தற்போதைய நெருக்கடிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கு வழியைத் தேடுகின்றது இலங்கை அரசு. தன்மீது அதிகரிக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அழுத்தங்களில் இருந்து தப்புவது ஒருபுறமிருக்க, அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து வெளியேற வழி தேடுகின்றது இலங்கை அரசு.
2018 ஆம் ஆண்டு 6 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு, தற்போது 2.8 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டதுடன், நிதி தொடர்பில் தரப்படுத்தும் அனைத்துலக நிறுவனமும், இலங்கையை சி.சி.சி (CCC) நிலைக்கு தரமிறக்கி உள்ளது. இந்த தரமிறக்கல் என்பது இலங்கை அரசுக்கு அனைத்துலக மட்டத்தில் கடன்முறிகளை பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், 50 விகித வட்டி உடைய கடன்களையே பெறமுடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் இருந்து மீள்வது என்றால், அனைத்துலக சந்தையில் நாட்டின் சொத்துக்களை அடைமானம் வைத்து கடன்களை பெறவேண்டும். அல்லது நட்பு நடுகளிடம் கையேந்த வேண்டும். இல்லையெனில் அனைத்துலக நாணய நிதியத்திடம் செல்லவேண்டும்.
அனைத்துலக நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பது என்பது இலங்கை அரசுக்கு இயலாத காரியம். ஏனெனில் உலகின் மனிதாபிமான விதிகள் மீறப்படும் நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளது. அதனை தான் இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதாவது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்படும் அல்லது பழிவாங்கப்படும் நாடாக இலங்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி (GSP Plus) வரிச்சலுகை தொடர்பில் ஆய்வு செய்யும் ஐரோப்பிய ஒன்றிய குழு ஒன்று இந்த வாரம் இலங்கைக்கு வந்துள்ளது. எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தங்கியிருக்கும் அந்த குழுவினர், இதய சுத்தியுடன் பணியாற்றினால் இந்த சலுகையும் பறிபோகும் நிலைதான் ஏற்படும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் வதைக்கப்படும் மக்களை காப்பாற்றுவதே இந்த குழுவின் நோக்கமாகும். ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு தமிழர் தரப்பு தனது பலத்தையும், ஆதரவுகளையும், ஆதாரங்களையும் வழங்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும், பிரதிநிதிகளும் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும், அனைத்துலக நியாயாதிக்க கொள்கைகள் உள்ளவாங்கப்படவில்லை எனவும் இந்த வாரம் பிரித்தானியாவின் பிறைற்றன் பகுதியில் இடம்பெற்ற பிரித்தானியாவின் தொழிற்கட்சிக்கான தமிழர்களின் கூட்டத்தில் பேசிய அதன் ஆசியாவுக்கான நிழல் அமைச்சர் ஸ்ரீபன் கினொக் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பலர் பேசுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்பது இவர்கள் எல்லோரிடமும் இருந்து ஒரு காத்திரமான செயற்பாட்டையே. தவிர பேச்சுக்களை அல்ல.
ஆனால் இலங்கை அரசை பொறுத்தவரையில், தன்னை பாதுகாப்பதற்கான அனைத்து வழிகளையும் அது தேடுகின்றது. அமெரிக்காவின் நிறுவனத்திற்கு எரிசக்தி நிறுவனத்தை வழங்கிய அரசு தற்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பிராந்திய கொள்கலன் கையாளும் பகுதியையும் இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
அண்மையில் அமெரிக்க, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா கூட்டமைப்பு உருவாகியதும், இந்தியாவுக்கு வழங்க மறுத்த அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை அமெரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு வழங்கியதும் இந்தியாவை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
எனவே தான் இலங்கை அரசின் கைகளை முறுக்கி உடன்பாட்டை நிறைவேற்றியுள்ளது இந்தியா, இந்த நிலையில் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஓக்டோபர் 2 ஆம் நாள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாள் பயணமாக வரும் அவர் இலங்கை அரச தலைவர் உட்பட பலரை சந்திக்கவுள்ளார்.
ஐ.நாவின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு சென்ற சமயம் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்த போதும் தற்போதைய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்களை நோக்கிய அழைப்பு
அதாவது தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசு உடனடியாக இரண்டு காய்களை நகர்த்தியுள்ளது. ஒன்று இந்தியா, மற்றையது புலம்பெயர் தமிழர்களை நோக்கிய அழைப்பு.
ஆனால் இந்த இரண்டும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான வழியே தவிர எம்மீதான கரிசனை அல்ல. ஒருவேளை இந்திய கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாலும் தமிழர் தரப்பில் அதனை கையாள்வதற்கான பலம் இல்லை.
பலமற்ற இந்த நிலையில் தான் புலம்பெயர் தேசத்தில் இருந்து பல குரல்கள் கோத்தபாயாவின் அழைப்புக்கள் தொடர்பில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இலங்கை அரசின் உள்ளார்ந்த நோக்கத்தை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
இலங்கை அரச தலைவர் பதவியேற்ற பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் தமிழத் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவில்லை, மேலும் கோவிட் நெருக்கடியை பயன்படுத்தி தமிழ் மக்களை தொடர்ந்து ஒடுக்கியும் வருகின்றது இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு இராணுவத் தளபதியை கேட்குமாறு பொய் பேசுகிறார் கோத்தபாயா.
மேலும் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என 300 இற்கு மேற்பட்டவர்களை தடை செய்துள்ளது இலங்கை அரசு. கடந்த மாதம் 13 ஆம் நாள் ஆற்றிய உரையில் அதனையும் குறிப்பிட்டுள்ளார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்.
அது மட்டுமல்லாது, தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். ஆனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது தீர்மானம் சொல்கின்றது நினைவாலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதில் வணக்கம் செலுத்துவது மக்களின் உரிமை என்று.
அதாவது பேச்சுக்களுக்கு சாதகமான எந்த விதமான புறச் சூழல்களையும் உருவாகாது தமிழ் மக்களை ஏமாற்ற இலங்கை அதிபர் விடுத்த அழைப்பை நம்புவதும், அதற்கு பரிகாரமாக தாம் வாழும் நாடுகளை இலங்கை அரசுக்கு உதவுமாறு கேட்பதும் தமிழ் இனத்தின் பிரதிநிதிகள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களின் அரசியல் பலவீனத்தையே காட்டுகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த குரல் கொடுப்பதும், இலங்கை அரசை அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து காப்பாற்ற காரணங்களைத் தேடுவதும், தமிழ் மக்களினதும், அவர்களின் தாயகப் பிரதேசத்தினதும் அழிவுக்கே வழிவகுக்குமே தவிர எந்தவிதமான நன்மையும் கிட்டப்போவதில்லை. இதனை குரல் கொடுப்பவர்கள் புரிந்து கொள்வதே அவர்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் உதவியாகும்.