அகிலன்
இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக் களத்தில் இலங்கை எந்தளவுக்கு மாட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை சீன வெளிவிவகார அமைச்சரின் கடந்த வார இலங்கை விஜயத்தின் போது தெளிவாக உணர முடிந்தது. இந்தியாவின் அழுத்தங்களுக்காக, இலங்கை மீதான தமது பிடியை எந்தளவுக்கும் விட்டுக்கொடுக்கத் தாம் தயாராகவில்லை என்பதை இதன்போது சீன வெளிவிவகார அமைச்சர் உணர்த்தியிருக்கின்றார். இதற்கு புதுடில்லி எவ்வாறு எதிர்வினையாற்றப் போகின்றது என்பது தான் இப்போதுள்ள கேள்வி.
“இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்பு தலையிடத் தேவையில்லை” என்பதுதான் இலங்கைப் பயணத்தின் இறுதியில் அவர் சொன்ன கருத்து. மூன்றாவது தரப்பு யார் என்பதை அவர் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்காத போதிலும், அவர் இந்தியாவுக்குத்தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில், அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்தியா அச்சமடைந்திருப்பது இரகசியமான ஒன்றல்ல. அதனைக் கட்டுப்படுத்து வதற்கான சில திட்டங்களைப் புதுடில்லி முன்னெடுத்து வருவதும் தெரிந்ததுதான். இந்தப் பின்னணியில் தான் சீன வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் பாணியில் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
இதனையடுத்து இந்தத் திட்டத்தை சீனா கைவிடுகின்றது என வெளிவந்த செய்திகளை, யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் மறுத்திருந்தார். இந்தத் திட்டங்களைக் கைவிடும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், திட்டமிட்டபடி அதனைச் செயற்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு மேலாக மன்னாரிலிருந்து இராமர் பாலத்தின் இந்திய எல்லை வரை விரைவு படகு ஒன்றில் சென்று அவர் பார்வை யிட்டிருந்தார். இவை அனைத்தும் இந்தியாவைச் சீண்டும் செயற்பாடுகளாகவே அமைந்திருந்தன.
இந்தநிலையில்தான் இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர், “இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்புத் தலையிடத் தேவையில்லை” என்ற கருத்தை முன்வைத்திருந்தார். தனது 24 மணி நேர விஜயத்தின் போது, இரண்டு முக்கிய சந்திப்புக்களை சீன அமைச்சர் மேற்கொண்டிருந்தார். முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்தார். இரண்டாவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் சந்தித்தார். மாலையில் சீனாவினால் உருவாக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
முதலாதாக – “கோவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும்” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அதேபோன்று, “சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் போது சலுகை வர்த்தகக் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், கைத்தொழிற்றுறையைத் தடையின்றிச் சீராக நடத்த முடியும்” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்த சீன வெளிவிவகார அமைச்சர், எதிர்காலத்தில் அவை நிறைவேற்றப்படும் எனப் பதிலளித்தார்.
இந்த இரு விடயங்களும் இலங்கை மீதான சீனாவின் பிடி மேலும் இறுகுவதற்கான வாய்ப்புக்களைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. இந்தியாவுடனான தமது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கான தந்திரோபாயமாக கொழும்பு இதனைப் பயன்படுத்துகின்றதா என்ற கேள்வியும் உள்ளது.
ஆக, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை சீனாவின் பிடியிலிருந்து அது மீளமுடியாத ஒரு நிலையில் இருக்கின்றது என்பதைத்தான் சீன வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுக்கள் உணர்த்தியிருந்தன.
கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கும், வட்டியைக் கட்டுவதற்கும் இலங்கைக்கு நிதி அவசரம் தேவையாக இருக்கின்றது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தற்போது கொடுக்கவுள்ள நிதி உதவி இதற்காகத்தான் பயன்படுத்தப்படப்போகின்றது. அதாவது, சீனாவுக்கு வட்டியைக் கொடுப்பதற் காகவே சீனாவிடம் கடனைக் கேட்கும் நிலையில் இலங்கை உள்ளது என்பதுதான் பரிதாபகரமானது.
இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் தொடர்பில் அண்மைக்காலமாக இந்தியா நேரடியாகவும், மறைமுகமாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றது. தம்முடைய பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தல் என்ற வகையில் இந்தியத் தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு சீனா தயாராகவில்லை.
இலங்கையில் தம்மால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் அனைத்தும், வர்த்தக நோக்கத்தைக் கொண்டமைந்தவை என்பதே சீனாவின் உத்தியோகபூர்வ கருத்தாக இருக்கின்றது. உதாரணமாக – யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட காற்றாலை மின்சாரத் திட்டத்தில் சீன அரசாங்கத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும், சீனாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே அதனை ரென்டர் – கேள்விப் பத்திரம் மூலமாகப் பெற்றிருந்தது எனவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார்.
அவர் என்னதான் சொன்னாலும், இலங்கையில் ரென்டர் மூலமாக திட்டங்களைப் பெற்றுக்கொண்ட சீன நிறுவனங்கள் அனைத்துமே அந்த நாட்டு அரசின் ஆதரவுடன் செயற்படுபவை. அல்லது சீன அரசினால் உருவாக்கப்பட்டவை. ஆக, அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என சீன அரச தரப்பில் சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இவை செயற்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தப் பின்னணியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலுள்ள இலங்கையைப் பயன்படுத்திக் கொள்வதென்பது, சீனாவுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. ஏதோ ஒரு வகையில் இலங்கையை அது தனது வலைக்குள் வீழ்த்தி விட்டது என்பது தெரிகின்றது. அந்தப் பிடியை தொடர்ந்தும் பேணுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது சீன வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை போதுமானது.
அதேவேளையில், சீனாவின் திட்டங்களுக்குள்ள அச்சுறுத்தல் இந்தியாதான். அதற்குப் பதிலடியாகத்தான் “இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்பு தலையிடத் தேவையில்லை” என்ற கருத்து சீன வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப் பட்டிருக்கின்றது. இந்த ஒற்றை வசனத்துக்குள் நிறைய அர்த்தங்கள் உள்ளன. இதற்கு இந்தியா கொடுக்கப்போகும் எதிர்வினை என்ன?
[…] இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக் களத்தில் இலங்கை எந்தமுழுமையாக பார்வையிட… https://www.ilakku.org/ilakku-weekly-epaper-165-january-15-2022/ https://www.ilakku.org/ […]