இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக இந்திய – இலங்கை நட்புறவு வேலைத்திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள், உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அனுகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நன்கொடையை பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஜீவ் பண்டிதகே ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.




