– மட்டு.நகரான்
நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா: புலம்பெயர் தேசத்தவர்களுடன் பேசத் தயார் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர்களைத் தடை செய்தவர் தற்போது அவர்களைப் பேச அழைக்கிறார். அதாவது நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையின் தேவை போன்றவற்றால், அவர் கீழ் இறங்கிவர வேண்டிய நிலையிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இலக்கு வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம்.
கேள்வி:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்கள் சார்பாக அரசியலை முன்னெடுக்கின்ற ஒரு கட்சியாகும். பேரினவாத ஆட்சியாளர்கள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து வருகின்றார்கள் என்பது வரலாறாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாடுபடுகின்ற கட்சியாகும். அந்த வகையில், அந்த நோக்கத்திற்காக உழைக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள், புலம்பெயர் தமிழ் உறவுகள், இந்த சிந்தனைகளோடு இயங்குகின்ற புத்திஜீவிகள், சிவிலமைப்புகள் எல்லாவற்றுடனும் ஒற்றுமையாக இணைந்து, செயற்பட வேண்டும் என்ற பார்வை எமக்குண்டு.
அதேவேளை கட்சியின் கொள்கை, நோக்கத்திற்கு அப்பாற்பட்ட தன்னிச்சையான கருத்துகள், போக்குகள், தமிழர் தரப்பைப் பாதிக்கும் பலவீனப்படுத்தும் எந்தச் செயற்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடக் கூடாது என்பது எமது பார்வையாகும். சிலரது தன்முனைப்பான ஒவ்வாத கருத்துகளால் கட்சியோ மக்களோ பாதிப்படையக் கூடாது என்பது எமது எதிர்பார்ப்பாகும்
கேள்வி:
தமிழரசுக் கட்சியில் உள்ள சிலரால் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் ஓரங்கட்டப்படுகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகத் தன்மையான கட்சி என்ற வகையில், சகோதரக் கட்சிகளிடையே வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவது சகஜமாகும். ஆனால் தமிழ் மக்களின் நலன் சார்ந்து இயங்கும் போது, இப்படியான முரண்பாடுகள் வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகவே அமையும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் பொறுப்புணர்வுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
ஆனால் யாரும் யாரையும் ஓரங்கட்ட வேண்டிய தேவை இல்லை. வார்த்தைப் பிரயோகங்கள் முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதையும் காணமுடிகின்றது. பரஸ்பரம் தவறான வார்த்தைகளைக் கையாளாமல் இருப்பது இதற்கான பரிகாரமாக அமையும். அதேபோன்று எப்படியாவது தேர்தலில் வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காகத் தவறான வழிகளைக் கையாள்வதையும் தவிர்க்க வேண்டும். அதாவது விருப்பு வாக்குகளை அதிகரிப்பதற்காக மற்றையவர்களின் விருப்பு வாக்குகளைக் கணிப்பின் போது குறைக்கின்ற தவறான செயற்பாடுகள் நடைபெறக் கூடாது.
கேள்வி:
அண்மையில் ஜனாதிபதி நியூயோர்க்கில் தெரிவித்த கருத்துகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
அண்மையில் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அமெரிக்கவுக்குச் சென்ற போது, ஐக்கிய நாடுகள் செயலாயர் நாயகம் அன்டனியோ குடரஸ் அவர்களைச் சந்தித்து இருந்தார். அவரிடம் சில கருத்துக்களைக் கூறி இருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள், நஷ்ட ஈடுகள் வழங்குதல், புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், சிறையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களைப் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தல் போன்ற கருத்துக்களைக் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல் என்பதன் மூலமாக அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதை அப்போதைய பாதுகாப்புச் செயலரும், இப்போதைய ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார். ஏற்கனவே கோத்தாவின் யுத்தம் என்ற நூலின் மூலமாக யுத்தத்திற்கான முழு உரிமையைக் கோரிய தற்போதைய ஜனாதிபதி அவர்கள், கடத்தப்பட்டவர்கள், படையினரிடம் சரணடைந்தவர்கள் ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றால், கொன்றவர்கள் யாவர் என்பது வெளிப் படையாகத் தெரிகிறது.
புலம்பெயர் தேசத்தவர்களுடன் பேசத் தான் தயார் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர்களைத் தடை செய்த ஜனாதிபதி, தற்போது அவர்களைப் பேச அழைக்கிறார். அதாவது நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை போன்றவற்றால் ஜனாதிபதி இறங்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும் சிறையிலுள்ள விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை மன்னிப்பதன் மூலமாக, காணாமல் ஆக்கியதற்குக் காரணமானவர்களையும் ஜனாதிபதி கண்டு கொள்ளாமல் விடுவார். அதேபோல் காணாமல் ஆக்கப் பட்டவர்களது பிரச்சினையையும் முடித்து விட நினைக்கிறார். மொத்தத்தில் ஒரு பக்கச்சார்பான நிலைப்பாட்டில் ஜனாதிபதி பயணிக்கிறார் என்பது வெளிப்படுகிறது.
கேள்வி:
தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு, வட-கிழக்கில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமானதாகவுள்ளதா?அவ்வாறு இல்லாவிட்டால், இதனை சரியான முறையில் எவ்வாறு முன்கொண்டு செல்ல முடியும்?
