாற்று இனங்களைக் கொண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் மிகப்பெரும் தாக்கத்தினைச் செலுத்தியுள்ளது.

இலங்கையைப் பொறுத்த மட்டில், யுத்தத்துக்குப் பின்னர் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவர்களின் பிரச்சினைகளை யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னருமான பாதிப்புகள் என வேறுபடுத்திப் பார்க்க முடியும். யுத்தத்தின் பின்னர் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் என்று பார்க்கும் போது, விசேடமாக கணவனை இழந்து, குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்களின் நிலை, மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.

உறவுகளின் அவலநிலைமேலும், யுத்தத்தினால் தமது கணவன்மாரை இழந்த பெண்கள், ஏனைய பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை விட, மாறுபட்ட நிலையில் உள்ளது. வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் பின்னர் பெண்கள் முகம் கொடுக்கும் சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சினைத் தாக்கங்கள், இரண்டு நிலைகளில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதில் முதலாவது, கணவனை இழந்து தனித்து, தனது குடும்பத்தைக் கொண்டு நடத்தும் போது, ஏற்படும் பிரச்சினைகளும், அதன் மூலம் அவர்களின் நேரடியான பாதிப்புகளும் ஆகும். இரண்டாவதாக, இதன் விளைவால் அவர்கள் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் ஆகும்.

கிழக்கில் இடம்பெற்ற இவ்வாறான நிலை காரணமாக அதிகளவான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், விசேட தேவையுடையவர்களும் உருவாக்கப்படும்  நிலையே காணப்படுகின்றது.

வடகிழக்கில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிழக்கில் அவ்வாறான போராட்டங்கள் நடைபெற வில்லை என்ற கவலை பலருக்கும் இருக்கின்றது.

இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற நிலையினை, தமிழ்தேசிய போராட்டத்தில் அதிகளவு தாங்கி நின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் இருந்து வருகின்றது. ஆனால் இது தொடர்பில் யாரும் கரிசனை செலுத்தாத காரணத்தினாலேயே கிழக்கில் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமானது முனைப்புப் பெறவில்லை யென்பது இங்குள்ளவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

உறவுகளின் அவலநிலைகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் இந்த கடத்தல், காணாமல் போதலுக்கு ட்படுத்தப்பட்ட மாகாணமாகயிருந்து வருகின்றது. ஆனால் 1990ஆம் ஆண்டு அதிகளவானோர் காணாமல் ஆக்கப்பட்டோர் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக கிழக்கு அடையாளப்படுத்தப்பட்டது. 10000க்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட மூன்று மாதங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இதேபோன்று 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம்ஆண்டு வரையிலும் பலர் கடத்தப்பட்டு, காணமல் ஆக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியே இன்று கிழக்கில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியப் பரப்பில் உள்ளவர்களோ, புலம்பெயர் தமிழ் தேசிய செயற்பாட்டு அமைப்புகளோ கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், சுமார் 40000 குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாக உள்ளன. இவர்களில் சுமார் 25000குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்  7500வி சேட தேவையுடையவர்களும் வாழ்கின்றனர்.

உறவுகளின் அவலநிலைஇவர்களில் கடந்த காலங்களில் யுத்தம் காரணமாகத் தமது கணவனை இழந்தவர் களும், விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்டவர்களுமே அதிகமானவர்களாக உள்ளனர். இவர்களின் தேவைப்பாடு களையோ, இவர்களுக்கான அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தோ சிந்திப்பவர்கள் யாரும் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தினைக் கொண்டு செல்வதற்கான ஒரு தொழிற்சாலையொன்றைக்கூட முதலீடு செய்வதற்கு யாரும் முன்வராத நிலையே காணப்படுகின்றது.

தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் தனது கணவனையோ, மகனையோ, சகோதரனையோ தேடிப் போராட சக்தியற்றவர்களாக கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோன்று முன்னாள் போராளிகள் என்ற வகையினரும் இன்று இந்த நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாகப் பெண் போராளிகளின் வாழ்க்கையின் வேதனையை அளவிடமுடியாத நிலையே உள்ளது.

அண்மையில் பெண் போராளி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்து. அவரது கணவனும் காணாமல் போயுள்ளார். முன்னர் ஜெயந்தன் படையணியில் போராளியாகயிருந்த பெண்ணின் கணவரும் ஒரு போராளியாகவேயிருந்த நிலையில், 2008ஆம் ஆண்டு பிள்ளையான் குழுவினால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்.

இவருக்கு ஒரேயொரு மகன். அவர் கண்கள் பார்வையற்ற நிலையில் விசேட தேவையுடையவராக இருக்கின்றார். பிறப்பில் இந்த குறைபாடுகள் இல்லாவிட்டாலும் இடையிலேயே அவருடைய மகனுக்குப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சொல்லொணாத் துயரங்களுடன் வாழ்ந்து வருவதாகவும், தனது கணவனை ஒரு புறமாக தேடியபோதும் தனது பிள்ளையின் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியான நிலையில் எந்தவித உதவியும் இன்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது மகனுக்கு எப்படியாவது முறையான கல்வியை வழங்கவேண்டும் என்று பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்ட நிலையில் கல்லடியில் உள்ள தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஊடாக தனது மகன் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து முறையான கற்கைகளை முன்னெடுத்த நிலையில் அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சையில் இலங்கையிலேயே காண்பார்வையற்ற மாணவர் ஒருவர் பெற்ற அதிகூடிய சித்தியைப்பெற்று, பிரதமர் மற்றும் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உறவுகளின் அவலநிலைஇவ்வாறான முன்னாள் போராளிகளின் குடும்பத்திற்கோ, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்திற்கோ எந்தவித உதவியும் செய்யப்படாமல் அல்லது அவர்களுக்கான தொழில் துறையினை ஏற்படுத்தாமல் அவர்கள் தொடர்பில் நாங்கள் எந்தப் போராட்டத்தினையும் செய்யமுடியாத நிலையிலேயே கிழக்கில் இருக்கின்றோம்.

இதேபோன்று பல்வேறு அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல், அரச படைகள் மற்றும் புலனாய்வுத்துறையினர் என பல்வேறு தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செயற்படும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் விசேட கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறானவற்றினை நாங்கள் கண்டுகொள்ளாமல் செல்லும் நிலையே இன்று கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. சிறியசிறிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் அடுத்தபடியாக தமது குடும்பத்தினையும் கவனத்திற்கொண்டு சமூகம் சார்ந்த தமது கோரிக்கையினையும் உரக்க சொல்லக்கூடிய சக்தி கிடைக்கும்.

Tamil News

4 COMMENTS

Leave a Reply