பதில்:
வட-கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குத் தடைகளாக கொரோனாவின் தாக்கம், பயணத்தடை, அவசரகால நிலைமை, தற்போதைய அரசாங்கத்தின் கெடுபிடிகள் என்பன காணப்படுகின்றன. மேலும் மக்கள் சந்திப்பு, கூட்டங்கள் என்பவற்றை நேரடியாகச் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்தாலும் P2P என்கின்ற மக்கள் எழுச்சிச் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பாரிய பங்களிப்பைச் செய்தன. மெய்நிகர் தொழில் நுட்பம் மூலமான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
நில ஆக்கிரமிப்புக்கு எதிரான வழக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்கிறது. மேலும் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டங்களோடு மக்களுக்கான விழிப்புகளையும் எமது கட்சி செய்து வந்தது. அத்துடன் இளைஞர்களினதும், மகளிரதும் பங்குபற்றலையும் மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அத்துடன் புலத்திலும், புலத்திற்கு அப்பாலுமாக புத்திஜீவிகள் சபையினை அமைத்து, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, கட்சியினை வழிப்படுத்த வேண்டியுள்ளது. இதைவிட எமது கட்சிக்கென்று இணையத்தளம், தொலைக்காட்சி சேவை என்பனவும் மக்களை விழிப்பூட்டத் தேவையாகவுள்ளது. மேலும் ஊடகங்களுடன் நெருங்கிச் செயலாற்ற வேண்டியுள்ளது. இதை விடவும் மக்கள் நலன் சார்ந்த சிரமதானப் பணிகள், நிவாரணப் பணிகள் என்பவற்றையும் ஆற்றியாக வேண்டும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லும் போதுதான் அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைப்பதற்கான களம் அமையும். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுகும் போதே தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுகள் அதிகரிக்கும்.
கேள்வி:
கிழக்கில் அண்மைக் காலமாக தமிழர்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?
பதில்:
கிழக்கில் சேனைப் பயிர்ச் செய்கை, தொல்லியல் இடங்கள், சிங்களக் குடியேற்றம், வனவளத் திணைக்களக் காணி, மகாவலி அபிவிருத்திக்கான காணி, இராணுவப் பயிற்சிக்கான தளம் என்ற அடிப்படையில் காணி அபகரிப்புகள் நடை பெறுகின்றன. இதை விடவும் மண்வளம் முழுமையாகச் சூறையாடப் படுகின்றது.
மேலும் மதுபோதைக்கான நிலையங்கள் அதிகளவில் திறக்கப் பட்டுள்ளதால், இளைஞர்கள் குடிப்பழக்கத்தால் சீரழிக்கப்படுகின்றார்கள். இதைவிட கஞ்சா, குளிர்போதைகள், கசிப்புகள் போன்ற இன்னோரன்ன போதைப் பொருட்களும் கள்ளத் தனமாக வினியோகிக்கப்படுகின்றன. கலாசார சீரழிவுக்கான களியாட்டங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. இஸ்லாமிய மதமாற்றங்களும் சலுகைகள் மூலமாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறான தமிழர்க்கு எதிரிடையான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
கேள்வி:
கிழக்கில் தமிழ்த் தேசியத்தினை உறுதியான தளத்திற்குக் கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றீர்கள்?
பதில்:
முதலில் தமிழ்த் தேசியம் பற்றிய விழிப்புணர்வு புதிய தலைமுறைகள் மத்தியில் சாதுரியமான முறையில் கொண்டு செல்லப்பட வேண்டும். இளைஞர் மகளிரின் பங்குபற்றல்கள் அதிகரிக்கப்பட வேண்டும். நிபுணத்துவ ஆலோசனைக் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இயன்றவரை தீர்க்கப்பட வேண்டும். SWOT பகுப்பாய்வு மூலமாக கட்சி, தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் பலம், பலவீனம் வாய்ப்புகள், சவால்கள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப செயலாற்ற வேண்டும். கிராமிய மட்டம், வட்டார மட்டம் என்ற அடிப்படையில் கட்சி வலுப்படுத்தப்பட வேண்டும்.
கட்சிக்காக அர்ப்பணித்த மூத்த தலைவர்கள் கௌரவிக்கப்பட்டாக வேண்டும். பலமான நிதிக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புலத்தலைவர்கள், புலத்திற்கு அப்பாலுள்ள தலைவர்கள், பத்திஜீவிகள் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும். பல்வேறு தொழிற் சங்கங்கள் ஊடாகக் கட்சியை மேலும் பலப்படுத்த முடியும். தன்னிச்சையான சிலரது செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும். தமிழ்த்தரப்பை பலவீனப்படுத்தும் எந்தச் செயலையும் எவரும் செய்ய அனுமதிக்கக் கூடாது. பூகோள அரசியல் தந்திரோபாய அரசியல்களைத் தலைவர்கள் புரிந்து, அதற்கேற்ப காய்நகர்த்தி வெற்றி காண வேண்டும்.
- தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா
- AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
[…] நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா: புலம்பெயர் தேசத்தவர்களுடன் பேசத் தயார் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர்களைத் தடை செய்தவர் தற்போது அவர்களைப் பேச அழைக்கிறார். […]
[…] ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என… […]